4. வேதபோதகம் அனைத்துக்கும் மூலமாக உள்ள சத்தியமாவது சருவேசுரன் ஒருவர் உண்டென்பதேயாம். சருவேசுரன் என்பவர் யார் எனில், எல்லாவற்றையும் படைத்துக் காப்பாற்றுகின்ற எல்லா நல் இலட்சணங்களும் பொருந்திய சுத்த அரூபியேயாம்.
சருவேசுரன் இல்லையென்று மறுக்கிறவர்கள் நாஸ்திகர் அல்லது நிரீச்சுரவாதிகள் (Atheists) என்னப்படுவர். அவர்களுடைய துர்ப்போதகத்துக்கு நாஸ்திகம் அல்லது நிரீச்சுவாதம் என்று பெயர். நாஸ்திகர் நியாயத்திற்கு முழுதும் விரோதமான தப்பிதங்களைக் கைக்கொண்டு, தங்களையும் அணாப்பிப் பிறரையும் அணாப்பிக் கெடுக்கும் ஞானக்குருடராயிருக்கிறார்கள்.
சகலத்திற்கும் ஆதிகாரணமாகிய கடவுள் ஒருவர் உண்டு எனுஞ் சத்தியத்தை நாஸ்திகர் தெளிந்துகொள்ளாமல் இல்லை. தெளிந்துகொண்டாலும், தேவபயமின்றித் தங்கள் ஆசாபாசங்களைப் பின்சென்று, உலக சுகபோகங்களைத் தடையின்றி அநுபவிக்கும்பொருட்டே சருவேசுரன் இல்லை என்று சாதிக்கப் பிரயாசப்படுவார்கள். சருவேசுரன் இல்லையென்று உண்மையாய் நம்பும் மதிகேடர் உண்டோ என்பது சந்தேகமான காரியமாயினும், தங்கள் தப்பெண்ணங்களாலுந் துர் ஒழுக்கங்களாலுமே நாஸ்திகராயிருப்பவர்கள் சிலர் உண்டென்பது நிச்சயம்.
சருவேசுரன் உண்டு என்பதற்கு அநேக பலத்த அத்தாட்சிகள் இருக்கின்றன. முக்கியமானவைகள் எவையெனில், உள்ள எல்லாவற்றிற்கும் ஓர் ஆதிகாரணம் வேண்டும் என்பதும், உலகடங்கலும் காணப்படும் ஆச்சரியமான கிராமமும், மனிதரிடத்தில் விளங்கும் உள்ளுணர்ச்சியும், எல்லாச் சாதிசனங்களும் ஒரு, வாய்ப்படக் கூறும் சாட்சியுமாம்னேயானால், அது புத்திக் குறுக்க அத்தாட ஆவான். அவனே இச்சத்தியத்தால் மறுக்கத் சருவேசுரன் உண்டெனல்.
எல்லாவற்றிற்கும் ஓர் ஆதிகாரணம் வேண்டும்
5. 1-வது, உலகத்திலே ஏதோ ஒரு பொருளாவது இல்லை எனச் சொல்ல முடியாது. இது பட்டப் பகலினுந் தெளிவான சத்தியும். ஆதலால் இதை ஒப்பிக்க அத்தாட்சி வேண்டுவதில்லை. இதை எவனாவது புத்திக் குருட்டாட்டத்தால் மறுக்கத் துணிவானேயானால், அவனே இச்சத்தியத்திற்குப் போதிய அத்தாட்சி ஆவான். எவ்வாறெனில், ஒரு பொருளும் இல்லை என்று சொல்லத் துணிபவன், தன்னிடத்தில் ஒரு நினைவு உண்டாகிறதென்றாவது அறிந்துகொள்ளுகிறான். ஆகவே, தான் உண்டென்று தெளிந்து கொள்ளுகிறான். தான் இல்லையென்றும் தன்னிடம் நினைவு இல்லை என்றுஞ் சொல்ல அவனால் எவ்வாற்றாலுங் கூடாது.
2-வது. யாதேனும் ஒருபொருள் உண்டென்று ஒத்துக் கொள்ளுகிறவன், தானாயும் தன்னியல்பாயும் அவசியமாயும், ஆகவே, அநாதியாயுள்ள ஒரு வஸ்து இருப்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். தானாயிருத்தலையுடைய அவசியமான ஒரு வஸ்து இல்லை என்று சொன்னால், எல்லாப் பொருட்களும் துவக்கமுடையனவென்று சொல்லவேண்டும். அவ்வாறு சொல்லுதல் நியாயத்திற்கு முழுதும் விரோதமாம்.
