தேவ ஆராதனையின் தன்மையும், கடனும்

1. சர்வேசுரனுக்கு எவ்வித வணக்கம் உரியது?

எல்லாவற்றையும் விட மேலான வணக்கம் சர்வேசுரன் ஒருவருக்கு மாத்திரமே உரியது.


2. இந்த மேலான வணக்கத்துக்குப் பெயர் என்ன?

தேவ ஆராதனை என்று பெயர்.


3.  நாம் சர்வேசுரனுக்கு ஆராதனை செய்ய ஏன் கடமைப் பட்டிருக்கிறோம்?

நம்மை உண்டாக்கினவரும், நம்மைப் பராமரித்துக் காப்பாற்றுகிறவரும், நம்முடைய ஆதி கர்த்தரும், கடைசிக் கதியாயிருப்பவரும் அவரே என்கிறதினாலேதான்.


4. தேவ ஆராதனை என்றால் என்ன?

சர்வேசுரன் சுயாதீனரென்றும், நம்மையும் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கிய கர்த்தரென்றும், சர்வத்துக்கும் ஆதியும் கடைசிக்கதியும், எஜமானரும் ஆனவர் அவர்தான் என்றும், அவர் நிகரில்லாதவர் என்றும் அங்கீகரித்து, அவர் சமுகத்தில் நம்மை முழுதும் தாழ்த்திக் கொள்வதே தேவ ஆராதனையாம்.


5. எத்தனை வகை ஆராதனை உண்டு?

உள்ளாராதனை, வெளியாராதனை  ஆகிய இரண்டு வகை ஆராதனையுண்டு.


6. “உள்ளாராதனை” என்றால் என்ன?

வெளியில் காணப்படாமல், நமது புத்தியிலும், இருதயத் திலும், மனதிலும் மாத்திரமே ஆராதனை முயற்சிகள் செய்வதாம்.


7. அந்த உள்ளரங்க ஆராதனையை நாம் எப்படிச் செலுத்தி வருகிறோம்?

நாம் சர்வேசுரனுடைய மகத்துவத்தையும், நன்மைத்தனத் தையும் அவர் நமது பேரில் வைத்த அணைகடந்த நேசத்தையும் யோசித்து, நமது இருதயத்திலேயே வணக்கம், விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், தேவ சித்தத்துக்கு அமைதல் ஆகிய முயற்சி களைச் செய்வதினால் உள்ளாராதனை செலுத்தி வருகிறோம்.


8. ஏன் உள்ளாராதனை செலுத்த வேண்டும்?

(1)  சர்வேசுரன் நமக்குப் புத்தி, மனதை அளித்திருக்கிறபடியால் அவைகளைக் கொண்டு நாம் அவரை ஆராதிக்க வேண்டும்.

(2)  சேசுநாதர் சுவாமி சமாரிய ஸ்திரீயோடு சம்பாஷிக்கும் போது, “சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்க வேண்டும்” என்று திருவுளம்பற்றினார் (அரு.4:24). அந்த வார்த்தை களால், ஞானமாயிருக்கிற சர்வேசுரனை ஞானமும் உண்மையும் அடங்கிய தேவ விசுவாசம், தேவ நம்பிக்கை, தேவசிநேகத்தினால் நாம் ஆராதிக்க வேண்டுமென்று சேசுநாதர் நமக்குப் படிப்பித்தார்.


9. வெளியாராதனை என்றால் என்ன?

நம்மிடத்திலுள்ள தேவபக்தியைக் காணக்கூடுமான விதமாய் வெளியடையாளங்களால் காண்பிக்கிறதாம்.


10. எப்படி அதை செலுத்தி வருகிறோம்?

சர்வேசுரன் சர்வத்துக்கும் ஏக கர்த்தர் என்று எண்ணி சிலுவை அடையாளம் போடுவதினாலும், வாயால் ஜெபிப்பதாலும், முழங்கால்படியிடுவதாலும், கைகுவித்து மார்பைத் தட்டுவதாலும், விசேஷமாகத் திவ்ய பூசை காண்பதாலும் வெளியரங்க ஆராதனை செலுத்தி வருகிறோம்.


