இஸ்பிரீத்துசாந்து

1. விசுவாசப் பிரமாணத்தின் 8-ம் பிரிவைச் சொல்லு.

“இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன்.”


2. இந்தப் பிரிவில் நாம் விசுவசிக்கிறதென்ன?

இஸ்பிரீத்துசாந்துவானவர் அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளென்றும், அவர் பிதாவினிடமிருந்தும், சுதனிடமிருந் தும் புறப்பட்டு வருகிறாரென்றும் விசுவசிக்கிறோம்.


3. பிதாவையும் சுதனையும்  விசுவசிக்கிறதுபோல் இஸ்பிரீத்து சாந்துவையும் ஏன் விசுவசிக்கிறோம்?

ஏனெனில் பிதாவும், சுதனும் மெய்யான சர்வேசுரனா யிருப்பதுபோல், இஸ்பிரீத்துசாந்துவும் மெய்யான சர்வேசுரனா யிருக்கிறார்; பிதாவோடும், சுதனோடும் ஒரே சர்வேசுரனாயிருக்கிறார்.


76. (4) சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன செய்தார்?

தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பினார்.


1. சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புவதாக வாக்குக் கொடுத்திருந்தாரா?

சேசுகிறீஸ்துநாதர் திவ்விய இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புவதாக தாம் மரணமடைகிறதற்கு முன் பலமுறை வாக்குக் கொடுத்திருந்தார்.  விசே­மாய் இராப்போசனத்துக்குப் பின் அப்போஸ்தலர்களுக்குச் செய்தருளின பிரசங்கத்தில், சேசுநாதர் அவர்களை நோக்கி:  “நான் போவேனாகில், தேற்றுகிறவரை (அதாவது இஸ்பிரீத்துசாந்துவை) உங்களிடத்தில் அனுப்புவேன்” என்றார் (அரு.16:7).  மேலும் ஜெருசலேமுக்குப் போய் தமது வாக்கு நிறைவேறும் வரைக்கும் அங்கேயே இருக்கும்படி, தாம் மோட்சத்திற்கு எழுந்தருளிப் போகும் சமயத்தில் அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றினார் (லூக். 24:49).


2. சேசுநாதர் அந்த வாக்கை எப்போது நிறைவேற்றினார்?

அவர் பரலோகத்துக்கு எழுந்தருளி பத்தாம் நாளாகிய “பெந்தேகோஸ்த்” எனப்பட்ட பண்டிகையன்று இஸ்பிரீத்து சாந்துவை அனுப்பினார்.


3. பெந்தேகோஸ்த் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

கிரேக்க மொழியில் ஐம்பதாம் நாள் என்று அர்த்தமாம். பாஸ்காப் பண்டிகைக்குப் பிறகு ஐம்பதாம் நாளிலே யூதர்கள் தங்கள் நிலத்தில் விளைந்தவைகளைச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.


4. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள்மேல் எவ்வாறு இறங்கிவந்தார்?

ஆண்டவர் தங்களுக்குக் கற்பித்தபடி, அவர் மோட்சத் துக்கு எழுந்தருளினபின், வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொள்ளும்படி அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஜெருசலேம் பட்டணத்தில் கடைசி இராப் போசனம் அருந்தின அறையில் சேர்ந்து, தேவமாதாவோடு ஒன்றித்து, செபித்துக் கொண்டிருந்தார்கள்.  பெந்தேகோஸ்த் பண்டிகையன்று காலை நேரத்தில், பலத்த காற்று அடித்தாற்போல் திடீரென வானத்தினின்று ஓர் முழக்கம் உண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுமையும் நிரப்பிற்று.  அல்லாமலும், அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது (அப். நட. 2:3).   அப்போது அவர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட் டார்கள்.


5. ஏன் சேசுநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிறகு மாத்திரம் இஸ்பிரீத்துசாந்துவானவர் அனுப்பப்பட்டார்?

