உரோமான் திருச்சபை விளக்கம். 2

72. ஆகிலும் இது மிகவும் தெளியும்படிக்கு நாம் அறிய வேண்டியதாவது: திருச்சபைத் தலைவர் செய்யத் தகும் இரு தொழில் உண்டாம் முதலாவது, ஞானத் திருச்சபையாகையால் அதிலே உட்பட்ட யாவருக்கும் விசுவாசம் முதலான ஞான வரப்பிரசாதங்களைக் கொடுப்ப வராகவேண்டும். இந்த முதல் தொழிலைச் சேசுநாதர் எப் போதும் இப்போதுந் தாம் ஒருவர் செய்து, தாம் ஒருவரே திருச்சபைத் தலைவர் என்னப்படுவார். இரண்டாவது, காணப்பட்ட திருச்சபையாகையால் அதிலே உட்பட்ட யாவருக்கும் விசுவசிக்கத்தகுஞ் சாத்தியங்களையும், செய்யத் தகும் முறைகளையும், மறுக்கத்தகுந் தப்பிதங்களையும், கண் ணுக்குக் காட்டலும், காதிற்குச் சொல்லலுந் திருச்சபைத் தலைவருக்கு இரண்டாந் தொழிலாகும். இந்தத் தொழிலைச் சேசுநாதர் உயிரோடு உலகிலிருக்கும்போது தாம் ஒருவர் செய்தார். மோக்ஷத்தில் அவர் போய் நம் கண்ணுக்கு அகன்றபின்பு, தாம் ஒருவர் செய்யாமல் அர்ச். இராயப்பரையும், இவரைத் தொடர்ந்து வந்த மற்ற அர்ச். பாப்புகளையுங் கொண்டு செய்ய, காணப்பட்ட திருச்சபைக்குக் காணப்படுந் தலைவராக அவர்களை வைத்து நடத்திக்கொண்டு வருகிறார்.

அப்படியே இராசா தன் நாட்டை விட்டு, நெடுநாள் அகன்றிருந்தால், தன்னிடத்தில் இராசாவாக ஆளும்படிக்கு ஒருவனை வைப்பானல்லோ? ஆகிலும் இதனால் அந்நாட்டில் இரண்டு இராசாக்கள் ஆளுவார்களென்று சொல்லத் தகுமோ? இல்லையே. இராசா ஒருவன், தான் இருக்கும் போது தானே ஆளுவானென்றும், தான் அகன்றபோது தான் தன்னிடத்தில் வைத்த மனிதனைக்கொண்டு ஆளுவானென்றுஞ் சொல்லத்தகுமல்லோ. அவ்வண்ணமே சேசு நாதர் தாம் இங்கிருக்கும் போது திருச்சபைத் தலைவராகத் தாமே ஆண்டாரென்றும், இப்பொழுது அகன்றபின்பு தம்மிடமாக வைத்த திருச்சபைத் தலைவராகிய அர்ச். பாப்புவைக் கொண்டு தாமே ஆண்டுகொண்டிருப்பவரென்றுஞ் சொல்லவேண்டிய முறைமைதானே. இதெல்லாம் இப்படி இருக்கையில் உரோமான் திருச்சபை மாத்திரம் இந்நாள் வரைக்கும் வழுவாமல் நின்றதனாலும், அதிலே மாத்திரம் வழுவாத முறையோடு திருச்சபைத் தலைவர் இடைவிடா மல் தொடர்ந்து வந்ததனாலும், உரோமான் திருச்சபை மாத்திரம் மெய்யான சேசுநாதர் திருச்சபையென்று சொல்லத்தகுஞ் சத்தியந் தானே.

