படங்கள், சுரூபங்கள், திருப்பண்டங்களின் வணக்கம்

130. திருச்சபையில் வழங்குகிற படம், சுரூபங்களையும், திருப்பண்டங் களையும் வணங்குகிறது விக்கிரக ஆராதனையோ?

அல்ல;  ஏனெனில், அவைகளை வணங்குவது, அவைகளால் குறிக்கப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்கள் முதலானவர்களின் பேரில் வைக்க வேண்டிய பக்தியின் தூண்டுதலொழிய விக்கிரக ஆராதனையல்ல.


1. அஞ்ஞானிகள் தங்கள் சிலைகளுக்குச் செலுத்துகிற வணக்கம், விக்கிரக ஆராதனையென்று சொல்ல வேண்டியிருக்கையில், கிறீஸ்தவர்கள் சுரூபங்களை வணங்கும்போது விக்கிரக ஆராதனை செய்கிறார்களென்று சொல்ல வேண்டாமா?

நிச்சயமாக இல்லை.  ஏனென்றால், அஞ்ஞானிகள் தங்கள் சிலைகளோடு தெய்வீகம் மெய்யாகவே சேர்ந்திருக்கிறதாக எண்ணி அவைகளைச் சுவாமியைப் போல் ஆராதித்துக் கும்பிடுகிறார்கள்.  ஆனால் கிறீஸ்தவர்களோ, அஞ்ஞானிகள் எண்ணுவதுபோல் அல்லாமல் சுரூபங்களில் யாதொரு தெய்வீகமும், யாதொரு விசேஷ வல்லமையுமில்லை என்றும், அவைகள் தாங்களே யாதொரு நன்மை உபகாரமும் செய்ய முடியாதென்றும் அறிந்து அவைகளை ஆராதித்துக் கும்பிடவே மாட்டார்கள்.


2. கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் படம் சுருபங்களை என்னவென்று நினைக்கிறார்கள்?

அரசருடைய சுரூபங்கள், தாய் தகப்பன் முதலியவர்களின் படங்கள் அவர்களுடைய வெறும் அடையாளமாயிருக்கிறது எப்படியோ, அப்படியே அர்ச்சியசிஷ்டவர்களுடைய படங்கள், சுரூபங்கள் அவர்களுடைய வெறும் அடையாளங்கள் என்று எண்ணி, கிறீஸ்தவர்கள் சர்வேசுரனையும், அர்ச்சியசிஷ்டவர்களையும் நினைப்பதற்காக அந்தச் சுரூபங்களைத் தங்கள் வீட்டிலும், கோவில்களிலும் வைக்கிறார்களே தவிர மற்றப்படியல்ல. ஆகவே, எவ்விதமாக அரசர் முதலியவர்களின் படங்களுக்கு நாம் செய்கிற சங்கை வணக்கம் அந்தப் படங்களுக்குச் செல்லாமல், படங்களால் குறிக்கப்பட்டவர்களைச் சாருமோ, அவ்விதமே சுரூபங்களுக்கு நாம் செய்கிற வணக்கம் உயிரும் வல்லமையுமற்ற அந்தச் சுரூபங்களுக்குச் செல்லாமல், மோட்சத்திலுள்ள சர்வேசுரனையும், அர்ச்சியசிஷ்டவர்களையுமே சாரும்.


3. சர்வேசுரன் சுரூபங்களைச் செய்யவும், வணங்கவும் கூடாதென்று பழைய ஏற்பாட்டில் விலக்கியிருக்கிறதில்லையா?

படம், சுரூபங்கள் இருக்கக் கூடாதென்று சர்வேசுரன் முற்றிலும் விலக்கவில்லை.  உள்ளபடி, இரண்டு கெருபீன் உருவங்களைச் செய்து, வாக்குத்தத்தப் பெட்டகம் என்னும் பேழையில் ஸ்தாபிக்கவும் (யாத். 25:18), தேவாலயத்தின் சுவர்களில் பற்பல உருவங்களை அமைத்து வைக்கவும் (3 அரசர் 6:29), வெண்கல சர்ப்பத்தைச் செய்யவும் (எண். 21:8), சர்வேசுரன் மோயீசனுக்குக் கற்பித்ததாகப் பழைய ஏற்பாட்டில் வாசித்துப் பார்க்கலாம்.  அஞ்ஞானிகளைப் போல் சுரூபங்களுக்கு ஆராதனை செலுத்தக் கூடாதென்றுதான் சர்வேசுரன் கற்பித்தாரேயன்றி, சுரூபங்களைச் செய்ய விலக்கம் செய்தவரல்ல.