சேசுநாதர் தமது மரணத்தின் பேறுபலன்களைக் கொண்டு இஸ்பிரீத்துசாந்துவின் அனுப்புதல் என்கிற பிரசாதத் தைப் பெற்றார்.  அந்தத் திவ்விய அனுப்புதல் அவருடைய திருப் பாடுகளின் கனியாயிருக்கின்றது. மனுUகம் மகிமை அடைந்தபிறகு மாத்திரம் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புகிறதற்கு தகுதியாயிருந்தது (அரு. 7:39).  சேசுநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளினபோதுதான் அவருடைய மனுUகம் மகிமைப்பிரதாபத்தை அடைந்தது.


6. ஏன் சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பினார்?

சேசுநாதர் (1) தமது மகிமைக்காகவும்,

(2) அப்போஸ்தலர்களைத் தேற்றி விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறதற்காகவும், 

(3) அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறதற்காகவும்,

(4) அவர்கள் தமது திருச்சபையை ஸ்தாபிக்கத் தகுந்த வர்களாயிருக்கும்படியாகவும், இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பினார்.


7. எப்படி இஸ்பிரீத்துசாந்துவானவர் தம் வருகையால் சேசு நாதரை மகிமைப்படுத்தினார்?

“சத்திய இஸ்பிரீத்துவாகிய அவர் வரும்போது என்னை மகிமைப்படுத்துவார்.  ஏனெனில் என்னுடையதினின்று பெற்றுக் கொண்டு உங்களுக்கு அறிவிப்பார்” என்று சேசுநாதர் திருவுளம் பற்றினார் (அரு. 16:13,14).  மேலும் இஸ்பிரீத்துசாந்து திருச் சபையை ஆரம்பத்திலிருந்தே ஸ்திரப்படுத்திக் கொண்டு வருகிறதி னால் அவர் சேசுநாதரை மகிமைப்படுத்துகிறார்.


8. இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தினாரா?

இஸ்பிரீத்துசாந்துவை அடைவதற்கு முன் அப்போஸ்தலர்கள் சேசுநாதருடைய போதனைகளைக் கண்டுபிடிக்காமல், விசுவாசத்தில் பலவீனர்களாயிருந்து, அவர் உயிர்த்தபின் முதலாய் அவரைச் சர்வேசுரனென்று விசுவசிக்கத் தத்தளித்தார்கள். மேலும் ஞானகாரியங்களைக் கண்டுபிடிக்க அவர்களால் கூடாமல் போயிற்று.  ஒருநாள் சேசுநாதர் அவர்களுடைய கண்டுபிடியாமை யைக் கண்டு, “இவ்வளவு காலமாய் நான் உங்களுடனேகூட இருந்தும், நீங்கள் என்னை அறிந்து கொள்ளவில்லை” என்று சொல்லி அவர்களைக் கண்டித்தார் (அரு. 14:9).

இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர்கள்மேல் இறங்கி வந்து, “தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (அரு. 14:26), “நான் இன்னும் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அநேகக் காரியங்கள் உண்டு.  ஆனால் இப்பொழுது அவைகளைத் தாங்கமாட்டீர்கள்.  நித்திய இஸ்பிரீத்துவாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார்” (அரு. 16:12,13) என்று சேசுநாதர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.  உள்ளபடி:

(1) அவர்களிடத்திலிருந்த சந்தேகங்களும், அறியா மையும் நீங்கி சேசுநாதர் படிப்பித்த சத்தியங்களையயல்லாம் கண்டுபிடித்தார்கள்.

(2) அவர்கள் மறந்துபோன போதகங்கள் எல்லாம் ஞாபகப்படுத்தப்பட்டன.

(3) இன்னும் சேசுநாதர் அவர்களுக்குச் சொல்லா திருந்த சத்தியங்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

(4) மேலும் இஸ்பிரீத்துசாந்து அவர்களை வேதசத்தி யத்தின் தவறாத போதகர்களாக நியமித்து, அவர்களுக்கு விசுவாசம், அறிவு, புத்தி விவேகம் முதலியவைகளைக் கொடுத்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப்ப்படுத்தினார்.


9. எப்படி இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களைப் பரிசுத்தப் படுத்தினார்?

