சேசுவின் இரண்டாம் வருகை

1. விசுவாசப் பிரமாணத்தின் 7-ம் பிரிவைச் சொல்லு.

“அவ்விடத்தில் இருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.” 


2. அதனால் நாம் விசுவசிக்கிறதென்ன?

உலக முடிவில் சேசுகிறீஸ்துநாதர் தமது சம்மனசு களோடு மோட்சத்திலிருந்து இறங்கி வந்து, அப்போது உயிரோடு இருக்கிறவர்களையும், உலகமுண்டானது துவக்கி மரித்த சகல மனிதர்களையும் தீர்ப்புச் செய்வாரென்றும், ஒவ்வொருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கபடி பலன் அளிப்பாரென்றும் விசுவசிக்கிறோம்.


3. அது எப்படி நமக்குத் தெரியும்?

நமது ஆண்டவர் வானத்தில் மறைந்துபோனபோது, இரண்டு சம்மனசுகள் அப்போஸ்தலர்களுக்குத் தோன்றி, சேசுநாதர் மறுபடி வருவாரென்று சொல்லியிருக்கிறார்களல்லாமல், நமது திவ்விய கர்த்தர் தாம் உலக முடிவில் வருவதாகப் பலமுறை அறிவித் திருக்கிறார்.  “நான் இருக்கிற ஸ்தலத்திலே நீங்களும் இருக்கத் தக்கதாக, நான் திரும்பி வந்து உங்களை என்னிடத்தில் அழைத்துக் கொள்வேன்” (அரு.14:3).  “மனுமகன்... வருவார்.  அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாகப் பலன் அளிப்பார்” (மத். 16:27, 24:30, 25:31; மாற். 13:26).


4. அவர் எப்படி வருவார்?

மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும், மேகங்களின் மேல் சகல சம்மனசுகளோடு கூட வருவாரென்று சுவிசேஷத்தில் சொல்லியிருக்கின்றது (மாற். 13:26; மத். 16:27, 25:3).


5. சேசுநாதருடைய முதல் வருகைக்கும் இவ்விரண்டாம் வருகைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

(1) சேசுநாதர் முதலில் இவ்வுலகத்துக்கு வந்தபோது வறுமை, சிறுமைக்குள்ளாகி, தரித்திரமாய்க் காணப்பட்டார். இப்போதோ தம்முடைய தெய்வீக வல்லப மகிமையுடன் மேக சிம்மாசனத்தில் எழுந்தருளி வருவார்.

(2) அப்போது மனுக்குலத்தை இரட்சிக்கும் இரட்சகராக வந்தார்.  இப்போதோ தெய்வீக நடுவராக வருவார்.

(3) அப்போது சாந்தமுள்ள ஆட்டுக்குட்டியைப் போலக் காணப்பட்டார். இப்போதோ பயங்கரத் தொனியுடன் கர்ச்சிக்கும் சிங்கத்தைப் போலத் தோன்றுவார்.


6. சீவியர் யார்?

சீவியர் என்னும் பதத்தால் குறிக்கப்பட்டவர்கள் யார் என்று நமக்கு நிச்சயமாய்த் தெரியாது.

(1) மனிதர்களுடைய ஆத்துமங்கள் என்று சில வேத சாஸ்திரிகள் நினைக்கிறார்கள்.

(2) வேறே சிலர், இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருக்கிற நீதிமான்கள் என்று சொல்லுகிறார்கள்.

(3) இன்னும் வேறே சிலர், உலகம் முடிகிறபோது இன்னும் உயிரோடு இருக்கும் மனிதர்கள், அப்போது அவர்கள் மற்ற மனிதர்களைப் போல் சாவார்கள் என்றும் செத்தவுடனே உயிர்ப்பார்கள் என்றும் உத்தேசிக்கிறார்கள்.


7. மரித்தவர் யார்?

அது நமக்கு நிச்சயமாய்த் தெரியாது.

(1) மனிதர்களுடைய சரீரங்கள் என்றும்,

(2) உலகமுண்டான நாள் துவக்கி மரித்த சகல மனிதர்களும் என்று வேதசாஸ்திரிகள் வெவ்வேறு விதமாய் உத்தேசிக்கிறார்கள்.

குறிப்பு: நடுத்தீர்வையின் விசேஷங்கள், மனிதர் முடிவுகளின் விளக்கத்தில் விவரித்துக் காட்டப்படும். (10-ம் பிரிவைக் காண்க.)