நவம்பர் 27

அர்ச். ஜேம்ஸ் - வேதசாட்சி - (கி.பி. 421).

யாகப்பர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் என்பவர் பெர்சியா தேசத்தில் மிகவும் புகழ் பெற்ற ஓர் பிரபு. இவரை இராயன் உயர்ந்த பதவியில் வைத்து, சிறந்த விருதுகளை இவருக்கு அளித்திருந்தான். அத்தேசத்தில் கிறீஸ்தவர்களுக்கு விரோதமாய் வேதகலகம் உண்டானபோது, ஜேம்ஸ் இராயனுடைய உறவை முறிக்க விரும்பாதவராய் சத்தியவேதத்தை மறுதலித்தார். இதையறிந்த இவருடைய தாயாரும் மனைவியும் வெகுவாக கவலைகொண்டு, இவர் மனந்திரும்பும்படி ஆண்டவரை மன்றாடி வந்தார்கள்.  சிறிது காலத்திற்குப்பின் இராயன் இறந்து புது இராயன் சிம்மாசனம் ஏறினான். அப்போது அவ்விரு பெண்களும் ஒரு கடிதம் எழுதி ஜேம்சுக்கு அனுப்பினார்கள். அது யாதெனில்: இராயனுக்குப் பிரியப்படும்படி உன் தேவனை மறுதலித்தாய். அந்த இராயன் இப்போது எங்கே இருக்கிறான்?  மண்ணிலிருக்கிறான். இவனுடைய வெகுமானத்தை விரும்பி நித்திய கேட்டுக்கு உள்ளான உனக்கும் எங்களுக்கும் இனி யாதொரு உறவும் கிடையாது என்று எழுதினார்கள். இவர் அதை வாசித்தபின் மிகவும் துக்கப்பட்டு, அக்கணமே அஞ்ஞான வேதத்தைவிட்டு சத்தியவேதத்தை அனுசரிக்கத் துவங்கினார். இதையறிந்த புது இராயன் சினங்கொண்டு ஜேம்ஸை கொடூரமாய் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படியே சேவகர் இவரை உபாதித்து, இவருடைய கை, கால்களை சிறு சிறு துண்டுகளாய் வெட்டினதினால், வேதசாட்சி அகோர வேதனையை அனுபவித்து, தன் ஆன்மாவை தன் சிருஷ்டிகர் கையில் ஒப்படைத்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.  

யோசனை

யாதொருவன் வேதத்திற்கு விரோதமாய் நடப்பதை அவனுடைய பெற்றோர், உறவினர்கள் அல்லது சிநேகிதர் பார்க்கும்போது, அந்தப் புண்ணிய ஸ்திரீகளின் செயல்களைக் கண்டுபாவிக்க வேண்டும்.