அர்ச்சியசிஷ்டவர்களின் வணக்கம்

129.  தேவதூதர்களுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் நாம் செலுத்துகிற வணக்கம் தேவ ஆராதனையோ?

அல்ல.  நாம் அவர்களை வணங்கும்போது அவர்கள் பரிசுத்தவான்களும், சர்வேசுரனுடைய சினேகிதரும் என்கிற முறையில் வணங்கி வேண்டிக் கொள்கிறோமேயயாழிய அவர்களைச் சர்வத்திற்கும் கர்த்தாக்கள் என்ற முறையில் வணங்குகிறதில்லை.


1. சம்மனசுகளுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் நாம் செலுத்துகிற வணக்கம் எதிலடங்கியிருக்கிறது?

(1)  அவர்கள் மோட்சத்தில் மகிமைப்பிரதாபத்தோடு வீற்றிருக்கிறபடியால் அவர்களைச் சங்கிக்கிறதிலும்,

(2)  அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளுகிறதிலும்,

(3)  அவர்களுடைய சுகிர்த நடத்தையைக் கண்டு பாவிக்கிறதிலுமாம்.


2. ஏன் சம்மனசுகளை வணங்குகிறோம்?

சம்மனசுகள் சர்வேசுரனுடைய தூதராய் நமக்கு அவருடைய சித்தத்தை அறிவிப்பதாலும், நமது செபதபம் முதலிய நற்செயல்களைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறதாலும் அவர்களை வணங்குகிறோம்.


3. ஏன் அவர்களைப் பார்த்து வேண்டிக் கொள்கிறோம்?

சம்மனசுகள் நமக்குக் காவலாக இருந்து, நம்மை ஆபத்தினின்று காப்பாற்றி,பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்ய நமது இருதயத்தில் நல்ல ஆசையை வருவிக்கும்படி அவர்களைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறோம்.


4. எப்படி நாம் அவர்களைக் கண்டுபாவிக்கிறோம்?

சம்மனசுகள் சர்வேசுரனை இடைவிடாமல் ஆராதித்துத் தோத்தரித்து, அவருடைய கட்டளைகளைச் சுறுசுறுப்போடு நிறைவேற்றுகிறார்கள்.  அதுபோல் நாமும் சர்வேசுரனை வணங்கி, எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், சம்மனசுகளைக் கண்டுபாவிப்போம்.


5. ஏன் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு நாம் வணக்கம் செலுத்தி வருகிறோம்?

அர்ச்சியசிஷ்டவர்கள் பரிசுத்தவான்களும், சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்கும் அவருடைய சிநேகிதர்களும், அவரிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறவர்களுமாயிருப்பதினால், அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.


6. ஏன் அவர்களைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறோம்?

அவர்களுடைய தர்ம நடத்தையை நாம் பின்பற்றி அவர்கள் சர்வேசுரனிடம் நமக்காக மன்றாடும்படியாகவும், அவர்களுடைய சகாயத்தை அடையும்படியாகவும் அவர்களைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறோம்.


7. நாம் சம்மனசுகளுக்கும் அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செலுத்துகிற சங்கைக்கும், சர்வேசுரனுக்குச் செலுத்துகிற சங்கைக்கும் வித்தியாசம் உண்டா?

வெகுதூர வித்தியாசம் உண்டு. சர்வேசுரன் நம் சிருஷ்டிகர் என்றும், கர்த்தரென்றும், இரட்சகரென்றும் அவருக்கு ஆராதனை பலிபூசை செய்கிறோம். அர்ச்சியசிஷ்டவர்களும், சம்மனசுகளுமே சர்வேசுரனுடைய சிநேகிதரும், நமக்காக அவரிடத்தில் மனுப்பேசுகிறவர்களுமாய் இருப்பதைப் பற்றி அவர்களுக்குத் தகுந்த மரியாதை செய்கிறோம்.


8. ஆனதால் சர்வேசுரனைப் பார்த்து  நேரே பிரார்த்திக்கிறதற்கும், சம்மனசுகளையும், அர்ச்சியசிஷ்டவர்களையும் நோக்கி வேண்டிக் கொள் கிறதற்குமுள்ள வித்தியாசமென்ன?

நாம் சர்வேசுரனைப் பார்த்துப் பிரார்த்திக்கும்போது எங்கள் பேரில் கிருபையாயிரும்,  எங்களை இரட்சியும், எங்களுக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைத் தந்தருளுமென்று மன்றாடு கிறோம்.  சம்மனசுகளையும், அர்ச்சியசிஷ்டவர்களையும் நோக்கி வேண்டிக் கொள்ளும்போதோ, அவர்கள் சர்வேசுரனைப் பார்த்து நமக்காக மனுப்பேசி மன்றாடி, அவரிடமிருந்து வரப்பிரசாதங்களை நமக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று கேட்கிறோம்.


9. நாம் சர்வேசுரனுக்குச் செலுத்துகிற சங்கை மரியாதைக்குப் பேரென்ன?

தேவ ஆராதனை என்று பெயர்.


10. சம்மனசுகளுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செலுத்தும் சங்கைக்குப் பெயரென்ன?

சாதாரண வணக்கம் என்று சொல்லப்படும்.


11. தேவமாதாவுக்குச் செலுத்துகிற சங்கைக்குப் பெயரென்ன?

மேலான வணக்கம் என்று பேர்.


12. ஏன் தேவமாதாவுக்கு மேலான வணக்கம் செலுத்துகிறோம்?