சரித்திரம்

மோயீசன் காலத்தில் இஸ்ராயேலர் செய்த பாவ அக்கிரமங்களுக்கு ஆக்கினையாகக் கணக்கில்லாத பேர் அக்கினி சர்ப்பத்தின் கடியால் சாகும்படி சர்வேசுரன் சித்தமானார். மோயீசன் தேவ கட்டளையின்படி வெண்கலத்தால் ஒரு சர்ப்பம் செய்வித்துத் தமது கோலில் அதைத் தூக்கி வைத்து, அக்கினி சர்ப்பத்தால் தீண்டப் பட்டவர்கள் இந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்குவார்களேயாகில் குணப்படுவார்களென்று அறிவித்தார்.  அவ்வாறு சர்ப்பத்தால் கடியுண்டவர்கள் மேற்படி சுரூபத்தைக் கண்ணோக்கவே குணமடைந்தார்கள் (எண்ணா. 21:9).  அந்த வெண்கலச் சுரூபம் பாடுபட்ட சுரூபத்திற்கு அடையாளமென்று அறிக.


4. படங்கள், சுரூபங்களுக்குத் தகுந்த சங்கை வணக்கம் செலுத்து கிறதற்குக் காரணமென்ன?

படங்கள், சுரூபங்களுக்கு நாம் செய்யும் வணக்கம், அவைகளுக்குத்தானே செலுத்தாமல், அவற்றால் குறிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்குமுரிய விசேஷ வணக்கத்தைச் செலுத்துகிறோம்.


5. சுரூபங்களுக்குச் செய்ய வேண்டிய வணக்கமென்ன?

(1)  சேசுநாதர் சுவாமி சர்வேசுரனாயிருப்பதால், அவருடைய அர்ச். சிலுவைக்கு சாதாரண ஆராதனை பண்ண வேண்டியது.  அர்ச். சிலுவையானது, நமதாண்டவர் நமக்காக மரணமடைந்து, நம்மை இரட்சித்தாரென்று ஞாபகப்படுத்துகிறபடியால், அதை ஆராதிக்கிறது நியாயம். ஆனால் சேசுநாதர்சுவாமி அறையுண்டு தமது திரு இரத்தத்தால் நனைத்தருளிய மெய்யான சிலுவைக்கு விசேஷ ஆராதனை செய்ய முக்கியமான காரணமுண்டு.

(2)  தேவமாதாவின் சுரூபங்களுக்கு ஓர் சிருஷ்டிக்குச் செய்யக் கூடிய அதிகபட்சமான மேலான வணக்கம் செலுத்த வேண்டும்.

(3) மற்ற அர்ச்சியசிஷ்டவர்களின் சுரூபங்களுக்குச் சாதாரணமான சங்கை வணக்கம் காட்ட வேண்டும்.


6. பாடுபட்ட சுரூபம், படங்கள் வைத்துக் கொள்கிறது சரியா?

இவைகளை நம்மிடத்தில் வைத்துக் கொள்கிறது மிகவும் நல்லது.  ஏனென்றால், வேதத்தின் மட்டில் நமக்குள்ள நேசத்தையும், சங்கையையும் காட்டுவதற்கும், நம்மிடத்தில் பக்தியை மூட்டுவதற்கும் இவைகள் ஏற்ற சாதனங்கள்.


7. அர்ச்சியசிஷ்டவர்களுக்கு நிந்தை வருவிக்கும் எண்ணத்தோடாவது, பதிதரைப் போல் அர்ச்சியசிஷ்டவர்களின் வணக்கத்தைப் பற்றி இகழ்ச்சியாய்ச் சிந்தித்தாவது, அவர்களின் படம் சுரூபம் முதலியவைகளுக்குச் சங்கை செய்யாதிருப்பது பாவமா?

இது தேவத் துரோகம் என்னும் கனமான பாவமாகும்.


சரித்திரம்

சைப்ரஸ் என்னும் தீவிலுள்ள ஒரு தேவாலயத்தில் பலர் உத்தரவின்றிப் பிரவேசித்து, அவமரியாதையாய்ப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களில் ஒருவன் பீடத்திலுள்ள சுரூபத்தைக் காட்டி, “இச்சுரூபத்தால் என்ன பிரயோசனம்?” என்றான்.  அப்போது அருகாமையில் நின்றுகொண்டிருந்த கிறீஸ்தவன், “அந்தத் திருச் சுரூபத்தை வணங்குகிறவர்மேல் தேவ ஆசீர்வாதமும், அதை அவசங்கைப்படுத்து கிறவர்கள்மேல் தண்டனையும் வருவதே அதன் பிரயோசனம்” என்றான்.  அதற்கு அந்தத் துஷ்டன் தன் கையிலிருந்த ஈட்டியை நீட்டி, சுரூபத்தின் கண்ணைக் குத்தி, “இச்சுரூபத்தின் கண்ணைக் குத்துவதால் எனக்கு என்ன தண்டனை உண்டாகும் பார்க்கலாம்” என்ற அதே கணத்தில் என்ன அதிசயம்!  அந்தத் துஷ்டனுடைய கண்விழி கண்குழியினின்று கீழே விழுந்தது. (னி.மூ.னி. V. ஹிலி. 298).


