புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.

தேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு புறமதத்தவனான ஒரு பிரபு மனந்திரும்பின புதுமை.

சாக்ஸனி தேசத்தில் அக்காயானியான விட்டிக்கின் என்னும் பிரபு ரோமாபுரி இராயனோடு சண்டை செய்த போது இராயன் வெற்றிபெற்றதால் அவன் சமாதானமாய்ப் போனான்.இராயன் பாளையம் நீங்கி போவதற்கு முன் நாற்பது நாள் ஒருசந்தியின் கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை அங்கே மகாஆடம்பரத்தோடு கொண்டாடினான் சாக்ஸன் பிரபு.

ரோமபுரி இராயனும் மற்றக் கிறிஸ்தவர்களும் அந்தத் திருநாளில் செய்த காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசி போல இராயனின் பாளையத்துக்குப் போனான். திருநாள் முடியுமட்டும் அவனங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளையெல்லாம் நன்றாய் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப்பார்த்து விட்டிக்கின் என்று அறிந்து, இராயனிடத்தில் சொன்னான்.

இதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய இராயனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். இராயன் இவனைக் கண்டு வரவேற்று "நீர் இங்கே வரவிரும்பினால் மகிமையோடு வராமல் இந்த நீசவேசத்தோடு வருவதேன்? " என்று வினவினான் .இதற்கு விட்டிக்கின் "இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று பார்க்கவே மாறுவேடத்துடன் வந்தேன்" என்றான் .

இராயன் " என்ன பார்த்தீர்கள் " என்று கேட்டதற்கு , அவன்" நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன :

வியாழக்கிழமையும் , வெள்ளிக்கிழமையும் துக்கமாயிருந்து, சனிக்கிழமை சந்தோசமாயிருந்தீர் .இரண்டாவது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் நல்ல குழந்தையை கண்டதுமல்லாமல், தேவரீரும் சேவகரும் நன்மை வாங்கினபோது அந்தக் குழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர்கள் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும், சில சேவகர்கள் வாயில் கஸ்தியோடு கட்டாயம்போல போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நானறியேன். தேவரீர் துக்கமாய் இருந்ததற்குக் காரணம் இன்னதென்றும் அறியேன் என்றான்.

இராயன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு " வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய கர்த்தர் இயேசுநாதருடைய திரு மரணத்தின் சடங்குக்குகளைச் செய்ததினால் அவர் திரு மரணத்தின் பேரில் நாம் வைத்த இரக்கத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கு செய்ததினால் அன்றைக்கு நாங்கள் சந்தோஷமாயிருந்தோம்" என்று சொன்னான் .

பிறகு இராயன் தேவநற்கருணையின் இரகசியத்தையும் சொல்லி "திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுநாதரை நான் காணதிருக்கையில் அவரை நீர் கண்டதினால் முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியதிருக்கிறது . சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை வாங்கியதால் அதிலிருக்கிற இயேசுநாதர் அவர்கள் வாயிலே கட்டாயமாய்ப் போவதைக் கண்டீர்" என்று சொன்னான் . அந்தத் பிரபு இதையெல்லாம் கேட்ட பிறகு கிறிஸ்தவ மதத்தில் சேர அவனுக்கு ஆசை வந்தது . உடனே உபதேசம் கேட்டு மேற்றிராணியாரான புனித எரிபேர்த் என்பவர் கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு இராயனே ஞானத்தகப்பனாயிருந்தான் .

அன்பான இறைமக்களே! அந்த ரோமாபுரி இராயன் இயேசுநாதர் பேரில் வைத்த இரக்கத்தினால் பெரிய வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக்கிழமையில் மனவருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள் . வெள்ளிக்கிழமைதோறும் கர்த்தர் நமக்காக அனுபவித்த துன்பங்களை சிந்தனை செய்து அவர் பேரில் உங்களுக்கு இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும்.

சேவகர்கள் தேவநற்கருணை வாங்கும் போது இயேசுநாதர் சில சேவகர்களிடம் சந்தோஷமாய் எழுந்தருளினார். சில சேவகர்களிடம் துக்கத்தோடு எழுந்தருளினார். கர்த்தர் உங்களிடத்தில் சந்தோஷமாய் எழுந்தருளத்தக்கதாக நீங்கள் அருளுயிரோடு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் தேவநற்கருணை உங்களுக்கு நன்மையாயிருக்கும் . சாவானபாவத்தோடு நன்மை வாங்குபவர்களுக்கு அந்த தேவநற்கருணை தானே ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.