அவரைப் பெறுவதற்கு முன் அப்போஸ்தலர்கள் இலெளகீகப் புத்தியுள்ளவர்களாயிருந்து, உலக நன்மைகளை மாத்திரம் நாடித் தேடித் திரிகிறவர்களாயிருந்தார்கள்.   இப்படியே ஒருநாள் தங்களில் அதிகப் பெரியவனாகக் காணப்படுகிறவன் யார் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது (லூக். 22:24).  மற்றொரு நாளில், அருளப்பரும், இயாகப்பரும் சேசுநாதர் ஏற்படுத்தி வந்த இராச்சியத்தை இவ்வுலக இராச்சியம் என்று உத்தே சித்து, அவர்களில் ஒருவர் சேசுநாதருடைய வலது பாரிசத்திலும், மற்றொருவர் இடது பாரிசத்திலுமாக உட்காரும்படி விசே­ சுதந்தரத்தைக் கேட்டார்கள் (மாற். 10:37). இஸ்பிரீத்துசாந்து வானவர், அவர்கள் இருதயத்தினின்று பாவத்தையும், உலக நன்மைகளின் பேரில் ஆசையையும், சுயபட்சத்தையும் நீக்கி, அவர்களிடத்தில் பக்தி, தேவசிநேகம் முதலிய புண்ணியங்களை வளரச் செய்து தமது வரங்களையும் ஞானக் கனிகளையும் அவர்களுடைய இருதயத்தில் விசே­ விதமாய்ப் பொழிந்தருளி, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினார்.


10. திருச்சபையை ஸ்தாபிக்க இஸ்பிரீத்துசாந்து அப்போஸ் தலர்களை எப்படி தகுந்தவர்களாக்கினார்?

(1) இஸ்பிரீத்துசாந்து வருகைக்கு முன் அப்போஸ் தலர்கள் திறமையற்றவர்களும், கோழைகளுமாயிருந்தார்கள். சேசுநாதர் பாடுபடும்போது அவரைவிட்டு ஓடிப் போனார்கள். சேசுநாதரைக் கொலை செய்த யூதர் தங்களையும் துன்பப்படுத்து வார்களென்று பயந்து ஜெருசலேம் பட்டணத்து வீதிகளில் நடமாடாமல் ஒளிந்து கொண்டு இருந்தார்கள்.

இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றபின் அவர்களுக்கு இருந்த பயம் தெளிந்து, அவர்கள் வீதிகளில் சென்று, சேசுநாத ருடைய தெய்வீகத்தைப் பிரசங்கித்து, சாட்சி சொல்லி, அதனால் நேரிடுகிற எவ்வித பயங்கர உபாதைகளுக்கும், கடைசியாய்க் கொடூர மரணத்துக்குப் பின்வாங்காத தைரியசாலிகளாயிருந்தார்கள்.

(2) சகல மனிதர்கள் அவர்களுடைய பிரசங்கங் களைக் கண்டுபிடிக்கும்படியாக பல பாஷை பேசும் வரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

(3) புறசாதி ஜனங்கள் அப்போஸ்தலர்களால் போதிக் கப்பட்ட வேதசத்தியங்கள் மெய் என்று நிச்சயித்துக் கொள்ளும் படியாக அற்புதங்கள் செய்யும் வரத்தை அவர்களுக்கு அளித்தார்.


11. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கும் சமயத்தில் அவர்களுக்கு ஒரு விசேஷ வரம் கொடுக்கவில்லையா?

“அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும்படிக்கு இஸ்பிரீத்துசாந்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்” என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது (அப். நட.2:4).


12. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள் மேல் மாத்திரமா இறங்கி வந்தார்?

இஸ்பிரீத்துசாந்து கிறீஸ்தவ வேதத்தின் ஆதித் துவக்கத்தில் காணக்கூடாத விதமாய் அநேக முறை விசுவாசிகள் மேல் இறங்கி, பற்பல மேன்மையான வரங்களை அவர்களுக்கு அளிக்கச் சித்தமானார்.  உதாரணமாக:  பற்பல பாஷைகள் பேசவும், தீர்க்கதரிசனங்கள் சொல்லவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும் (அப். நட. 8:7, 10:46, 14:9; 19:6).