எவ்வாறெனில், எல்லாப் பொருட்களும், அவற்றுள் ஒன்றாவது நீங்காமல், துவக்கமுடையன வென்றால் அவைகளுக்கு இருத்தலுடைமை வந்த வழி என்ன? தங்கள் இருத்த லுடைமையைச் சூனியத்திலிருந்து பெற்றுக்கொண்டனவா? சூனியமாவது இன்மையாகையால், இன்மை உண்மையைப் பிறப்பித்தல் கூடாது. தங்களிலிருந்து தானே பெற்றுக் கொண்டனவா? தாங்கள் உண்டாகுமுன் இல்லாப் பொருட்களாகையால், தாங்களே தங்களுக்கு இருத்தலைக் கொடுத்தல் கூடாது.
இனி, மற்றப்பொருட்களைப்போலத் தானுந் துவக்கமுடையதாகிய ஒரு மூலவஸ்துவிலிருந்து அவையெல்லாம் இருத்தலைப் பெற்றுக் கொண்டனவென்றால், அதுவும் பொருந்தாது. ஏனெனில், அந்த மூலவஸ்துவும் துவக்கமுடைய தென்னுமிடத்து, அதன் இருத்தலுடைமை சூனியத்தில் இருந்தாவது தன்னிடத்தில் இருந்தாவது உண்டாயிருத்தல் வேண்டும். ஆயினும், மேலேகண்டவாறு எந்த வஸ்துவும் சூனியத்திலிருந்து தன் இருத்தலைப் பெற்றுக்கொள்ளுதலாவது, தானே தனக்கு அதைக் கொடுத்தலாவது கூடாது. ஆதலால், தானாய் அநாதியாய் எப்பொருட்கும் மூலகாரணமாயுள்ள அவசியமான ஒரு வஸ்து உண்டென்றே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
3-வது. இத்தன்மையான அவசிய வஸ்து யாது? பிரபஞ்சமா? அல்ல. ஏனெனில், அவசிய வஸ்துவானது ஏகமாயுள்ளது. அது ஒன்றே ஏகமாயிருப்பதால் அது இல்லாமற்போவதை மனதினாலே உத்தேசித்துக்கொள்ளுதல் தானும் பொருந்தாது. பிரபஞ்சமோ வெவ்வேறான அநேக பொருட்களால் ஆக்கப்பட்டு உள்ளது. அன்றியும், அதன் உறுப்புகளாகிய இன்னின்ன வஸ்து, இல்லை என்று, நியாயவிரோதம் தோன்றாமல், உத்தேசித்துக் கொள்ளுதல் கூடும்.
ஆதலால், பிரபஞ்சமானது அதன் ஒவ்வொ ருபங்கின் மட்டிலும் அநாவசியகமாய் உள்ளது. அதன் உறுப்புகளாகிய வஸ்துக்களில் ஒவ்வொன்றும் இல்லாமற் போகலாம் என்று, நியாய விரோதந் தோன்றாமல், உத்தேசிக்கப்படத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே, பிரபஞ்சத்திலும் அதன் அநாவசியக வஸ்துக்களிலும் நின்று வேறானதும், அவசியமானதும், எப்பொருள்களுக்கும் மேலானதும், எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமானதுமாயுள்ள ஒரு வஸ்துவுண்டென்றும், அந்த வஸ்துவே சருவத்துக்கும் சிருட்டி கர்த்தாவாயிருக்கின்றது என்றும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
உலகமுழுதிலுங்காணப்படும் ஆச்சரியமானகிரமம்
6. உலகத்திலுள்ள எல்லாச் சராசரங்களுள்ளும் ஆச்சரியத்துக்குரிய ஒற்றுமை உண்டு என்பதும், அவ்வொற்றுமையானது ஒவ்வொரு பொருளும் மற்றவைகளுக்காக உண்டாக்கப்பட்டு உள்ளதென்பதைத் தெரிவிக்கின்றது என்பதும் பிரத்தியக்ஷம். வானம் பூமி கடல் காற்று கால பருவங்கள் ஆதியவெல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டு, மற்றவஸ்துக்கள் எல்லாம் தம்முள் இணங்கி நடக்கும்படி செய்கின்றன.
வானத்தை நோக்கினால், அங்கே சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தங்கள் தங்கள் நிலையிலே நின்று தங்களுக்கு உரிய கிரமமான கதியில் ஒருகாலும் பிசகாமல் நடைபெற்றுவருவதைக் காணலாம். உலக ஆரம்பமுதல் கடந்துபோன இலட்சாதி லட்சம் வருஷங்களாக, இரவும் பகலுஞ் சற்றேனும் தவறாமலும் மாறுபடாமலும் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டே வருகின்றன.
