செப்டம்பர் 01

அர்ச். ஜிலெஸ். மடாதிபதி - (7-ம் யுகம்).

இவர் இராஜ வம்சத்தராயிருந்தும், உலக செல்வ பாக்கியங்களைப் பொருட்படுத்தாமல், தன் ஆன்ம இரட்சண்ய வேலையில் ஆவல்கொண்டு, புண்ணியங்களைப் புரிந்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தார்.

தனது பெற்றோர் மரித்தபின் தனக்கிருந்த திரண்ட சொத்துக்களை கேட்போருக்குப் பகிர்ந்து கொடுத்தார். இவர் ஒருநாள் பிரயாணம் செய்கையில், நிர்வாணியான ஒரு ஏழை அவரிடம் தர்மம் கேட்டபோது, தமது மேல் சட்டையைக் கழற்றி அவனுக்குக் கொடுத்தார்.

அவன் அதை அணிந்தவுடனே அவனுக்கிருந்த தொழுநோய் சுகமானது. பின்னும் தாம் செய்த வேறு புதுமைகளைக் கண்ட ஜனங்கள், தம்மைப் புகழ்ந்து கொண்டாடினதினால், அவ்விடத்தைவிட்டு பிரான்ஸ் தேசத்திற்குப் போய் ஒரு வனாந்தரத்தில் தனிமையில் ஜெபத் தியானங்களைச் செய்து, இலை, காய், கனிகளைப் புசித்து ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தார்.

மேலும் ஒரு பெண்மான் நாள்தோறும் அவர் இருக்கும் குகைக்குப் போய், அவருக்குப் பால் கொடுக்கும். ஒருநாள் அந்தக் காட்டில் வேட்டையாடப் போன பிரான்ஸ் தேசத்து இராஜா மேற்கூறப்பட்ட மான் மூலமாக ஜிலெஸைக் கண்டு, அதிசயித்து, அவரை மகிமைப்படுத்தினார்.

இராஜாவின் கோரிக்கைப்படி, அவர் பட்டணத்திற்குப் போக மனமில்லாதிருந்ததினால், அரசன் அவ்விடத்தில் அவருக்கு ஒரு பெரிய மடத்தைக் கட்டிக்கொடுத்தான்.  ஜிலெஸ் அங்கு சேர்ந்த துறவிகளுக்கு அதிபராகி, அவ்விடத்திலும் பல புதுமைகளைச் செய்து புண்ணிய வாழ்வில் உயர்ந்து, இவ்வுலகத்தை விட்டு நித்திய மோட்சானந்த பாக்கியத்தில் பிரவேசித்தார்.

யோசனை
ஜனக்கூட்டத்தையும் சந்தடியையும் விட்டு விலகுகிறவன் அநேக பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்வான்.