பொதுத் தீர்வை

117. (55) தனித்தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

பொதுத் தீர்வை உண்டு.


1. பொதுத் தீர்வை நடக்கும் என்று நாம் எப்படி அறிவோம்? 

(1) இது திருச்சபை போதிக்கும் விசுவாச சத்தியம்.

(2) அச்சத்தியத்தை தீர்க்கதரிசிகள் அறிவித்திருக் கிறார்கள் (இசை. 2:12, 13:6, 34:8; யோப். 1:15, 2:1; தானி. 7:9,10; ஆமோஸ். 5:18; அப்தி. 1:15; சொப். 1:7; சக். 14:1).

(3) மேலும் சேசுநாதர் பொதுத் தீர்வை நடக்கும் என்று சத்தியமாய்ச் சாதித்தார்.  “வானமும் பூமியும் ஒழிந்துபோம்.  என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது” (மத். 24:35; மாற். 13:31; லூக். 21:33).


2. பொதுத் தீர்வையில் சகல மனிதரும் நடுத்தீர்க்கப் படுவார்களா? 

நடுத்தீர்க்கப்படுவார்கள்.  “பூமியிலுள்ள சகல ஜாதி ஜனங்களும் புலம்பி... மனுமகன் வருவதைக் காண்பார்கள்” (மத்.24:30).  “சகல ஜாதி ஜனங்களும் அவர் முன்பாகக் கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்” (மத். 25:32) என்று சேசுநாதர் உறுதியாக் கூறினார்.  “நாமெல்லாரும் கிறீஸ்துநாதருடைய நியாயாசனத்திற்கு முன்பாக வெளியாக வேண்டியது” (2 கொரி. 5:10) என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார்.


3. பொதுத் தீர்வைக்கும் தனித்தீர்வைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 

தனித்தீர்வையில் நமது ஆத்துமம் மாத்திரம் இருந்து, விசாரணையும், தீர்ப்பும் இரகசியமாய் நடக்கும். பொதுத் தீர்வையிலோவெனில் நமது ஆத்துமமானது சரீரத்தோடு ஒன்றித்து, சகலருக்கு முன்பாகப் பிரசித்தமாய் விசாரித்துத் தீர்வையிடப்படும்.


4. பொதுத் தீர்வையில் செய்யப்படும் தீர்ப்பு, தனித்தீர்வையில் செய்யப்பட்ட தீர்ப்புக்கு வித்தியாசமாயிருக்குமா? 

நமதாண்டவர் பொதுத் தீர்வை நாளிலே, தாம் தனித் தீர்வையில் செய்த தீர்ப்பை உறுதிப்படுத்துவாரன்றி, வேறே வித்தியாசமான புதுத் தீர்மானம் செய்யவே மாட்டார். 


5. பொதுத் தீர்வையில் ஒவ்வொருவனுக்கு இடப்படும் தீர்ப்பு, தனித்தீர்வையில் இடப்பட்ட தீர்ப்புக்குச் சமானமாயிருக்க, பொதுத்தீர்வை நடக்க வேண்டுமென்று ஏன் சர்வேசுரன் திட்டம் பண்ணினார்? 

அதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

1-வது. சர்வேசுரனுடையவும், சேசுநாதருடையவும், நீதிமான்களுடையவும், மகிமையைப் பிரசித்தப்படுத்தவும்,

2-வது. கெட்டவர்கள் வெட்கப்படும்படியாகவும்,

3-வது. ஒவ்வொரு மனிதனும் சகலருக்கு முன்பாக சம்பாவனையோ அல்லது ஆக்கினையோ தன் சரீரத்திலும் ஆத்துமத்திலும் பெற்றுக் கொள்ளும்படியும் பொதுத் தீர்வை நடக்க வேணுமென்று சர்வேசுரன் சித்தமானார்.


6. எப்படிப் பொதுத் தீர்வை வழியாய்ச் சர்வேசுர னுடைய மகிமை பிரசித்தப்படுத்தப்படும்? 