பூமியை நோக்கினால், இங்கே எத்தனையோ நூதனங்களைக் காணலாம். யானை முதல் எறும்பு ஈறாக எத்தனையோ கோடாகோடி உயிர்கள் அவ்வவற்றின் கதிக்கேற்ற இந்திரியங்களைப் பெற்று நடமாடக் காண்கிறோம். இந்த மிருகசீவன்கள் எல்லாம் உண்டும் இயங்கியும் தங்கள் தங்கள் இனத்துக்கேற்ப வேறு உயிர்களைக் கிரமமாய்ப் பிறப்பித்துக் கொண்டும் வருகின்றன.
உலகத்திலுள்ள விருக்ஷ சாதிகள் எத்தனை! பலவர்ணப் பூச்செடிகள் எத்தனை! புல்பூண்டுகள் எத்தனை! இவைகளையெல்லாம் உண்டு பண்ண எவ்வளவு ஞானம் வேண்டும்! எவ்வளவு வல்லமை வேண்டும்! மானிட தேகத்திலுள்ள கட்டுமுறையையும் இந்திரியப் பகுப்பையும் பார்த்தால், அது சருவஞானமும் எல்லையில்லா வல்லமையும் சேர்ந்து செய்த அரியதொழிலுக்கு ஓர் அத்தாட்சியல்லவா?
தேகத்திலுள்ள ஒவ்வொரு அவயவமும், ஒவ்வொரு இந்திரியமும், ஒவ்வொரு தசைநரம்பும் திறமையாய் அமைத்த சித்திரவேலைப்பாடு அல்லவா? மனிதனுக்குக் கண் பார்க்கவும், காது கேட்கவும், வாய் பேசவும், கால் நடக்கவுங் கொடுக்கப்பட்டது என்பது பிரத்தியக்ஷம்.
இந்தச் சாங்கோபாங்கமான கிரமத்தைப் பார்த்தால், இதை அமைத்த அரிய தொழிலாளியின் அனந்த ஞானமும் அளவற்ற வல்லமையும் தோன்றுமே. அந்த அரிய தொழிலாளி கடவுளன்றி வேறல்ல. அப்படியல்ல என்று ஆக்ஷேபித்து, அவை எல்லாந் தாமாயுண்டாயின என்றாவது, தற்செயலின் காரியம் என்றாவது கூறுதல் நியாயத்துக்கு ஒவ்வாத மதியினமாம்.
ஒழுங்கும் இசைவும் ஒருசிறிதேனும் பிசகாமல் சூத்திரமமைத்த ஒரு கடிகாரத்தையாவது, குறைபடாமல் முடிந்த ஒரு சித்திரத்தையாவது, சிற்பம் அலங்காரம்பெறச் சமைத்த ஒரு மாளிகையையாவது கண்டவன், இவை தாமாய் அமைந்தன என்பானா? அன்றித் தற்செயலின் காரியம் என்பானா? விவேகமுந் திறமையும் பொருந்திய ஒரு தொழிலாளியாலே இவை உண்டாக்கப்பட்டன என்று நிச்சயித்துக் கொள்ளுவான் அல்லவா?
காணப்பட்ட பிரபஞ்சமாகிய பிரமாண்டத்தின் எல்லாக் கூறுகளையும் நன்றாய்க் கிரகித்துக் கிரமமாய் அமைத்து, ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன் உருவத்தையும் இடத்தையும் இயக்கத்தையும் நிரூபித்து, வெவ்வேறாயுள்ள எல்லாப் பொருட்களும் வேறுபாடு இன்றித் தம்முளொத்து நடக்கும்படி அமைத்த ஞானம் எவ்வளவு வியப்புக்குரியது!
இவ்வாறிருக்க, அகிலலோக சிருட்டிப்பு தற்செயலால் அமைந்ததென்று சாதிப்பது பேதமையிற் பேதமைதானே. அன்றியும், தற்செயல் என்பது ஒருபொருளா? அல்ல. ஆகவே, அதிலிருந்து யாதொன்றும் பிறத்தல் கூடாது. யாதொரு சம்பவத்தின் காரணம் புலப்படாத விடத்து, அச்சம்பவத்துக்குக் காரணம் சொல்லும்படி மனிதர் பிரயோகிக்கும் ஓர் கருத்தில்லாத சொல்லே தற்செயல் என்பதாம்.
அகில லோகமும் அதிலுள்ள சராசரங்களின் ஒற்றுமை நயமும் தற்செயலின் காரியம் எனில், இப்போதும், சுண்ணாம்பு கல்லு மரம் இரும்பு இவை முதலியன தாமாய் இயங்கி, ஒன்றாய்க் கூடி, வீடுகளாகாவோ? பட்டினங்களாகாவோ? இதைக்கண்டவருண்டோ? கேட்டவருண்டோ?
