செப்டம்பர் 23

அர்ச். தேக்ளா - கன்னிகை, வேதசாட்சி - (1-ம் யுகம்).

உயர்குலத்தாரும் செல்வந்தருமான பிறமதத்தைச் சார்ந்த பெற்றோரிடமிருந்து பிறந்த தேக்ளா, மிகுந்த அறிவும், விவேகம் உள்ளவளாயிருந்ததினால், கல்வி சாஸ்திரங்களை வெகு சிறப்பாகக் கற்றுவந்தாள். இக்கோனியா நாட்டில் அர்ச். சின்னப்பர் போதித்த சத்தியவேதத்தை தேக்ளா கேட்டு, அதுவே மெய்யான வேதமென்று நம்பி ஞானஸ்நானம் பெற்றாள். இவளுக்கு 15 வயது நடக்கையில் இவளை ஒரு வாலிபனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாக இவள் பெற்றோர் வாக்களித்திருந்தார்கள். ஆனால் தேக்ளா இதற்குச் சம்மதியாமல், சத்தியவேதத்திற்காக தனது சொத்துக்களையும் பெற்றோரையும் விட்டுவிட்டு வேறு நாட்டிற்கு போனாள். மேற்கூறிய வாலிபன் இவளைத் தேடிப் பிடித்து திருமணத்திற்கு சம்மதிக்கும்படி இவளை மன்றாடினான். இவளோ தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தமையால், திருமணத்திற்கு சம்மதியாததைக் கண்டு, இவள் கிறீஸ்தவளென்று அதிபதிக்கு அறிவித்தான். அதிபதி தேக்ளாவுக்கு நயபயத்தைக் காட்டியும், இவள் வேதத்தில் உறுதியாயிருந்தபடியால் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டாள். அப்போது இவள் சிலுவை வரைந்துகொண்டதினால் யாதொரு சேதமின்றி வெளியே வந்தாள். பின்பு விஷப்பாம்புகள் அடைபட்ட குகையில் இவள் தள்ளப்பட்டபோதும், இவளுக்கு சிறிதளவும் பாதிப்பு உண்டாகவில்லை. பின்பு சிங்கங்களுக்கு இரையாக போடப்பட்டாள். அப்போதும் இக்கன்னிகையின் பாதங்களை நாய்க்குட்டிகளைப் போல அவை நக்கினதே தவிர, இவளுக்கு எவ்வித பாதிப்பும் அவை உண்டாக்கவில்லை. பிறகு தேக்ளா விடுதலை செய்யப்பட்டு, தன் புத்திமதியாலும் புதுமைகளாலும் அநேகரை சத்தியவேதத்திற்கு மனந்திருப்பி, 90 வயது வரை ஆண்டவருக்கு நல்ல ஊழியம் செய்து, மோட்ச சம்பாவனையைப் பெற பாக்கியம் பெற்றாள்.          

யோசனை

நமது ஆத்துமத்திலும் சரீரத்திலும் நாம் அனுசரிக்கும் பரிசுத்ததனமே, நம்மில் கிளம்பும் தந்திர சோதனைகளை ஜெயிக்க உதவியாயிருக்குமென்று நிச்சயித்து, அப்பரிசுத்த புண்ணியத்தை கடைப்பிடிப்போமாக.