கடவுளும் நாமும் - பிறப்பு

6. மனிதன் பிறப்பது ஒரு முறை மட்டும்தானா?

ஆம், ஒருமுறை மட்டுமே. மனிதனின் ஆன்மா, மனிதக் கருவோடு மட்டும் ஓரே ஒருமுறை மாத்திரம் சேருமேயல்லாது. சிலருடைய கருத்துப்படி பல்வேறு உடல், அல்லது விலங்களின் பிறவியாகப் பிறப்பது இல்லை. பலமுறை இறந்து பிறப்பதுமில்லை. மனித ஆன்மா, மனித உடலோடு மட்டும் சேருமேயன்றி, வேறு எந்தவிதமான பொருளோடும் சேர முடியாது. இதனால் மறு பிறப்பு உண்டென்னும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. மேலும் இந்தக் கொள்கை அபத்தம் என்பது பின் வரும் எடுத்துக்காட்டுகளால் விளங்கும்

முந்தின பிறவியில் செய்த, நற்செயல், தீச்செயலுக்குத் தக்கது போல், உயர்ந்த தன்மையில் பிறப்போம். அல்லது விலங்குகளாய் பிறப்போம் என்கின்றனர். மறுபிறப்புக் கொள்கையர். இது உண்மையானால் நம் வீட்டுப் பசுவும், வீதியில் திரியும் நாயும், அழியாத ஆத்துமத்தை உடையதாயிருப்பதால், மாடும், ஆடும் நாயும். நரியும் நன்மை தீமைகளைச் செய்யக்கூடியவையாக இருக்கின்றன என்று சொல்லக் கூடுமா? ஆத்துமம் தனது புத்தி, மனது முதலிய தத்துவங்களையும் பயன்படுத்தி, அவைகளுக்கேற்ற முயற்சிகளைச் செய்வதற்கு அந்த விலங்குகளல் என்ன சாதனம் இருக்கிறது.

உலகில், எந்த நாட்டிலும், ஆடு, மாடு மிருக வர்க்கத்துக்கு நீதிமன்றம் வைத்திருப்பதாகத் தெரியவில்லையே; நமது மாடு பக்கத்து வீட்டுத் தோட்டத்தை அழித்துவிட்டால், மாட்டின் சொந்தக்காரராகிய நம்மையல்லவா நஷ்டத்துக்குப் பொருப்பாளியாக்குகிறான் பக்கத்து வீட்டுக்காரன்?

அன்றியும், உலகில் எல்லா மக்களும், மனிதனுக்கு அழியாத ஆத்துமம் இருக்கிறது. இறந்தபின் அவனுக்கு ஒருவித வாழ்வு இருக்கிறது என்று, அவனை அடக்கம் செய்யும் முறையிலும். அவனுக்காகச் செய்யும் பிரார்த்தனையிலும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் யாராகிலும் இறந்த மாட்டுக்கும் பன்றிக்கும் நைவேத்தியம் செய்து அடக்கம் செய்ததாக நாம் கேள்வியுற்றதில்லையே!. பொது அறிவு இந்தக் கொள்கைக்கு மாறாக அல்லவா இருக்கிறது!

மேலும், இந்தக் கொள்கையின்படி மனிதன் விலங்குகளையும், கீரை வகைகளையும் உண்ணும் போது, தனக்கு முன் வாழ்ந்த மக்களை உண்ணுகிறான் என்று சொல்ல வேண்டும். அதுபோல, நாமும் ஒரு நாள் மற்றவர்களுடைய உணவாவோம். மனிதப் பிறவியின் இந்த மகத்துவந்தான் என்னே!