ஒவ்வொருவரிலும் விளங்கும் உள்ளுணர்ச்சி
7. ஒருவன் தனக்கு யாதேனுங் கஸ்தியாவது வருத்தமாவது சடுதியான ஆபத்தாவது நேரிட்டிருக்கையில், அதிலே பிற பால் எவ்வித சகாயமுமில்லை என்று கண்டவுடனே, தான் அது வரையும் விசுவாசமும் வேத ஒழுக்கமுமின்றிச் சீவித்திருந்தாலும், அந்நேரத்தில் ஒரு பரம உபகாரி உண்டென்று சிந்தித்து அவரிடத்தில் அடைக்கலம் புகத் தேடி: கடவுளே, நீயே துணையென்று அழைப்பானல்லவா?
இன்னுமொருவன், பிறர் காணாமல் அந்தரங்கத்தில் யாதொரு துர்ச்செயலைச் செய்து முடித்தவுடனே, மனிதரால் தனக்குயாதோர் தண்டனையும் வராதென்று தெளிந்துகொண்டாலும், தனக்கு வரவேண்டிய தேவ ஆக்கினையை நினைத்து நினைத்து மனச்சாட்சிக் கண்டனமும் விதனமும் அனுபவிப்பானல்லவா?
இந்தச் சுதாவான உணர்ச்சிகள் எங்கேயிருந்து உண்டாகின்றன? சருவலோக சிருட்டிகராகிய கடவுளிடத்தில் நின்றல்லவா? ஆம். இவ்வுணர்ச்சிகள், அனைத்தையும் ஆண்டு நடத்தும் கடவுளானவர், தாம் உண்டென்பதையும் தமக்கு மறைந்ததொன்றும் இல்லை என்பதையும் எல்லா மனிதருடைய இருதயங்களிலும் அழியாத அக்ஷரங்களால் வரைந்திருக்கிறார் என்பதைத் தெளிவாய்க் காண்பிக்கின்றன.
எல்லாச் சாதிசனங்களும் ஒருவாய்ப்படச் சொல்லுஞ் சாட்சி
3. உலகத்தில், கல்வி நாகரீகங்களால் விளங்கும் சனங்கன்றி, மிக்க கொடுமையுங் காட்டுத் தனமுமுள்ள சாதிசனங்களுமே சிருட்டி கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டென்றும், எல்லா மனிதரும் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சகல சாதிசனங்களுக்குள்ளும் இவ் விசுவாசம் உண்டென்பதற்கு, உலக சரித்திரங்களும் எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலுமுள்ள ஞாபக சின்னங்களும் அத்தாட்சி பகருகின்றன.
அட்ட திக்கிலும் காணப்படும் சாதியாரெல்லாம், ஒழுக்கங்களாலும் பிரமாணங்களாலும் வழக்கங்களாலும் கோட்பாடுகளாலும் தம்முள் எவ்வளவு வேற்றுமைப் பட்டவர்களாயிருப்பினும், சருவேசுரன் ஒருவர் உண்டென்பதைப் பற்றியோ எல்லாரும் பேதமின்றி ஒத்து ஒருமொழியாய்க் கூறுகின்றார்கள். பலவாற்றாலும் தம்முள் மிகுதியும் வேறுபட்ட சனம் எல்லாம் இச்சத்தியமொன்றில் பேதமின்றி ஒத்திருப்பதற்குக் காரணமென்ன?
உலக ஆரம்பத்திற்றானே தம்மை மனிதருக்கு வெளிப்படுத்தி, தமது இருத்தல் வல்லமை ஞானம் ஆகிய உண்மைகளை அவர்கள் இருதயங்களில் ஆழமாய்ப் பதித்தருளிய சருவேசுரனே காரணமாம். இந்த விசுவாசமும் உணர்ச்சியும் எவ்வித தப்பெண்ணங்களாலும் அபத்தங்களாலும் துர் ஆசாபாசங்களாலும் துர்மார்க்கங்களாலும் ஒருபோதும் கெட்டழிந்து போகாமல் எப்போதும் நிலைத்தே வருகின்றது.
ஆதலால், உலகமும் அதில் விளங்குஞ் சராசரங்கள் அனைத்தும் சருவேசுரன் ஒருவர் உண்டென்பதற்கு திறம்பாத அத்தாட்சி யாயிருக்கின்றனவென்றும், கடவுள் உண்டென்பது எல்லா மனிதருடைய இருதயங்களிலும் பதிந்திருக்கும் சத்தியமாம் என்றும், இச்சத்தியத்தைப் பூமி அடங்கலுமுள்ள சகலசனங்களும் எப்போதும் ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்றும், ஆகவே, சருவேசுரன் இருப்பது மெய்யேயென்றும் தீர்மானித்துக் கொள்ளக்கடவோம்.