திவ்விய பூசையின் பேரில்.

260. தேவநற்கருணை தேவத்திரவிய அனுமானமாக மாத்திரம் இருக்கிறதோ? 

அது தேவத்திரவிய அனுமானமாயிருப்பதுடன் திவ்ய பூசைப்பலி யுமாய் இருக்கிறது, 


261, திவ்யபூசை ஆவதென்ன? 

யேசுகிறிஸ்து நாதர்சுவாமி திருச்சிலுவைப் பலியைப் புதுப்பித்து, அப்பம் இரசம் குணங்களுக்குள்ளே தம்முடைய திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் குருக்கள் மூலமாய் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கிறதே திவ்விய பூசையாம். 


262. சிலுவைப்பலிக்கும். பூசைப்பலிக்கும் வித்தியாசம் உண்டோ? 

ஒப்புக்கொடுக்கும் விதத்தில் மாத்திரம் வித்தியாசமுண்டு, அதாவது திவ்வியயேசு சர்வேசுரனுக்கும் மனிதருக்குமிடையே ஏக குருவாயிருந்து தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து பலியிட்டார். திவ்விய பூசையிலோ என்றால் சிலுவையில் இரத்தம் சிந்தின அதே யேசு திருச்சபையால் அதிகாரம் பெற்ற குருவானவரின் வழியாய் இரத்தம் சிந்தாமலே தம்மை ஒப்புக் கொடுத்து அதே பலியைப் புதுப்பிக்கிறார்.


263. யேசுநாதர் இந்தப் பூசை பலியை ஏற்படுத்தினதெப்படி?

யேசுகிறிஸ்துநாதர் அப்பத்தை எடுத்து ஆசிர்வதித்து “இது என் சரீரம்" என்றும், இரசத்தை எடுத்து ஆசீர்வதித்து “இது என் இரத்தம்" என்றும் சொன்னபிறகு இதை “நமது ஞாபகமாகச் செய்யுங்கள்" என்று அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டு ஏற்படுத்தினார்.


264. பூசைப்பலியை யாருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியது?

சர்வேசுரனுக்கு மாத்திரம் ஒப்புக் கொடுக்க வேண்டியது.


265. திவ்விய பூசையை ஒப்புக்கொடுப்பதற்கான கருத்துக்கள் எவை? 

1-வது - தேவ ஆராதனை, 
2-வது - நன்றியறிந்த தோத்திரம். 
3-வது - மன்றாட்டு. 
4-வது - பாவப்பரிகாரம் இவைகளாம்.

266. யாருக்காக திவ்யபூசைப்பலியின் பலன்கள் ஒப்புக் கொடுக்கப்படுகிறது? 

பரலோகத்திலும், பூலோகத்திலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் எல்லாத் திருச்சபையோருக்காகவும் திவ்வியப் பூசை பலியின் பலன்கள் ஒப்புக்கொடுக்கப்படுகிறது,


267. ஞாயிற்றுகிழமை, கடன் திருநாட்கள் அல்லாமல் மற்ற நாட்களில் பூசை காணக்கடன் உண்டோ ? 

இல்லை. ஆயினும் நல்ல கிறிஸ்தவர்கள் கூடியவரையில் அனுதினமும் பூசை காண்பார்கள்.


268. திவ்விய பூசை காண்பதினால் கிடைக்கும் பிரயோசனம் என்ன ? 

அதனால் தேவ ஆராதனை செலுத்தப்படுவது மட்டுமன்றி நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் ஞான வரங்களும். சரீரத்துக்கு அடுத்த நன்மைகளும் கிடைக்கும்.