13. இப்போது இஸ்பிரீத்துசாந்து இறங்கிவருகிறதில்லையா?  

இப்போது முதலாய் நாம் காணக்கூடாத விதமாய்த் திருச்சபையிலும், ஆத்துமங்களிலும் இறங்கிவந்து இடைவிடாமல் மனித அர்ச்சிப்பை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.


14. நமது ஆத்துமத்தில் எப்பொழுது முதன்முதல் இஸ்பிரீத்து சாந்து வருகிறார்?

நாம் ஞானஸ்நானம் பெறும்போதுதான்.


15. இஸ்பிரீத்துசாந்துவானவர் இப்போது வரும்போது மேற்கூறப் பட்ட மேன்மையான வரங்களை ஏன் கொடுக்கிறதில்லை?

மனிதனுடைய அர்ச்சிப்பு இஸ்பிரீத்துசாந்துவின் அதியுன்னத கிரியையாம்.  மேற்கூறப்பட்ட வரங்கள் இஷ்டப் பிரசாதத்தைப் போல் மனிதனைச் சர்வேசுரனுக்குப் பிரியப்படுத்து கிறதில்லை.  ஆனால் திருச்சபை ஆதித்துவக்கத்தில் பிறருடைய பிரயோசனத்துக்காகவும், மெய்யான திருச்சபையைச் சகலர் முன்னும் உறுதிப்படுத்துவதற்காகவும், அந்த வரங்கள் உதவியா யிருந்தபடியால், இஸ்பிரீத்துசாந்து இவைகளை விசுவாசிகளில் சிலருக்கு அளிக்கச் சித்தமானார்.  “பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசமில்லாதவர்களுக்கு அடையாளமா யிருக்கிறது” என்றார் அர்ச். சின்னப்பர் (1 கொரி. 14:22).


16. இஸ்பிரீத்துசாந்துவானவர் திருச்சபையில் என்ன வேலை செய்கிறார்?

(1) இஸ்பிரீத்துசாந்து தமது இடைவிடாத பிரசன்னத்தால் திருச்சபைக்கு எப்போதும் உயிர் தந்து உதவி புரிகிறார்;

(2) அதைத் தம்மோடு ஐக்கியமாக்குகிறார்;

(3) அப்போஸ்தலர்கள் படிப்பித்த போதனைகள் யாதொன்றிலும் திருச்சபை தவறிப்போகாதபடி, அதை உறுதிப் படுத்துகிறார்;

(4) உண்மையும் பரிசுத்தமுமான பாதையிலிருக்கும் படி அதை ஆண்டு நடத்துகிறார்;

ஆகையால் இஸ்பிரீத்துசாந்து திருச்சபையின் ஆத்துமம் போலிருக்கிறார்.


17. இஸ்பிரீத்துவானவர் திருச்சபைக்கு ஆத்துமம்போல் இருக்கிற தெப்படி?

அர்ச். அகுஸ்தீன் அதை நேர்த்தியாகக் காண்பித் திருக்கிறார். அவர் எழுதுவதாவது:  சரீரத்தின் மட்டில் ஆத்துமத் துக்குள்ள சம்பந்தமென்னவோ, அதே வித சம்பந்தம் சேசுகிறீஸ்து வின் ஞான சரீரமாயிருக்கிற திருச்சபையின் மட்டில் இஸ்பிரீத்து சாந்துவுக்கு உண்டு.  ஒரு சரீரத்தின் சகல அவயவங்களுக்கும் ஆத்துமம் செய்வதை, இஸ்பிரீத்துசாந்து திருச்சபை முழுதுக்கும் நிறைவேற்றுகிறார்.

