செப்டம்பர் 28

அர்ச். வென்செஸ்லாஸ் - வேதசாட்சி - (கி.பி. 935).

பொகிமியா தேச பிரபுவின் குமாரனான வென்செஸ்லாஸ், வேதசாட்சியான தன் பாட்டியால் தர்ம வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டு, சிறு வயதிலேயே அர்ச்சியசிஷ்டவராய்க் காணப்பட்டார். இவருடைய தந்தை இறந்தபின், துஷ்ட குணமுள்ள இவருடைய தாயார் அந்நாட்டை ஆண்டு, கிறீஸ்தவ வேதத்தை அழித்துவிட்டு அஞ்ஞானத்தை அதில் பரவ செய்ய விரும்பி, வேதத்திற்கு விரோதமான அநியாய சட்டங்களை ஏற்படுத்தினாள். இதைக் கண்ட வென்செஸ்லாஸ் துக்கித்து, தன் நாட்டு மக்களின் சம்மதத்துடன் அத்தேசத்தை ஆண்டு, அநியாய சட்டங்களை நீக்கினார். மக்களுக்கு தேவையான பிரயோசனமுமான சட்டங்களை ஏற்படுத்தி, அவர்களை அன்புடன் பரிபாலித்து, திருச்சபை பரம்புதலுக்காக சகல முயற்சிகளையும் செய்துவந்தார். இவர் தேசத்தின் நன்மைக்காக உழைத்த போதிலும் வெகு நேரம் ஜெபத்தில் செலவழிப்பார். தேவநற்கருணை மீது அதிக பக்தி வைத்து, இரவு வேளையில் தேவநற்கருணைமுன் வேண்டிக்கொள்வார். இவரே தமது கையால் கோதுமையும் திராட்சையும் பயிரிட்டுப் பூசைக்கு வேண்டிய அப்பமும் இரசமும் செய்து கொடுப்பார். இவரது துஷ்ட தாயார் தன் இளைய குமாரனை அஞ்ஞானத்தில் வளர்த்து, வென்செஸ்லாஸைக் கொல்வதற்கு தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தாள். ஒரு நாள் இவருடைய சகோதரன் தன்னுடன் விருந்தாடும்படி இவரைக் கபடமாய் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான். விருந்துண்டு நடுச்சாம வேளையில் இவர் கோவிலுக்குச் சென்று தேவநற்கருணைமுன் ஜெபிக்கையில் இவருடைய சகோதரன் தன் ஊழியருடன் கோவிலுக்குச் சென்று தன் கையாலேயே வென்செஸ்லாஸைக் கொலை செய்தான். இவ்வாறு வென்செஸ்லாஸ் மண்ணுலகுக்குப் பதிலாக விண்ணுலகைச் சுதந்தரித்துக்கொண்டார்.             

யோசனை

நாம் தேவநற்கருணை மீது விசேஷ பக்தி வைத்து, நாள்தோறும் அதில் வீற்றிருக்கும் சேசுநாதரைச் சந்தித்து, நமது துக்க துயரங்களை அவருக்கு அறிவித்து, தேவையான உதவிகளையும், கிருபையையும் பெற அவரை மன்றாடுவோமாக.