போதகம் 5 இச்சரீரம் ஞான சரீரம் என அழைக்கப்படுவது ஏன்?

"ஞான" என்னும் அடைமொழி புலன்களுக்கெட்டாதது, மறைபொருளானது, அறிவுக்கு மேற்பட்டது, இயற்கைக்கு மேலானது என்னும் பொருள்களைக் கொண் டுள்ளது.

(அ) இங்கு "ஞான" சரீரம் என்றது தேவ சுதனாகிய கிறீஸ்துநாதர் தம்முடன் இணைத்துக் கொண்ட இயல்பான மாம்ச சரீரத்தினின்று வேறுபடுத்திக் காட்டவே. நம் சரீரத் தைப் போல் பல உறுப்புகளைக் கொண்ட இயற்கையான சரீரம் கிறிஸ்துவுக்கும் இருந்தது. ஆனால் இந்த இயல்பான சரீரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தியங்க முடியாது. ஒவ்வொரு உறுப்பும் தனியே பிழைத்து இயங்க முடியாது. அவை அனைத்தையும் ஒன்றுசேர்ந்து இயங்க வைக்கும் சத்துவம் ஒன்று உண்டு. அது மனித சுபாவமேயாகும்.

மனிதக் கரங்களை அல்லது கால்களை அல்லது தலையைக் கவனியுங்கள். அவை உடலின் மற்ற உறுப்பு களைப் பிரிந்து தனித்து வாழ்ந்து, தனித்து செயலாற்று வதில்லை. அவை அனைத்தும் ஒன்றாக இருந்து, ஒன்றாகவே செயல்படுகின்றன.

ஞான சரீரத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றும் கிறிஸ்து வில், சுபாவத்துக்கு மேலான வாழ்வினால் ஒன்றுபட்டிருந்த போதிலும், ஒவ்வொன்றும் தனிப்பட்ட ஆட்கள் ஆவர்; தனித்தனியே செயல்படக் கூடிய ஆட்கள் ஆவர். எல்லா அங்கத்தினர்களும் தங்கள் ஆள்தன்மையை இழந்து ஒரே ஆளாக ஒன்றி விடுவதில்லை. தனித்தனி ஆட்களாகவே இருந்து வருகின்றனர்.

(ஆ) கிறீஸ்துவின் ஞான சரீரம் பல பேர்கள் சேர்ந்து இயங்கும் ஒரு சங்கத்தைப் போல என்று எண்ணி விடலாகாது. ஏனெனில் இத்தகைய சங்கங்களில் பலர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு தலைவரைத் தெரிந் தெடுத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து இயங்குவர். இதுபோன்ற சங்கத்தில், தலைவர் சங்க நியதிப்படி, சமுதாய அமைப்பும் படி தலைவராவார். அவருடைய வாழ்வு மற்ற சங்க உறுப் பினர்களை ஊக்குவிக்கும், ஆண்டு நடத்தும் அளவுக்கு அவர்களோடு தொடர்பு கொண்டு இருக்கலாம். உறுப் பினர்களின் வாழ்விற்கும், தலைவரின் வாழ்விற்கும் இடையில் எத்தகைய பொருத்தமோ தொடர்போ இல்லாமலுமிருக்கலாம்.

ஆனால் இந்த ஞான சரீரத்தில் கிறீஸ்து, இத்தகைய வெறும் சங்கத் தலைவரைப் போன்று அல்ல; உறுப்பினர் களே அமைத்த சட்டத்திற்கு உட்பட்டு, அவர்களைச் செயல்படத் தூண்டும் சாதாரண சங்கத் தலைவரைப் போன்று அல்ல, மாறாக, ஒவ்வொரு உறுப்பினர்களின் உள்ளங்களில் நுழைந்து, உள்ளரங்க வாழ்வையும் பாதிக்கக் கூடிய அளவுக்கு அவர்களுடன் நெருங்கிய உறவு கொள்ளும் தனிப்பெரும் தலைவராயிருக்கிறார். வேர்கள் கொடிகளுக்கு உயிரை அளிப்பது போலவும், தலை மற்ற உறுப்புகளுக்கு உயிரூட்டுவது போலவும், தம்முடன் இணைந்திருக்க விரும்புகிறவர்களுக்கு அபரிமிதமான விதத்தில் தேவ உயிரை அளித்து வருகிறார். இந்த உறவு எவ்வளவு ஆழ்ந்ததெனில், தம் ஞான சரீரத்தின் உறுப்பு களில் கிறிஸ்துவே உயிர் வாழ்வதாகவும், இவ்வுறுப்புகளும் கிறீஸ்துவில் வாழ்வதாகவும் சொல்லலாம். கிறிஸ்துவே ஞான சரீரத்தின் உறுப்புகளின் உயிராகிறார் என்றால் அது மிகைபடக் கூறியதாகாது.

(இ) கிறீஸ்துவின் ஞான சரீரம் என்னும்போது மற்றும் ஒரு கருத்தை மனதில் கொள்ள வேண்டும். அதாவது : இது சுபாவ அமைப்பிற்கு உட்பட்டதன்று. சுபாவ அமைப்பிலுள்ள சரீரம் தனக்கு இயல்பாயுள்ள சக்திகளைப் பயன்படுத்தி வாழ்கிறது; ஆனால் கிறீஸ்து நாதரின் ஞான சரீரம் மனிதனுடைய இயற்கை சக்திகளுக்கு மேற்பட்டதாயிருக்கின்றது. படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் தேவைகளுக்கும் சக்திக்கும் முழுதும் மேலான விதத்தில் இயங்குகிறது. முழுதும் இலவசமாய் அருளப் பட்டு சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தையே சார்ந்ததா யிருக்கிறது. எல்லாப் பொருட்களும் கடவுளைச் சார்ந்தே செயல்படுகின்றன என்பது உண்மை . ஆனால் சர்வேசுரன் தம் படைப்புகளில் இருவிதமாக செயலாற்றுகிறார். ஒன்று, அவரே சிருஷ்டிகளுக்கு அளித்துள்ள சக்திகளுக்குப் பொருந்தும் விதமாக இயற்கைச் சட்டதிட்டங்களுக்கும் ஏற்ற வண்ணம் செயல்புரிகிறார். மற்றொன்று சிருஷ்டி சக்திகளின் இயற்கை விளிம்பைத் தாண்டி சுபாவத்திற்கு மேலான விதத்தில் செயலாற்றுகிறார்.