“மனித ஆத்துமமானது, எந்தச் சரீரத்தோடு ஒன்றித்திருக் கிறதோ, அதன் சகல அவயவங்களுக்கும் உயிர் கொடுக்கிறது.  திருச்சபையின் ஆத்துமமான இஸ்பிரீத்துசாந்துவானவர் விசுவாசி களுக்கு ஞான உயிர் கொடுத்து, சிலர் வழியாகப் புதுமைகள் செய்து, வேறு சிலர் மூலமாக சத்தியங்களை வெளிப்படுத்தி, சிலரிடம் கன்னிமையும், மற்ற சிலரிடம் இல்லற ஒழுக்கமும் துலங்கச் செய்கிறார்.  ஒவ்வொரு அவயவத்துக்குரிய விசே­ தொழிலும், அதை நிறைவேற்ற விசே­ சக்திகளும் இருந்த போதி லும், சகல அவயவங்களுக்கும் உயிர் கொடுப்பது ஒரு ஜீவனே.” 


18. இஸ்பிரீத்துசாந்துவானவர் விசுவாசிகளிடத்தில் என்ன செய்கிறார்?

(1) தமது இஷ்டப்பிரசாதத்தாலும், தாம் பொழிந் தருளும் புண்ணியங்களாலும், தமது வரங்களாலும், எல்லா உதவி வரப்பிரசாதங்களினாலும் விசுவாசிகளை அர்ச்சித்து, ஆத்துமத் துக்குத் தேவ ஜீவியம் கொடுக்கிறார்.

(2) நாம் வரப்பிரசாதத்துக்கு இணங்கி நடந்து, நித்திய சீவியத்தை அடையும்படியாக நமது புத்திக்கு ஞான வெளிச்சம் தந்து மனதைத் தூண்டி எழுப்புகிறார்.

(3) இஸ்பிரீத்துசாந்து நமது ஆத்துமத்துக்குச் சுபாவத் துக்கு மேலான சீவியத்தைக் கொடுப்பதால், அவரைத் திருச்சபை யின் ஆத்துமமென்று சொன்னதுபோலவே, நமது ஆத்துமத்தின் ஆத்துமமென்றும் வேதசாஸ்திரிகள் அழைத்திருக்கிறார்கள்.

“உங்கள் சரீரம், உங்களிடத்திலிருக்கிறவரும், சர்வேசுர னிடத்தில் நீங்கள் பெற்றுக் கொண்டவருமாகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆலயமென்றும், நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றும் அறியீர்களோ?” (1கொரி. 6:19).


19. இஸ்பிரீத்துசாந்துவை இழந்துபோகக் கூடுமோ?

சாவான பாவம் கட்டிக் கொள்ளும்போது, நாம் இஸ்பிரீத்துசாந்துவை இழந்து போகிறோம். ஆனால் சாவான பாவத்திற்குப் பொறுத்தலடைந்தவுடனே மறுபடியும் அவரைப் பெற்றுக் கொள்ளுகிறோம்.


20. இஸ்பிரீத்துசாந்துவின் மட்டில் நமக்கு விசேஷ கடமைகள் உண்டா?

உண்டு.  அவைகளாவன:

(1) நமது ஆத்துமத்தினின்று அவரைப் போக்கடிக் காதபடி சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளாதிருக்கிறது (1 தெச. 5:19);

(2) அவரை மனநோகப் பண்ணும் அற்பப்பாவத்தை முதலாய் விலக்குகிறது (எபே. 4:30);

(3) அவர் அளிக்கும் ஏவுதலை எதிர்க்காதிருக்கிறது (அப். நட. 7:51).

ஆனால் இந்தக் கடமைகளை அனுசரிக்கிறது பற்றாது. இஸ்பிரீத்துசாந்துவின் வழியாகத்தான் சேசுநாதர் சம்பாதித்த பேறுபலன்களைப் பெற்றுக் கொள்ளுகிறோமென்றும், அவர் ஆத்துமத்துக்குத் தேவ இஷ்டப்பிரசாதம் அளிப்பதினால் நமது அர்ச்சியசிஷ்டதனத்திற்கு ஆதிகாரணர் அவரே என்றும், அவர் நமது ஆத்துமத்தைத் தமது மகா பிரிய வாசஸ்தலமாகத் தெரிந்து கொள்ளுகிறாரென்றும் ஞாபகப்படுத்தி, அவர்மீது நாம் விசேஷ பக்தியைக் காண்பிக்க வேண்டும்.