அத்தீர்வையினால் சர்வேசுரனுடைய பராமரிப்பின் அளவறுக்கப்படாத நீதியும், ஞானமும், கிருபையும், சகல மனிதருக்கும் பிரசித்தமாகும்.  அதெப்படியென்றால், இவ்வுலகத்தில் அநேகர் பாவத்தை வெறுத்து சன்மார்க்கராய் நடந்தும், அவர்களுக்குக் கஷ்டமும் தரித்திரமும், துன்பமும் உண்டாகிறது.  தேவ பயமின்றி நடக்கும் பாவிகளோ, சுகமும், செல்வாக்கும்  பெற்று, தங்களுடைய துர்ச்செயல்களில் அநுகூலமடைகிறார்கள்.  இதன் காரணம் நமக்கு இப்போது பரம இரகசியமாய்க் காணப்பட்ட போதிலும், அதன் காரணத்தைச் சர்வேசுரன் பொதுத் தீர்வை நாளில் சகலருக்கும் தெரியப்படுத்துவார்.  அப்போது சர்வேசுரன் மனிதர்கள் மட்டில் குற்றமில்லாமல் நடந்து கொண்டாரென்று நிரூபித்துக் காட்டப்படும். அவரவர்கள் செய்கையின் பலாபலனுக்குத் தக்கவாறு நடத்தப்பட்டார்களென்றும் விளங்கும்.


7. எப்படி சேசுநாதருடைய மகிமை பிரசித்தப்படுத்தப்படும்? 

சேசுநாதர் இவ்வுலகில் இருந்தபோது, சகல வகையிலும் நிந்திக்கப்பட்டு, மனுஷர்களால் தீர்வையிடப்பட்டு, அவமானமான மரணத்தை அடைந்தார்.  இப்படிச் சகலராலும் நீர் மனிதனாகப் பாவிக்கப்பட்ட நமதாண்டவர் பொதுத்தீர்வை நாளிலே எல்லா ருக்கும் மேலாக வெற்றி வீரராய்த் தோன்றி, தமது நீதி ஆசனத்தின் முன்பாக சகலரையும் வரவழைத்து, தமது தெய்வீகத்தையும், மேன்மையையும் பிரசித்தமாயத் துலக்கப்படுத்தி மகா மகிமை அடைவார்.


8. எப்படி நீதிமான்களுடைய மகிமை பிரசித்தப்படுத்தப்படும்? 

நீதிமான்கள் இவ்வுலகில் இருந்தபோது பாவிகளால் பைத்தியக்காரராக இகழப்பட்டார்கள்.  பொதுத் தீர்வை நாளிலோ புத்திசாலிகளாகப் புகழப்படுவார்கள்.  மேலும் அவர்கள் இரகசி யத்தில் செய்த புண்ணியக் கிரிகைகளும், செபதபமும், தான தர்மமும் சகலருக்கும் தெரிய, மகிமை அடைவார்கள் (1 கொரி. 4:5).


9. பொதுத் தீர்வையானது எப்படிக் கெட்டவர்களை வெட்கப்படச் செய்யும்? 

அவர்கள் செய்த அநியாயமெல்லாம், துஷ்டத்தனமெல்லாம், அக்கிரமமெல்லாம் சகலரும் அறிய அவர்கள் சொல்ல முடியாத வெட்கம் அநுபவிப்பார்கள்.


10. பொதுத் தீர்வையில் ஒவ்வொரு மனிதனும் சம்பாவனையோ அல்லது ஆக்கினையோ தன் சரீரத்திலும், ஆத்துமத்திலும் பெற்றுக் கொள்ள வேணுமென்று ஏன் சர்வேசுரன் தீர்மானித்தார்? 

தனித்தீர்வையால் சரீரத்துக்கு வரவேண்டிய சம்பாவனையையோ அல்லது தண்டனையையோ உடனே அடைவதில்லை. ஆத்துமத்துக்குரியதை மட்டும் பெற்றுக் கொள்கிறோம்.  ஆனால் நன்மைக்குத் தின்மைக்கும் சரீரம் இவ்வுலகில் பங்காளியாயிருந்தது. அதுபோல் மறுலோகத்தில் சம்பாவனை, அல்லது ஆக்கினைக்கும் சரீரமும் பங்காளியாயிருப்பது நியாயம்.  பொதுத் தீர்வை நாளிலே ஆத்துமமும் சரீரமும் தங்களுக்கு வரவேண்டிய பாக்கியம், அல்லது வேதனையைச் சரிவரப் பெற்றுக் கொள்ளும்.


11. ஏன் ஒவ்வொரு மனிதனும் எல்லோருக்கும் முன்பாக சம்பாவனை, அல்லது ஆக்கினையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? 

ஒவ்வொருவரும் தனி ஆளாயிருப்பதுமன்றி, மனுக் குலத்தைச் சேர்ந்தவனாயிருக்கிற படியினாலேதான் என்று அர்ச். அக்வீனாஸ் தோமையார் சொல்லியிருக்கிறார்.


118. (56) பொதுத் தீர்வை எப்போது நடக்கும்?

