நவம்பர் 28

அர்ச். ஸ்டீபன் - வேதசாட்சி - (கி.பி. 764).

முடியப்பர் எனப்படும் ஸ்டீபன், கொன்ஸ்தாந்திநோபிளிலுள்ள பக்தியுள்ள செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து, புண்ணிய வழியில் வாழ்ந்துவந்த இவர், ஒரு துறவற மடத்திற்கு மடாதிபதியானார். இவர் அந்த மடத்தில் ஜெபத்தியானத்திலும் தவமுயற்சிகளிலும் வெகு நேரம் செலவழித்து, கூடை முடைதல், வலை பின்னுதல், புத்தகம் எழுதுதல் முதலிய கைவேலைகளைச் செய்து, ஏழைகளுக்கு உதவி புரிந்து வந்தார். இவர் ஆட்டுத்தோலை ஆடையாகவும், இரும்பு வளையத்தை இடைக்கச்சையாகவும் அணிந்துக்கொண்டார். இவருடைய நடத்தையைக் கண்டு அநேகர் இவருக்கு சீஷர்களானார்கள். அக்காலத்தில் பதிதனான இராயன் திருச்சுரூபங்களை உடைக்கத் துவங்கினான். சகலராலும் அர்ச்சியசிஷ்டவராக எண்ணப்படும் ஸ்டீபன் தன் கருத்துக்கு இணங்கினால், தான் துவக்கின தேவ துரோக வேலை சுலபமாய் நிறைவேறுமென்று நினைத்து, ஸ்டீபனிடம் தூதரை அனுப்பினான். ஆனால் இவர் தன் கருத்துக்கு இணங்காததினால் இவரைப் நாடுகடத்தினான். அவ்விடத்தில் இவருடைய அற்புதங்களாலும், அரிதான புண்ணியங்களாலும் இவர் சகலராலும் துதிக்கப்படுவதை இராயனறிந்து, இவர் மேல் பல குற்றங்களைச் சாட்டினான். ஆனால் இவர் மாசற்றவர் என்று அறிந்த இராயன் இவரைத் தன்னிடம் வரவழைத்து, பாடுபட்ட சிலுவையைக் காலால் மிதிப்பதால் என்ன தவறு என்று வினவ, ஸ்டீபன் ஒரு பொற்காசை கீழே போட்டு, தன் காலால் மிதித்ததைக் கண்டவர்கள், இவர் பெருந் தண்டனைக்குப் பாத்திரவானென்று ஆர்ப்பரித்தார்கள். இதை இவர் கேட்டு, மனித உருவம் பதித்த ஒரு நாணயத்தை மிதிப்பது குற்றமானால், சேசுநாதருடைய சுரூபத்தை மிதிப்பது எப்பேர்ப்பட்ட பாதகம் என்றார். இவர் கூறியதைக் கேட்ட இராயன் சினந்து இவரைக் கொல்லக் கட்டளையிட்டான்.  

யோசனை

கர்த்தருடையவும் அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் சுரூபம், படம் முதலியவைகளை நாம் மரியாதையுடன் ஸ்தாபித்து, அவைகளைப் பக்தியுடன் கண்ணோக்கி, அவர்களுடைய புண்ணிய மாதிரிகையைப் பின்பற்றுவோமாக.