பொது விளக்கம்

1. பத்துக் கற்பனைகள் என்றால் என்ன?

சர்வேசுரன் கொடுத்தருளிய பத்து மொழிகள், அல்லது, கட்டளைகள் என்று அர்த்தமாகும்.


2. சர்வேசுரன் எச்சமயத்தில் யார் வழியாக இவைகளைக் கொடுத்தார்?

(1) முதன்முதல், இஸ்ராயேல் மக்கள் எஜிப்து தேசத்தை விட்டுப் புறப்பட்ட 50-ம் நாளில், சர்வேசுரன் மோயீசன் மூலம், சீனாய் மலையில் மகிமைப் பிரதாபத்துடன் இவைகளைக் கொடுத் தருளினார் (யாத். 20).

(2) பின்னும், புதிய ஏற்பாட்டில் சேசுநாதர்சுவாமி இவை களையெல்லாம் ஏற்றுக் கொண்டு தெளிவாய் விளக்கிக் காண்பித்து உறுதிப்படுத்தியதுமல்லாமல் இவைகளுள் பிறர்சிநேகம் முதலிய சிலவற்றை அதிக மேன்மையுள்ளவைகளாக்கினார் (மத்.5; அரு.13:34).  மேலும் அவர் மனிதனை அதிக உத்தமமான அந்தஸ்துக்கு உயர்த்தும்படி சுவிசேஷப் புத்திமதிகளையும் கொடுக்கச் சித்தமானார் (மத். 19:29; லூக். 18:30).


3. சர்வேசுரன் மோயீசனுக்குப் பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன் அவர் மட்டிலும், தன் மட்டிலும் பிறர் மட்டிலும் அனுசரிக்க வேண்டிய கடமைகள் மனிதனுக்குத் தெரிந்ததில்லையா?

உலக ஆரம்பத்தில் இருந்த மனிதர்களுக்குச் சர்வேசுரன் விசேஷ கட்டளையை எழுதிக் கொடாவிடினும், தின்மையை விலக்கி, நன்மையைச் செய்வதற்கான ஒருவித அறிவை அவர்கள் இருதயத்தில் பதியச்செய்திருந்தார்.  “இருதயங்களிலே தேவப் பிரமாணத்தின் ஏற்பாடு எழுதப்பட்டிருக்கிறது” (உரோ.2:15).


4.  அப்படியானால் சர்வேசுரன் ஏன் இவைகளை எழுதிக் கொடுத்தார்?

நாளாவட்டத்தில் ஜென்மப்பாவத்தின் விளைவாகிய அறியாமையினாலும், ஆசாபாசங்களாலும், மனிதனுடைய இருதயத்தில் சர்வேசுரன் பதித்திருந்த அந்த அறிவு கொஞ்சங் கொஞ்சமாய் அழிந்து போயிற்று.  ஆகையினாலே இனிமேல் மனிதர் தங்கள் கடமைகளை ஒருக்காலும் மறந்துபோகாதபடி சர்வேசுரன் அவர்களுக்கு அந்தப் பத்துக் கற்பனைகளை எழுதிக் கொடுக்கச் சித்தமானார்.


5.  சர்வேசுரன் எவ்விதம் இந்தக் கற்பனைகளைக் கொடுத்தார்?

இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். முதற் பலகையில் சர்வேசுரனுக்கு நாம் செலுத்த வேண்டிய மூன்று வித கடமைகள் எழுதப்பட்டிருந்தன. இரண்டாம் பலகையில் நம் மட்டிலும் நம் அயலார் மட்டிலும் நாம் அனுசரிக்க வேண்டிய கடமைகள் அடங்கிய ஏழு கற்பனைகள் வரையப்பட்டிருந்தன.


6. முதல் மூன்று கற்பனைகளும் சர்வேசுரனுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைக் கற்பிக்கிறதென்று விளக்கிக் காட்டு.

(1) முதல் கற்பனையால் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகிய முயற்சிகளைக் கொண்டு நமது இருதயத்தில் சர்வேசுரனை ஆராதிக்கவும்,

(2) 2-ம் கற்பனையால் அவருடைய திருநாமத்தை நாவால் உச்சரித்து அவரை ஸ்துதிக்கவும்,

(3) 3-ம் கற்பனையால் அவருடைய தோத்திரத்துக்காகக் குறிக்கப்பட்ட நாட்களைப் பரிசுத்த விதமாய்ச் செலவழித்து நம்முடைய செயல்களைக் கொண்டு அவரைச் சேவித்து வணங்கவும் வேண்டுமென்று நமக்குப் படிப்பிக்கின்றன.


7.  மற்ற ஏழு கற்பனைகளும் நம் மட்டிலும் பிறர்மட்டிலும் நாம் செலுத்த வேண்டிய கடமைகளைக் கற்பிக்கிறதெப்படி?

அதெப்படியெனில்:

(1)  நான்காம் கற்பனை, நமது தாயையும் தகப்பனையும் அதிகாரிகளையும் நாம் சங்கிக்க வேண்டுமென்று கற்பிக்கிறது.

(2)  ஆறாம் ஒன்பதாம் கற்பனைகள், சேசுநாதருடைய ஞான அவயவமும், இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயமுமாயிருக்கிற நமது சரீரத்தையும், ஆத்துமத்தையும் பரிசுத்தமாய்க் காப்பாற்ற வேண்டுமென்று கற்பிக்கின்றன.

(3)  மற்றக் கற்பனைகளோ, அயலானுடைய சரீரத்துக் காகிலும், அவனுடைய பொருளுக்காவது, அவனுடைய நற்பெயருக்காவது, யாதொரு மோசம் நாம் வருவிக்கக் கூடாது என்று கற்பிக்கின்றன.


8.  ஒவ்வொரு கற்பனையும் நமக்குக் கற்பிக்கிறதென்ன?

அந்தந்த கற்பனைக்குப் பொருந்தாத சகல துர்க்குணங் களையும் விலக்கி, புண்ணியம் செய்ய நமக்குக் கற்பிக்கிறது.


9. இந்தக் கற்பனைகளை அனுசரிக்கக் கடமைப்பட்டிருப்பவர்கள் யார்? 

இந்தக் கற்பனைகளை எல்லா மனிதரும் வெகு பிரமாணிக்கமாய் அனுசரிக்க வேண்டும். ஏனென்றால், தங்களை உண்டு பண்ணின ஆண்டவருக்குச் சகலரும் கீழ்ப்படிய வேண்டும். மேலும் ஆத்தும இரட்சணியம் அடைவதற்கு வேறே வழியில்லை.  அதைப் பற்றி நமதாண்டவர் சொன்னதாவது: “நித்திய சீவியத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் கற்பனைகளை அனுசரித்துக் கொண்டு வர வேண்டும்” (மத். 19:17).