உலகத்தின் முடிவிலே நடக்கும்.


1. உலகம் முடியும் என்று எப்படி நமக்குத் தெரியும்? 

“வானமும் பூமியும் ஒழிந்துபோம்” என்று சேசுநாதர் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார் (மத். 24:35).


2. உலகம் எப்பொழுது முடியும்? 

உலகம் முடிகிற நாள் நமக்குத் தெரியாது. “அந்த நாளும், நேரமும் பற்றி பிதா ஒருவரேயன்றி வேறெவனும், பரலோகத்திலுள்ள சம்மனசுகளுமுதலாய் அறியார்கள்” என்று சேசுநாதர் வசனித்திருக்கிறார் (மத். 24:36, மாற்.13:32).


3. அந்நாள் நமக்குத் தெரியாதபோதிலும், அதைக் குறித்துக் காட்டும் அடையாளங்கள் ஏதாவது உண்டா? 

வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி அதற்குமுன் நடக்கும் பற்பல அடையாளங்கள் உண்டு.  அவைகளைக் கொண்டு, அது சமீபித்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.


4. வேதாகமத்தில் இதைக் குறித்து எழுதியிருப்பதைச் சுருக்கமாய்ச் சொல்லு. 

(1) சத்திய வேதம் உலகம் எங்கும் சகல சாதிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டிருக்கும் (மத்.24:14, மாற்.. 13:10).

(2) விசுவாசம் குறைந்துபோய் அநேகர் சத்திய வேதத்தை மறுதலிப்பார்கள்.  “அநேகருடைய (தேவ) சிநேகம் குளிர்ந்துபோம்” (மத். 24:12, லூக். 18:8, 2 தெச. 2:3).

(3) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகளும் கள்ள கிறீஸ்துகளும் எழுந்து அநேகரை மயக்குவார்கள் (மத். 24:5,11,24).

(4) உலகம் எங்கும் சண்டையும், குழப்பமும் உண்டாகும்.  மேலும் ஒருபோதும் கேள்விப்படாத வியாதிகளும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், பூமி அதிர்ச்சியும்  காணப்படும் (மத். 24:7).

(5) அந்திக்கிறீஸ்து, அதாவது கிறீஸ்துவின் எதிராளி என்றழைக்கப்படும் மகா துஷ்டனாகிய ஒருவன் வருவான். அவன் தான் தேவனென்று சொல்லி, பசாசின் உதவியால் ஆச்சரியமான புதுமைகளைச் செய்து சனங்களை ஏமாற்றுவான் (2 தெச. 2:4-9).  கள்ளப் போதனைகளைப் போதித்து தன்னை தெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்களை நிஷ்டூரமாய் உபத்திரவப்படுத்தி கணக்கற்ற மனிதரைக் கொலையும் செய்வான் (மத். 24:9).

(6) அதற்குப் பின் சூரியன் மங்கிப் போக இருள் பரம்பும், சந்திரனும் வெளிச்சம் கொடாமல் இரத்த நிறமாயிருக்கும், நட்சத்திரங்களும் வானத்திலிருந்து விழுவதுபோலக் காணப்படும் (மத். 24:29).


119. (57) உலகம் எப்படி முடியும்?

உலகமெல்லாம் நெருப்பினாலே வேக மனுஷர் எல்லாரும் செத்துப் போவார்கள்.


1. அது எப்படி நமக்குத் தெரியும்? 

“வானங்கள் சண்டப் பிரசண்டமாய் ஒழிந்துபோம்.  பூதியங்கள் (ஐம்பூதங்கள்) உஷ்ணத்தால் வெந்து உருகிப் போம்.  பூமியும் அதிலுள்ள சகல வேலைப்பாடுகளும் வெந்து அழியும்” என்று அர்ச். இராயப்பர் வசனித்தார் (2 இரா. 3:10).


2. நெருப்பினால் வெந்த உலகம் அழிந்து நிர்மூலமாகிப் போய் விடுமா? 

இவ்விஷயமாக அர்ச். இராயப்பரும், அருளப்பரும்: “புதிய வானமும், புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” (2 இரா. 3:13).  “புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன்” (அரு. காட்சி. 21:1) என்று வசனித்திருக்கிறார்கள்.