73. ஆகையால் உரோமான் திருச்சபை கத்தோலிக்கு என்னப்படும். அதெப்படியென்றால் கிரேக் பாஷை மொழியாகிய கத்தோலிக்கு என்பதும், பொதுவாய் நிற்கு மென்பதும் ஒக்கும். பொதுவாய் நிற்குந் திருச்சபை என்பதற்கு அர்த்தமோவெனில் எக்குலத்தாரும், எவ்விடத்தாரும், எங்கும் எப்போதும் மோக்ஷக்கரை ஏறுதற்குரிய வழி இதுவென்றும், அதற்கு வேண்டிய வழி இதுவென்றும், இந்தத் திருச்சபையில் ஈடேற்றம் உண்டல்லாதே, அதன் புறத்தில் ஈடேற்றம் இல்லையென்றும் அர்த்தமாகும். உரோமான் திருச்சபை இவ்வகைக் குணத்தை உடையதென்று ஒப்பிக்கும் வழியோவெனில், பதிதர் தாயே மெய்யான திருச்சபைக்கு அப்பாலே கரையேற்றம் இல்லையென்பார்கள். உரோமான் திருச்சபை மாத்திரம் மெய்யான திருச்சபையென்று இப்போது ஒப்பித்தோமே.

ஆகையால் உரோமான் திருச்சபைக்கு அப்பாலே கரையேற்றம் இல்லை. ஆகையால் உரோமான் திருச்சபை மாத்திரஞ் சொன்ன குணத்தையுடையதாகிப், பொது வாய் நிற்குந் திருச்சபை என்னத்தகும். பதிதர் தாம் தம் மோடொவ்வாமல் பல விபரீதங்களைச் சொல்லி இதிலே பிதற்றின தாவது: எந்தச் சமயத்திலேயானாலும் ஞானஸ் நானம் பெற்று விசுவாசத்தோடிருந்தால் கரை ஏறலாம் என்றார்கள். ஆகிலும் எல்லாவற்றையும் அளவிறந்த ஞானத்துடனே தெளிவாய் அறிந்த சர்வேசுரனிடத்தில், கள்ளக் காசு செல்லும் என்றாற்போல், அவரிடத்தில் பொய்யான விசுவாசஞ் செல்லுமென்று நினைப்பார்களோ? மெய்யான விசுவாசமோ வெனில், ஒன்றாயிருக்கும் மெய் யான திருச்சபையிலொழிய அதன் புறத்திருக்கமாட்டா தல்லோ ? அதேதெனில் விபரீதமாய் நிற்கும் புறச்சமை யங்களில் ஒன்றினைப்பற்றி இவர்கள் ஆமென்க அவர்கள் அல்லவென்றதனால், ஆண்டவர் ஆமும் அல்லவும் ஒன்றி னைப்பற்றிச் சொல்லமாட்டாமையால், இரண்டில் ஒன்று அவர் திருவுளம் பற்றினது அல்ல.

ஆகையால் அவர் சொல்லாததைச் சொன்னாரென்று நாம் விசுவசித்தால் பொய்யான விசுவாசமல்லோ . இப்படி இருக்கையில் மெய்யான திருச்சபை இல்லாமல் மெய்யான விசுவாசம் இல்லை. விபரீதஞ் சொல்லமாட்டாதது ஆண் டவர் உண்டாக்கின மெய்யான திருச்சபை ஒன்று மாத்திரமே. ஆகையால், மெய்யான திருச்சபை ஒன்றிலே மாத் திரம், மெய்யான விசுவாசம் உண்டென்று சொல்லக்கட வோம். பதிதரோவெனில் மெய்யான விசுவாசமின்றிக் கரை ஏற்றம் இல்லையென்று ஒத்துக்கொள்ளுகிறார்கள். ஆகையால், மெய்யான திருச்சபை ஒன்றிலே மாத்திரங் கரை ஏற்றம் உண்டென்று சொல்லவுங் கடவார்கள்.

மீளவும் அவனவன் தன் பாவங்களை ஆண்டவர் பொறுத்தாரென்றும், தான் கரை ஏறுவானென்றும், தத்தளியாமல் விசுவாசித்தால் கரை ஏறுவானென்று சொன்ன பதிதர் தாமே இப்படி விசுவசிக்க மாட்டார்க ளென்றும், அதனால் கரை ஏறமாட்டார்களென்றும் எளி தாய் ஒப்பிப்போம். அதெப்படியென்றால் வேதத்தில் எழு தினதையொழிய வேறொன்றும் விசுவசிக்கலாகாதென்று பதிதர் தாமே சொல்லுகிறார்கள். இவருக்கு அவருக்கு ஆண்டவர் பாவங்களைப் பொறுத்தாரென்று வேதத்தில் எழுதப்பட்டதல்லவே. ஆகையால் தன் பாவம் பொறுக் கப்பட்டதென்றும், அதனால் தான் கரை ஏறுவானென்றும் விசுவசித்தல் ஆகாதென்னவுங் கடவார்கள். இதனைத் தாங் கள் விசுவசிக்க மாட்டாமையால் கரை ஏறவுமாட்டார்கள்.

