செப்டம்பர் 29

அதிதூதரான அர்ச். மிக்கேல்

ஆதியில் சர்வேசுரன் அசரீரிகளான கணக்கற்ற சம்மனசுகளைப் படைத்து, லூசிஃபேர் என்பவனை அவர்களுக்குத் தலைவனாக ஸ்தாபித்து, அவர்களை ஒரு சோதனை ஸ்தலத்தில் வைத்தார். தங்களுக்குள்ள அழகு வடிவையும் ஞானத்தையும் பலத்தையும் கண்ட லூசிஃபேரும் அவனைச் சேர்ந்தவர்களும் கர்வங்கொண்டு, சர்வேசுரனுக்கு கீழ்ப்படியாததைக் கண்ட மிக்கேல்: “சர்வேசுரனுக்கு சமமானவன் யார்?” என்று கூறி லூசிஃபேரையும் அவனைச் சேர்ந்தவர்களையும் நரகத்தில் விழத் தள்ளி, அவர்கள்மேல் வெற்றிகொண்டார். இவருடைய பிரமாணிக்கத்தைக் குறித்து சர்வேசுரன் இவரை சம்மனசுகளுக்குத் தலைவராக ஏற்படுத்தினார். ஆதிகாலத்தில் யூதருக்குத் துணையாக இருந்து, அவர்களைப் பல சங்கடங்களிலிருந்து காப்பாற்றி, வழி காட்டி, அவர்கள் செய்த யுத்தங்களில் அவர்களுக்கு உதவி செய்து, வெற்றியடையச் செய்தவர் அர்ச். மிக்கேல் சம்மனசானவரே. மேலும் அர்ச். மிக்கேல் சம்மனசானவர் திருச்சபைக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நமக்குத் தந்திர சோதனைகளை வரவிட்டுக் கெடுக்கப் பார்க்கும் பசாசை அகற்றுபவரும், அவஸ்தை நேரத்தில் நமக்கு உதவுகிறவரும் இவரே. உத்தரிக்கிற ஸ்தலத்தினின்று ஆத்துமங்களை மோட்சத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறவரும், கடைசி காலத்தில் அந்தி கிறீஸ்துவோடு போர் புரிந்து அவனை நரகத்தில் தள்ள இருப்பவரும் இவரே. தீர்வை நாளில் ஒவ்வொருவனுடைய பாவ புண்ணியத்தை வரையறுக்கும் வேலை அர்ச். மிக்கேல் சம்மனசானவருக்கே உரியது. ஆகையால் மோட்சத்தின் பிரதானியும், திருச்சபையின் பாதுகாவலரும், நரகத்தின் பயங்கரமுமான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் திருநாளாகிய இன்று நரகப் பேயின் தந்திரங்களினின்று நம்மை காப்பாற்றும்படி இவரை மன்றாடுவோமாக.  


நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் உண்டாகும் தீமையினின்று நம்மைக் காப்பாற்றி, விசேஷமாக மரணநேரத்தில் நமக்கு உதவி புரியும்படி இந்த மகா சம்மனசைப் பார்த்து வேண்டுவோமாக.