11.  ஏன் வெளியாராதனை செலுத்த வேண்டும்?

(1)  சர்வேசுரன் நமக்கு ஆத்துமத்தை மாத்திரமல்ல, சரீரத்தை யும் அளித்திருக்கிறார்.  ஆகையினாலே அவருக்குச் சொந்தமா யிருக்கிற நமது சரீரத்தைக் கொண்டும் அவரை ஆராதிக்க வேண்டும்.

(2)  வெளியாராதனை உள்ளாராதனையின் அடையாளமா யிருக்கிறதுமல்லாமல், அதன் பாதுகாப்புமாயிருக்கிறது.


12. எத்தனை வகை வெளியாராதனை உண்டு?

தனியாராதனை, பொது ஆராதனை ஆகிய இரண்டு வகை வெளியாராதனையுண்டு.


13.  தனியாராதனை என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே செய்யும் ஆராதனை.


14.  பொது ஆராதனை என்றால் என்ன?

கிறீஸ்தவ குடும்பங்கள் அல்லது ஜனக் கூட்டம் ஒன்றாய்க் கூடி சர்வேசுரனை ஆராதிக்கிறது பொது ஆராதனையென்று சொல்லப்படும்.


15.  தனியாராதனை செலுத்த வேண்டுமென்று நமது ஆண்டவர் கற்பித்தாரா? 

“நீயோ செபம் செய்யும்போது உன் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்தி, அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக் கொள்” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (மத்.6:6).


16.  குடும்பங்களும் ஜனக்கூட்டமும் பொது ஆராதனை செய்யக் கடமைப்பட்டிருக்கின்றனவா?

சர்வேசுரன் ஒவ்வொரு மனிதனையும் உண்டாக்கிக் காப்பாற்றி, அவனுக்குச் சகல நன்மையைக் கொடுப்பது எப்படியோ, அப்படியே ஒவ்வொரு குடும்பமும், ஜனசமூகமும் அவருடைய உதவியால் உற்பத்தியாகச் செய்து, அவைகளுக்குச் சகல நன்மையும் தந்தருளுகிறார்.  ஆகையினாலே ஒவ்வொரு குடும்பமும், ஜன சமூகமும் அவருக்குப் பொது ஆராதனை செய்யக் கடமைப்பட்டிருக்கின்றன.


17. குடும்பங்களும், ஜனக்கூட்டமும் பொது ஆராதனை செலுத்து கிறதெப்படி?

குடும்பம் ஒன்றாய்ச் சேர்ந்து கூடி ஜெபிப்பதாலும், கிறீஸ்தவர்கள் கோவிலில் நடக்கும் திருச்சடங்குகளை விசேஷமாய்ப் பூசையைக் காண்பதாலும், கோவில் கட்டுகிறதற்காகவோ அல்லது குருக்களுக்கு உதவியாகவோ தர்மம் செய்வதாலும் பொது ஆராதனை செலுத்தக் கூடும்.


18. பொது ஆராதனை செய்பவர்களுக்கு சேசுநாதர் கொடுத்திருக்கும் வாக்குறுதி என்ன?

“என் நாமத்தினாலே எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நானிருக்கிறேன்” என்று சேசுநாதர் வசனித்திருக்கிறார் (மத். 18:20).


19.  முக்கியமாய் எப்போது சர்வேசுரனை ஆராதிக்க வேண்டும்?

நாம் காலையில் எழுந்திருக்கும்போதும், இரவில் நித்திரை செய்யப் போகும்போதும், செய்ய வேண்டிய வேலையைத் துவக்கும்போதும், முடிக்கும்போதும், கோவிலுக்குள் நுழையும் போதும், தேவத்திரவிய அனுமானங்களைப் பெறும்போதும், கோவிலில் திருச்சடங்குகள் நடக்கும்போதும், விசேஷமாய்ப் பூசை காணும்போதும் சர்வேசுரனை ஆராதிக்க வேண்டும்.