74. ஆகிலும் அவர்கள் விசுவாசமென்னும்போது, சர்வேசுரன் அருளிச் செய்ததை உட்கொண்டு அநுசரிக் கும் விசுவாசம் அல்ல, கரை ஏறுவேனென்று அஞ்சாத நம்பிக்கையென்று நினைக்கிறார்கள். அப்படி ஒருவன் எத் தனை பாவியாய் நடந்தாலுஞ் சேசுநாதர் பலத்தினால் கரை ஏறுவேனென்று அவன் தளராமல் நகபின மாத்திரத்தில், தப்பாது கரை ஏறுவானென்பார்கள். ஆகிலும் மதி கெட் டவன் நம்பிக்கை இதுதானல்லோ ? இது ஒரு உவமையால் வெளியாகும் படிக்கு வடக்கிலிருக்கும் நாட்டு இராசாங்கத் தின் முடியைச் சூட வரச்சொல்லி அழைக்கப்பட்ட ஒரு வன், கீழ்த்திசை நோக்கிப் போகையில், இது வழி அல்ல என்றார்க்கு , இது வழி அல்லாதாயினும் அந்நாட்டில் சேரு வேனென்றும், முடியைச் சூடுவேனென்றுஞ் சற்றுந் தளராமல் நம்பியிருக்கிறேன். இந்த நம்பிக்கையால் வடதிசைப் போகாமலும், வடநாட்டூரில் சென்று இராசாங்கம் அடை வேனென்றால் அவனை எல்லாரும் மதி கெட்டவனென்று நகைப்பார்களொழிய அவன் சொன்னதை ஒருவனாயினும் ஒத்துக்கொள்ள மாட்டான்.

அப்படியே மோக்ஷ இராச்சியத்தில் சேர்ந்து முடி யைச் சூடும்படிக்கு தேவகற்பனை வழியாகையால், அவ் வழி விட்டுப், பாவமாகிய பெரும் பாதையில் போகிறவன் சேருவேனென்றும், கரை ஏறுவேனென்றுஞ் சற்றும் அஞ்சாமல் நம்பினாலும், கரை ஏறுவானோ? இல்லையே. இப்படியுங் கரை ஏறுவானென்று மதிகெட்டவனொழிய அநுசரிப்பார் ஆருமில்லை. அர்ச். மத்தேயு எழுதின சுவி சேஷம் 19-ம் அதிகாரம் 16- ம் வசனத்தில் ஒருவன் சேசு நாதரை அண்டி சுவாமீ , என்னத்தைச் செய்து நித்திய சீவனை அடைவேனென்றான். அதற்குச் சேசுநாதர் . நித் திய சீவனை அடைய வேண்டுமாகில், அதனை அடைவா யென்று சந்தேகப்படாமல் நம்புவாயாக வென்றாரோ? இல்லையே. அடைய வேண்டுமானால் தேவகற்பனை மீறாமல் நடப்பாயாக என்றார் அல்லோ ?

அப்படியே அர்ச். யாகப்பர் எழுதின நிருபம் 2ம் அதிகாரம் 14-ம் வசனத்தில் சொன்னதாவது : தம்பிமாரே! விசுவாசத்தைக் கொண்டிருக்கிறேனென்று ஒருவன் நல் லொழுக்கம் இல்லானாகில் பலன் என்ன? அவனை விசுவா சம் ஈடேற்றுமோவென்றார். மீளவும் அவர் தாம் அங்கே தானே 20-ம் வசனத்தில் நல்லொழுக்கமில்லாத விசுவாசம், உ.யிரில்லாத பிணம் என்றார். ஆகையால் விசுவாசம் உள்ள வன், கரை ஏறுவானென்று பல இடத்தில் வேதத்தில் எழுதப்பட்டது மெய்தானாயினும் அதற்கு அர்த்தமேதெ னில், விசுவாசஞ் சகல புண்ணியங்களுக்கும், மோக்ஷ இராச்சியத்துக்கும் வாசலாகி, ஆண்டவர் திருவுளம் பற்றி னதை விசுவசியாதவன் கரை ஏறமாட்டான். ஆகிலும் விசுவாசித்தாலும், நம்பினாலுந் தேவகற்பனையின் படியே நடவாதவனும், கரை ஏறமாட்டானென்பதற்குச் சந்தேக மில்லை .

