1. ஒன்பதாம் கற்பனையினால் சர்வேசுரன் எவ்வித ஆசையையும், நினைவையும் விலக்குகிறார்?
கற்புக்கு விரோதமான தீய இச்சையையும், நினைவையும் விலக்குகிறார்.
2. கெட்ட ஆசையாவதென்ன?
கெட்ட பாவம் செய்யப் பிரியப்படுகிறது கெட்ட ஆசை யென்று சொல்லப்படும்.
3. கெட்ட நினைவு ஆவதென்ன?
ஒரு பாவத்தைத் தனக்குள் ரூபிகரித்து, அதைச் செய்ய ஆசைப்படாதபோதிலும், அதின்பேரில் கெட்ட பற்றுதலோடும், சந்தோஷத்தோடும் மனம்பொருந்தி யோசிக்கிறது கெட்ட நினைவு என்று சொல்லப்படும்.
4. கெட்ட நினைவுக்கும், கெட்ட ஆசைக்குமுள்ள வித்தியாசம் என்ன?
கெட்ட ஆசைகொள்கிறவன் கற்புக்கு விரோதமான காரியம் இனிமேல் செய்வேன், பேசுவேன், எழுதுவேன், வாசிப்பேன், பார்ப்பேன் என்று இது முதலிய தீர்மானங்கள் செய்வான். கெட்ட நினைவு கொள்ளுகிறவனோ, தனக்குள் ஒரு பாவத்தை ரூபிகரித்து அதைச் செய்ய யாதொரு ஆசைக்கு இடங்கொடுக்காமல், அதன்பேரில் சந்தோஷமாய் நினைக்கிறான்.
5. கெட்ட ஆசைக்கு இடங்கொடுக்கிறது எப்போதும் பாவமா?
செயலால் பாவம் செய்யாதபோதிலும், கெட்ட ஆசைக்கு மனம் பொருந்தி இடங்கொடுக்கிறது எப்போதும் சாவான பாவமாகும். ஏனெனில், செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட காரியத்தை விரும்ப ஒருவனுக்கும் உத்தரவில்லை; மேலும் சர்வேசுரன் வெறுக்கிற காரியத்தை மனதுபொருந்தி ஆசிக்கிறது அவருக்கு ஏற்காத துரோகமாம்.
6. இவ்விஷயத்தைப்பற்றி சேசுநாதர் சொன்னதென்ன?
“ஒரு ஸ்திரீயை இச்சிக்கும்படி அவளை நோக்குகிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று” என்றார். (மத். 5: 28)
7. கெட்ட நினைவுக்கு மனதுபொருந்தி இடங்கொடுக்கிறது எப்போதும் பாவமா?
கெட்ட கிரிகை செய்ய ஆசையில்லாதபோதிலும் கெட்ட நினைவுக்கு மனம்பொருந்தி இடங்கொடுத்து, கிரமந்தப்பின சந்தோஷத்தை அனுபவிக்கத் துவக்கினவுடனே சாவான பாவமாகும்.
8. கற்புக்கு விரோதமான நினைவுகளும், ஆசைகளும் உண்டாகும் போதெல்லாம் பாவமா?
கெட்ட நினைவு அல்லது கெட்ட ஆசை மனதில் தோன்றினவுடனே அதற்கு இடங்கொடாமல் அதைத் தள்ளினால் அற்பப் பாவங்கூட இல்லை. ஆகாத நினைவு, ஆசையானது தள்ளத் தள்ள உடனே திரும்பி வந்தாலும் கொஞ்சமாவது சம்மதிக்காமல், அதைத் தள்ளுகிறவன் பெரிய புண்ணியம் செய்கிறான். இந்தச் சோதனை அடிக்கடி வந்தபோதிலும், அவனிடம் சொற்பக் குறைச்சல் முதலாய் உண்டென்று நினைக்கக்கூடாது. ஆனாலும் அதைத் தள்ளத் தள்ள தாமதிப்பது அற்பப் பாவமாகும்.
சரித்திரம்
அர்ச். சியென்னா கத்தரீனம்மாள் தன் சீவியத்தின் ஒரு காலத்திலே பசாசின் அகோரமான சோதனைகளால் உபாதிக்கப்பட்டாள். அந்தத் துஷ்ட அரூபி அவளுடைய புத்தியை அருவருப்பான ரூபிகரங்களால் நிரப்பி, அவளுடைய இருதயத்தையும் அசுத்த சோதனைகளால் அலைக்கழித்தது. ஒரு சமயத்தில் அவள் நாள் முழுவதும், மிகவும் கெட்ட நினைப்புகளால் சோதிக்கப்பட்டாள். அந்தச் சோதனைகள் முடிந்தபின், நமது ஆண்டவர் அவளுக்குத் தரிசனையாகி, அவளை ஆறுதல்களினால் நிரப்பினார். அப்போது அவள் அவரை நோக்கி, “என் திவ்ய பத்தாவே! நான் பயங்கரத்திற்குரிய நிலைமையில் இருந்தபொழுது நீர் எங்கே இருந்தீர்?” என்று கேட்க, சேசுநாதர்: “நான் உன்னைத் தைரியப்படுத்தி, நீ அவைகளுக்கு இணங்காதபடி உனக்கு உதவி செய்து கொண்டு, உன் இருதயத்தில்தான் வாசம் செய்தேன்” என்றார். அதற்கு அவள்: “என் ஆண்டவரே! என்னுடைய ஆத்துமம் அருவருப்புக்குரிய நினைவுகளால் நிரப்பப் பட்டிருந்தபொழுது, அதன் மத்தியில் நீர் இருந்தீரோ?” என்று கேட்க, சேசுநாதர்: “ஆம்; அந்தச் சோதனைகள் உனக்கு வருத்தமாயும் அருவருப்பாயும் இருந்து, நீ அவைகளை எதிர்த்து, சண்டை செய்ததினிமித்தம் அளவிறந்த பேறுபலன்களை அடைந்தாய். அந்த வெற்றியானது என்னுடைய பிரசன்னத்தால் வந்தது” என்றார்.
9. இந்தச் சரித்திரத்தைக் கொண்டு நாம் அறிய வேண்டியதென்ன?
நாம் படும் சோதனைகள் எவ்வளவு அருவருப்பாயிருந்தாலும், கிலேசப்பட்டு மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட சமயங்களில் நமதாண்டவர் நமது இருதயமத்தியில் பிரசன்னமாயிருந்து, நம்மைத் தைரியப்படுத்தி, நாம் சோதனைகளை எதிர்த்து, அவைகளை ஜெயிப்பதற்கு வேண்டிய உதவியை நமக்குத் தந்தருள்வார். (1 கொரி. 10:13) அன்றியும் நாம் சோதனைகளை ஜெயிப்பதினால், அநேக பேறு பலன்களை அடைந்து கொள்ளக் கூடும்.