கிறிஸ்தவ புண்ணியத்தின் பேரில்.

விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், புண்ணியங்கள்.

177. கிறிஸ்துவ புண்ணியம் ஆவதென்ன?

மனிதன் தேவ வரப்பிரசாதத்தால் ஏவப்பட்டு சர்வேசுரனுக்குப் பிரியமான கிரியைகளைச் செய்ய, அவனை தூண்டிவிடும் நற்குண பழக்கவழக்கமாம். 


178. அத்தியாவசியமான புண்ணியங்கள் எவை?

தேவசம்பந்தமான புண்ணியங்களாயிருக்கிற விசுவாசம், நம்பிக்கை. தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.


179. விசுவாசம் ஆவதென்ன?

திருச்சபை படிப்பிக்கிற வேதசத்தியங்களை எல்லாம், சர்வேசுரன் அறிவித்ததன் நிமித்தம், உண்மை என்று ஏற்றுக்கொள்ளச் செய்யும் மேலான புண்ணியமே விசுவாசம்.


180. சர்வேசுரன் திருச்சபைக்கு அறிவித்த வேதசத்தியங்களை ஏன் விசுவசிக்க வேண்டும்? 

ஏனென்றால் சர்வேசுரன் சத்திய சுரூபியாயிருக்கிற படியால் தானும் ஏமாறமாட்டார், நம்மையும் ஏமாற்றமாட்டார் என்பதினாலே தான்.


181. விசுவாச முயற்சியைச் சொல்லு

என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம், தேவரீர்தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென். 


182. விசுவாசத்துக்கு விரோதமான பாவங்கள் எவை?

பொய்யான மார்க்கங்களில் சேர்வது. வேதசத்தியங்களை நிராகரிப்பது, அவைகளை நம்பாமலும், கற்றுக்கொள்ளாமலும் இருப்பதும் ஆகிய இவைகள் தான்.


183. நம்பிக்கை ஆவதென்ன?

மோட்சபாக்கியத்தையும், அதைப்பெறுவதற்கு வேண்டிய தேவ வரப்பிரசாதங்களையும் சர்வேசுரன் நமக்குக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பி காத்திருக்கச் செய்யும் மேலான புண்ணியமே நம்பிக்கையாகும்.


184. நமது நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன?

சர்வேசுரன் நமக்கு கொடுத்த வாக்கும், யேசுநாதருடைய பேறுபலன்களுமே ஆதாரம்.


185 நம்பிக்கை முயற்சியை சொல்லு

என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்கு கொடுத்தபடியினால். யேசுநாதர்சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன் - ஆமென்.


186. நம்பிக்கைக்கு விரோதமான பாவங்கள் எவை?

அவ நம்பிக்கையும் மிஞ்சின நம்பிக்கையுமாம்.


187. நமது சொந்த முயற்சி இல்லாமலும், புண்ணியக் கிரிகை இல்லாமலும் மோட்சத்தை அடைவோம் என்று நம்பலாமோ? 

நம்பக் கூடாது, மோட்சத்தையடைவதற்கு நம்முடைய சுய முயற்சியும் தேவ வரப்பிரசாதத்தால் ஏவப்பட்ட புண்ணியக் கிரியையும் அவசியம்.