அப்படியே காமாதுரர், கள்ளர், உலோபிகள், விசுவாச மில்லாமல் பசாசு ஆராதனை செய்தவர்களோடே மோக்ஷ விராச்சியத்தை அடையார்களென்று அர்ச். சின்னப்பர் சொன்னதும் அல்லாமல், இத்தகைப்பட்ட வசனங்கள் வேதத்தில் எங்கும் எழுதப்பட்டதனால் புண்ணிய நடக்கை யில்லா த விசுவாசமும், நம்பிக்கையும் ஈடேற்றத்துக்குப் போதுமென்று சொல்லவும், கருதவுங் கூடாது. ஆகை யால், சேசுநாதர் உண்டாக்கின மெய்யான திருச்சபை ஒன்றிலே மாத்திரம், சேசுநாதர் பாடுபட்ட பலன்கள் உண் டாகி, அதிலே மாத்திரம் மெய்யான விசுவாசமும், மெய் யான புண்ணியமும், மெய்யான கரை ஏற்றமும் உண்டாம். ஆகையால், முன் ஒப்பித்தபடி உரோமான் திருச்சபை மாத் திரமே, சேசுநாதரால் உண்டாக்கப்பட்ட மெய்யான திருச் சபையாகையால், அதிலே மாத்திரம் அப்படிப்பட்ட விசு வாசமும், புண்ணியமும், ஈடேற்றமும் உண்டாகி அதனுட் படாமல் ஒருவரும் மோக்ஷக் கரை ஏறமாட்டார்கள். எவ ருக்கும் பொதுவாய் நிற்குந் திருச்சபை உரோமான் திருச் சபைதானே.

75.- ஆகையால், ஞானஸ்நானம் பெற்றாலும், உரோ மான் திருச்சபைக்கு அப்பாலே நின்ற யாவரும், பொதுச் சபை உணர்ச்சிகளை விட்டு, விசேஷ அபத்த விதிகளை அது சரித்தவராகையால், வடமொழியால் பதிதரென்றும், தமிழ் மொழியால் புறச்சமயத்தாரென்றும், தங்கள் சமயத்தை உண்டு பண்ணினவனைப்பற்றி லுத்தேரானிகளென்றும், கல் வீனியானிகளென் றுஞ் சொல்லக்கடவார்கள். தரங்கம் பாடிப் பதிதரோவெனில், தங்களைச் சுவிசேஷிகளென்பார் களாம். ஆகிலும், பூர்வகாலத்தில் உரோமாபுரிப் படைத் தலைவர் சங்கரித்த நாட்டின் பெயர் தங்களுக்கு எடுத்துக் கொண்டு, ஆப்பிரிக்கா நாட்டைக் கெடுத்தவன் ஆபிரிக்க னென்றும், ஜெர்மானிய இராச்சியத்தைக் கெடுத்தவன் ஜெர்மானியனென்றும், ஆசியா சீர்மையைக் கெடுத்தவன் ஆசியாடிக்கென்றும் பெயராகக் கொண்டார்கள்.

இத்தன்மையால் அந்தப் பதிதருஞ் சுவிசேஷத்தைக் கெடுத்தார்களென்ற அடையாளமாகச் சுவிசேஷிகளென் னும் பெயர் வேண்டுமாகில் செல்லுமொழிய லுத்தேர் சொன்ன அபத்தங்களை அநுசரித்தவராகையால் லுத்தேரா னிகளென்றும், லுத்தேர் மதக்காரரென்றுஞ் சொல்லப்படு வார்கள். இல்லாவிட்டால், லுத்தேர் தப்பறைக்காரனென் றும், லுத்தேர் மதம் ஈடேற்றம் இல்லாததென்றும், தாங் களும் மறுத்து வெறுக்கக்கடவார்கள்.