(1) அவர்கள் மற்ற அர்ச்சியசிஷ்டவர்களைவிட அதிக மேன்மையுள்ள சிருஷ்டி;

(2)  அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயி சர்வேசுரனுடைய தாயார்;

(3)  நமது இரட்சகர் சிலுவையில் உயிர் விடும்போது அவர்களை நமக்குத் தாயாராகக் கொடுத்தார்;

(4)  சகல சம்மனசுகள், அர்ச்சியசிஷ்டவர்கள் முதலிய மோட்ச வாசிகளின் இராக்கினியாயிருக்கிறார்கள்.


13. நாம் சம்மனசுகளுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் வணக்கம் செலுத்துவது சர்வேசுரனுக்குப் பிரியமான காரியமா? 

அரசன் தன்னுடைய பிரசைகள் யாவரும் தனக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று ஆசிக்கிறான். அதல்லாமலும் தன்னுடைய தாய்க்கும், மந்திரி பிரதானிகளுக்கும், உத்தியோகஸ்தருக்கும் அவர்கள் மரியாதை செய்வதால், கோபம் கொள்கிறதில்லை. அதற்கு விரோதமாய்த் தன் தாயாருக்கு, மந்திரி பிரதானிகளுக்கு, உத்தியோகஸ்தருக்கு, சிநேகிதருக்குப் பிரஜைகள் செய்யும் சங்கை தன்னைப் பற்றியே செய்வதால் சந்தோஷப்படுவான். இதே விதமாக சர்வேசுரனும் அர்ச். கன்னிமரியாயிக்கு, தமது சிநேகிதராகிய அர்ச்சியசிஷ்டவர்களுக்கு, சம்மனசுகளுக்கு நாம் வணக்க மரியாதை செய்கிற போது, நமது மட்டில் சந்தோஷப்படுகிறாரே அன்றி மற்றபடியல்ல.


14. சம்மனசுகளையும், அர்ச்சியசிஷ்டவர்களையும் வணங்குவதும் வேண்டிக் கொள்வதும் பிரயோசனமான காரியமா?

சம்மனசுகளையும் அர்ச்சியசிஷ்டவர்களையும் வணங்கி, அவர்களை நோக்கி நமது அவசியங்களில் வேண்டிக் கொள்வதால், நமது ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஏராளமான பலன்கள் உண்டு.  இதினிமித்தம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்படி திருச்சபை தன் பிள்ளைகள் எல்லோரையும் பலமாய் ஏவித் தூண்டுகிறது.


சரித்திரம்

590-ம் வருஷம் ரோமை பட்டணத்தில் பயங்கரத்துக்குரிய கொள்ளை நோயுண்டாகி, நாளொன்றுக்கு ஜனங்கள் ஆயிரக் கணக்காய்ச் செத்து வந்தார்கள்.  அக்காலத்தில் திருச்சபையை ஆண்டுவந்த பெரிய கிரகோரியார் என்ற பாப்பானவர் செபதப ஒருசந்தி உபவாசம் செய்யும்படி கற்பித்தும் வியாதி தணியாதபடியால், அர்ச். லூக்காஸ் வரைந்த தேவமாதா படத்தை எடுத்துக் கொண்டு குருக்களும், மேற்றிராணிமார்களும் மற்ற விசுவாசிகளும் புடைசூழ்ந்து, பக்தி விசுவாசத்துடன் செபித்துக் கொண்டு வீதிவீதியாய்ச் சுற்றுப்பிரகாரம் செய்யக் கட்டளையிட்டார். திருப்படம் எழுந்தேற்றம் பண்ணப்பட்ட எல்லா இடங்களிலும் கொள்ளை நோய் உடனே நின்றதுடன், கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டவர்களும் அற்புதமாய்க் குணப்பட்டார்கள்.  மேலும் சுற்றுப்பிரகாரம் “ஆட்ரியன்” கோபுரத்துக்கு அருகாமையில் வந்த பொழுது, அக்கோபுரத்தின் உச்சியில் ஒரு சம்மனசானவர் மனித ரூபமாய்க் காணப்பட்டு, இரத்தத்தால் நனைந்த வாளை உறையில் போட்டு, பாஸ்குக் காலத்தில் செபிக்கப்படும் “பரலோகத்துக்கு இராக்கினியே!  மனங்களிகூரும், அல்லேலுய்யா” என்னும் கீர்த்தனையைப் பாடினார். அந்நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அர்ச். பாப்பானவரும் வாய்திறந்து “எங்களுக்காகச் சர்வேசுரனை மன்றாடும், அல்லேலுய்யா” என்று மகா பக்தி விசுவாசத்துடன் உச்சரித்தார் (னி.மூ.னி.  V. ஹிலி. 299).


15. தேவமாதா அல்லது யாதொரு அர்ச்சியசிஷ்டவர் மூலமாய் நாம் யாதொரு நன்மையைப் பெறும்போது, அது யாரால் அருளப் படுகிறது?

தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டவர்கள் சர்வேசுரனைப் போலத் தேவ வல்லமை உள்ளவர்களல்ல.  நம்மைப் போலச் சிருஷ்டிகளாயிருக்கிறார்கள்.  அவர்கள் சொந்தப் பலத்தினால் மாத்திரம் ஒன்றும் செய்ய முடியாது.  ஆனால் அவர்கள் சர்வேசுரனிடத்தில் நமக்காக மனுப்பேசி, வேண்டிய காரியங்களை அவரிடமிருந்து அடைந்தருளுகிறார்கள் என்று நம்ப வேண்டும்.  மேலும் சில அர்ச்சியசிஷ்டவர்கள் சில நனமையைச் சர்வேசுரனிடத்தில் அடைந்து கொடுக்கும்படி அவரிடத்தில் விசேஷ வரம் பெற்றிருக்கிறார்கள்.