இவ்விரண்டு மேற்கோள்களைக் குறித்து, திருச்சபையின் வேதசாஸ்திரிகள் போதித்துவரும் உபதேசமெல்லாம் பின்வருமாறு சுருங்க உரைக்கலாம். முடிவிலே உண்டாகும் தீப்பிரளயத்தினால் உலகம் நிர்மூலமாகி விடாது. ஆனால், எப்படி புடமிடப்பட்ட பொன் நெருப்பினாலே, புதிய தூய்மையை அடைகிறதோ, அப்படியே உலகம், அக்கினிச் சுவாலையினால் சுத்திகரிக்கப்பட்டு, ஆதாமின் பாவத்திற்குமுன் அதற்குண்டான இயற்கைக் குணத்தைத் திரும்பவும் அடைந்து அழியா மேன்மையுள்ள நிலைமையில் நிலைநாட்டப்படும்.


3. நெருப்பினால் புதுப்பிக்கப்பட்ட உலகம் அழியா மேன்மை யுள்ள நிலைமை அடையும் என்பதற்கு ஆதாரமென்ன? 

“சர்வேசுரனுடைய பிள்ளைகள் வெளிப்படும் காட்சியைக் காணப் படைப்புகளெல்லாம் ஆவலோடு காத்துக் கொண் டிருக்கின்றன... எனெனில், சர்வேசுரனுடைய பிள்ளைகளின் மகிமைச் சுயாதீனத்துக்கு உள்ளாகும்படி சிருஷ்டியானது அழிவின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாகப்படுமென்கிற நம்பிக்கை அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் அர்ச். சின்னப்பர்.


4. இப்படிச் சுத்திகரிக்கப்பட்ட உலகத்தில் குடியிருப்பவர்கள் யார்? 

ஞானஸ்நானம் பெறாமல் இறந்துபோன பிள்ளைகள் அதில் குடியிருப்பார்களென்று சில வேதசாஸ்திரிகள் எண்ணுகிறார்கள்.


120. (58) பின்னும் என்ன சம்பவிக்கும்?

சேசுநாதர்சுவாமி மனுஷர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடுகூட எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு நடுத்தீர்க்க வருவார்.


1. மனிதர் உயிர்க்கும்போது நடக்கும் விசேஷத்தைப் பற்றி வேதாகமத்தில் எழுதியிருக்கிறதென்ன? 

“சேசுநாதர் தம்முடைய தூதர்களை எக்காளப் பெருந் தொனியோடு அனுப்புவார்” (மத். 24:31).  “எக்காளம் தொனிக் கவே மரித்தவர்கள் அட்சயமாய் உயிர்ப்பார்கள்” (1 கொரி. 15:31).  “சம்மனசுகள் வானத்தின் மேல்முனைமுதல், கடைமுனை வரையில், நான்கு திசைகளிலுமிருந்து அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்” (மத்.24:31).


2. உயிர்த்தவர்கள் எல்லாரையும் சம்மனசுகள் எவ்விடத்தில் கூட்டிச் சேர்ப்பார்கள்? 

சம்மனசுகள் ஒலிவேத்து மலையைச் சுற்றிலுமுள்ள ஜோசப்பாத் என்னும் கணவாயில் உயிர்த்தவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள் (யோவேல் 3:2).


3. உயிர்த்தவர்கள் அங்கே கூடி இருக்கும்போது என்ன சம்பவிக்கும்?

அப்போது நமதாண்டவருடைய அடையாளமாகிய திருச்சிலுவை ஆகாயத்தில் மிகப் பிரகாசவடிவாகக் காணப்பட்டு, சேசுநாதர்சுவாமி தம் திருத்தாயாரோடு சம்மனசுகளால் சூழப் பட்டவராய் மோட்சத்திலிருந்து மிகுந்த வல்லபத்தோடு மேக ஆசனத்தில் எழுந்தருளி வருவார் (மத். 24:30).  ஆண்டவர் தமது சிம்மாசனத்தில் வீற்றிருக்க, சம்மனசுகள் வந்து, நல்லவர்களை அவருடைய வலதுபுறத்திலும், பாவிகளை அவருடைய இடது புறத்திலும் நிறுத்துவார்கள் (மத். 25:31,33).


4. சேசுநாதருடைய சிலுவை காணப்படும்போது புண்ணிய ஆத்துமாக்கள் என்ன அனுபவிப்பார்கள்? 

சொல்ல முடியாத பாக்கியத்தை அநுபவிப்பார்கள்.


5. சிலுவையைக் கண்டமாத்திரத்தில் பாவிகள் என்ன செய் வார்கள்? 

பாவிகள் வெகுவாய்ப் பயந்து, கலங்கி, நடுநடுங்கி, மலைகளைத் தங்கள் மேல் விழுந்து தங்களை நசுக்கிக் கொல்லும் படி ஆசித்துக் கூக்குரலிடுவார்கள் (லூக். 23:30).