8. திருப்பண்டம் ஆவதென்ன?

(1) அர்ச்சியசிஷ்டவர்களுடைய சரீரங்களும்,

(2) அவர்களுக்குச் சொந்தமாயிருந்த பொருட்களும்,

(3) அவர்களுடைய சரீரத்தைத் தொட்ட பொருட்களும்,

(4) வேதசாட்சிகளை வாதிக்கும்படி உபயோகிக்கப்பட்ட  ஆயுதங்களும் திருப்பண்டம் எனப்படும்.


9. கிறீஸ்துநாதரோடு சீவிக்கும் வேதசாட்சிகள், அர்ச்சியசிஷ்டவர்கள் முதலானவர்களுடைய பரிசுத்த சரீரங்களுக்கும் வணக்கம் செலுத்த வேண்டுமா?

ஆம்; வணக்கம் செலுத்த வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய சரீரங்கள் ஒரு காலத்தில் கிறீஸ்துநாதருடைய உயிருள்ள அவயவங்களாகவும், இஸ்பிரீத்துசாந்துவின் தேவாலயங்களாகவும் இருந்தன. மேலும் திவ்விய கர்த்தர் இந்தச் சரீரங்களை ஒரு நாள் உயிரோடு எழுப்பி இவற்றிற்கு நித்திய ஜீவியமும், உன்னத மகிமையும் அளித்தருளுவார். இதுவுமன்றி, அர்ச்சியசிஷ்ட பண்டங்கள் மூலமாய்ச் சர்வேசுரன் மனிதர்களுக்கு அநேக நன்மை சகாயங்களைப் புரிந்துவருகிறார்.


10. அர்ச்சியசிஷ்ட பண்டங்கள் மூலமாய்ச் சர்வேசுரன் மனிதருக்கு நன்மை சகாயங்களை சில சமயங்களில் புரிந்தருள்வார் என்பதற்கு அத்தாட்சி என்ன?

(1) பழைய ஏற்பாட்டில் புண்ணியவான்களுடைய சரீரத்தால் புதுமைகள் நடக்கும்படி சர்வேசுரன் சித்தமானாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம்.  இப்படியே தீர்க்கதரிசியான எலிசேயு அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையில் வேறொருவனுடைய பிரேதம் வைக்கப்பட செத்தவனுக்கு அந்தக் கணமே உயிர் வந்தது (4 அரசர். 13:21).

(2) புதிய ஏற்பாட்டிலும் அர்ச்சியசிஷ்டவர்களுடைய சரீரத்தாலும், வஸ்திரத்தாலும், இன்னும் அவர்களுக்குச் சொந்தமான வேறு பொருட்களாலும் அநேக புதுமைகள் நடந்தேறி வருகின்றன. அர்ச். இராயப்பருடைய நிழலால் வியாதியஸ்தர் சொஸ்தப்பட்டார்கள் (அப். நட. 5:15).  அர்ச். சின்னப்பருடைய வஸ்திரத்தால் நோயாளிகளும், பேய் பிடித்தவர்களும் குணப்பட்டார்கள் (அப். 19:12).


சரித்திரம்

ஹிப்போன் என்னும் பட்டணத்தின் கோவிலில் அர்ச். முடியப்பரின் திருப்பண்டம் மகா பூச்சியத்துடன் வணங்கப்பட்டு வந்தது. அவ்வூரானான பாசுஸ் என்பவனுடைய மகள் கனமான வியாதியால் பீடிக்கப்பட்டு வந்தபடியால், தகப்பன் கோவிலுக்குச் சென்று தன் குமாரத்தி குணப்படும்படி அர்ச்சியசிஷ்டவரைப் பார்த்து வேண்டிக் கொண்டிருக்கையில் அவனுடைய மகள் மரணமானாளென்று சிலர் அவனுக்கு அறிவித்தார்கள். அப்போது பாசுஸ் நம்பிக்கையைக் கைவிடாமல் அவன் முன்னதாகக் கோவிலுக்குக் கொண்டு வந்திருந்த தன் மகளின் வஸ்திரத்தால் அர்ச்சியசிஷ்ட பண்டத்தைத் தொட்டபின் அந்த வஸ்திரத்தைக் கொண்டுபோய் இறந்து போன தன் மகளின் பிரேதத்தின்மேல் போட்ட கணமே அவளுக்கு உயிர் உண்டாயிற்று என்று அர்ச். அகுஸ்தீன் எழுதி வைத்தார் (னி.மூ.னி. V. ஹிலி.305).