இறுதியாக, தத்துவசாஸ்திரத்தில் ஒரு நியாயம்: கண்டிப்புள்ள ஒரு வஸ்துவில், பொருள் (Mater) மாத்திரை (Form) என, இரு காரியங்கள் உண்டு. மாத்திரை தான் ஒரு வஸ்துவை, இந்த வஸ்து எனப்பிரித்துக் குறித்து காட்டுகிறது. ஆட்டுக்கும். மாட்டுக்கும் அதே சடலப்பொருள் தான். விஞ்ஞான முறைப்படி அவைகளை ஆராய்ந்து பார்த்தால், இரண்டு உடலிலும் ஏறக்குறைய அதே விதப் பொருட்கள் காணக்கிடக்கும். ஆனால், ஆடுமாடாகாது மாடு ஆடாகாது. இந்த வேறுபாடு பொருளில் இல்லையென்றால், வேறு எங்கிருந்து வருகிறது? மாத்திரையிலிருந்து, மாத்திரையினிமித்தமே அவைகளுக்குள் உயிர், குணம் முதலியவைகளில் எல்லா வேறுபாடும் ஏற்படுகிறது.

வெளித்தோற்றத்தில் இருந்து வருகிறது என்று சிலர் எண்ணக்கூடும். பொன், மரம், கல் இவைகளால் ஆகிய குதிரைப்பொம்மைகள் இருக்கின்றன. அவைகள் வெளித் தோற்றத்தில் ஒரே சாயல், ஒரே நிறம், ஒரே உயரம். ஆனால பொன்னைக் கல் என்றும், கல்லை மரமென்றும் சொல் லுவோமா? இல்லை. ஏன்? ஒவ்வொரு பொருளின் மாத்திரையும் அதை வேறு பொருட்களிலிருந்து பிரித்து, அதற்கு ஓர் தனிப்பட்ட வஸ்துவுக்குரிய சுபாவத்தைக் கொடுக்கிறது.

இந்த மாத்திரை என்னும் 'Form' ஒரு வஸ்துவுக்கு விசேஷ சுபாவத்தைக் கொடுக்க வேண்டுமானால், மாத்திரையும் பொருளும் ஒன்றாய்க்கூடி ஒரே ஒரு வஸ்துவாக வேண்டியது அவசியம். கூண்டில் கிளி இருக்கிறது. ஆகையால் கூண்டும். கிளியும் சேர்ந்து ஒரே வஸ்துவாகிறதில்லை. கிளி கூண்டின் மாத்திரையில்லை.

மனிதனில் ஆத்துமந்தான் மாத்திரை; சரீரம் பொருள். ஆத்துமமும், சரீரமும் ஒன்றாய்க்கூடி மனிதனாகிய ஒருவஸ்து ஆகிறது. ஆத்துமமும், சரீரமும் இரண்டும் ஒன்றாய்ச் பேர்த்தபின், தனித்தனியே இருக்கும் போது இவைகளுக்கு இலலாத குணங்கள், இப்போது புதிதாய் மனிதனிடத்தில் பிறக்கின்றன. ஆத்துமமே சரீரத்துக்கு உயிர். அசைவு, உணர்ச்சி முதலியவற்றைக் கொடுக்கிறது.

ஆகையால், அதே ஆத்துமம் பற்பல பொருளோடு (Matter) ஒன்றிக்கக் கூடுமானால், எப்போதும் அதே வஸ்து வைத்தான் பிறப்பிக்கும். காரணம், ஆத்துமம் சரீரத்தின் மாத்திரையாயிருக்கிறது; பொருள் ஒரே தன்மையுள்ள சடலப் பொருளாயிருக்கிறது. எனவே, மானிட ஆத்துமம் குறிப்பாக ராமனுடைய ஆத்துமம் வேறு பிறப்பில் பன்றிக்குள் நுழைந்து, அந்தப் பன்றியின் உடலோடு ஒன்றித்தாலும், வெளித்தோற்றத்திற்கு பன்றி போலிருந்தாலும் உண்மையில் அந்தப் பன்றி ராமன் தான்.

எனவே, மறுபிறப்பில் ஆத்துமம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து. பல ஜென்மங்களில் பிறந்து, பாவப் பரிகாரம் அடைகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.