6. சகல மனிதர்களையும் நடுத்தீர்க்கும் அதிகாரம் ஏன் சேசு நாதருக்கு உரியது என்கிறோம்? 

இந்த அதிகாரம் அர்ச். தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும் மெய்யாகவே உரியதாயிருந்தபோதிலும், சர்வேசுரனும் மனிதனுமாகிய சேசுநாதருக்கு ஓர் விசேஷ காரணத்தின் நிமித்தம் உரியதாயிருக்கிறது.  ஏனென்றால், அவர் “இராஜாதி இராஜனாகவும், ஆண்டவர்களுக்கெல்லாம் ஆண்டவராகவும்” இருக்கிறார் (1 திமோ. 5:15).  ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களில் தீர்ப்பு செய்யும் அதிகாரமும் ஒன்று.  இந்தத் தீர்ப்பு அவனவனது கிரியைக்குத் தகுந்ததுபோல் சம்பாவனை அல்லது தண்டனை விதிப்பதில் அடங்கியிருக்கிறது.


121. (59) எப்படி நடுத்தீர்ப்பார்?

அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கு முன்பாக அறியப்பண்ணி பாவிகளைச் சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசீர்வதித்து மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போவார்.


1. எவைகளைப் பற்றி நம்மை நடுத்தீர்ப்பார்? 

நமது நினைவினாலும், வார்த்தையினாலும், கிரியை யினாலும் செய்ததும், செய்யாமல் விட்டதுமான பாவ புண்ணியங்களைச் சீர்தூக்கிப் பார்த்து நமக்குத் தீர்வையிடுவார். “அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன.  ஜீவிய புஸ்தகமாகிய வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது.  அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்ட படி, மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந் தீர்க்கப்பட்டார்கள்” (அரு. காட்சி. 20:12).


2. மனிதர்கள் நினைத்த இரகசிய எண்ணங்களும் இரகசியமாய்ச் செய்த தருமங்களும், பாவங்களும் எல்லாருக்கும் அறிவிக்கப்படுமா? 

“இருளில் மறைந்திருக்கிறவைகளைத் துலக்கி, இருதயச் சிந்தனைகளையும் சேசுநாதர் வெளியாக்குவார்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (லூக். 12:2, 1கொரி. 4:5).


3. தீர்வையானது கண்டிப்பாயிருக்குமா? 

நமக்காவது, பிறருக்காவது யாதொரு பிரயோசனமுமில்லாத வீண் வார்த்தைக்கு முதலாய் கணக்குக் கொடுக்க வேண்டி யிருக்கிறபடியால் (மத். 12:36), தீர்வையானது எம்மாத்திரம் கண்டிப்பாயிருக்குமென்று யோசித்துக் கொள்ளலாம். “சுயஞ்ஜீவிய கடவுளின் கையில் விழுவது பயங்கரமான காரியம்” என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (எபி. 10:31).


4. சேசுநாதர் நல்லவர்களுடைய பாவங்களை வெளிப்படுத்து வாரா? 

வெளிப்படுத்தமாட்டாரென்று சில வேதசாஸ்திரிகள் எண்ணுகிறார்கள். வேறே சிலர், சேசுநாதர் நல்லவர்களுடைய பாவங்களை வெளிப்படுத்தினாலும், அவர்களுடைய மனஸ்தாபத்தையும், அவர்கள் செய்த பரிகாரத்தையும் அறிவித்து, அவர்கள் வெட்கப்படாதபடிக்குச் செய்வாரென்று சொல்லுகிறார்கள்.


5. சேசுநாதர்சுவாமி என்ன தீர்ப்பு இடுவார்? 

புண்ணியாத்துமாக்களை நோக்கி: “என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்.  உலகம் உண்டானது முதல் உங்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லுவார் (மத்.25:34).  பின்னும் பாவிகளைப் பார்த்து: “சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டகன்று பசாசுக்கும், அவன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” என்பார் (மத்.25:41).


6. அப்போது சபிக்கப்பட்டவர்கள் எங்கே போவார்கள்?

அவர்கள் சபிக்கப்பட்ட மாத்திரத்தில், பூமி பிளந்து நரகத்தில் விழுவார்கள்.


7. புண்ணியாத்துமாக்களுக்கு என்ன நேரிடும்? 

சேசுநாதரோடு மோட்சத்தில் பிரவேசிப்பார்கள்.