சேசுநாதர் சுவாமி மனித அவதாரம் பாகம் 1

1. விசுவாசப் பிரமாணத்தின் மூன்றாம் பிரிவைச் சொல்லு.

“இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.” 


2. இம்மூன்றாம் பிரிவில் என்ன விசுவசிக்கிறோம்?

தேவசுதன், மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால், கன்னிமரியாயின் மகா பரிசுத்த உதரத்தில் மனித சுபாவத்தை, அதாவது மனித சரீரத் தையும் ஆத்துமத்தையும் எடுத்து, அவர்களிடமிருந்து மனிதனாய்ப் பிறந்தாரென்று விசுவசிக்கிறோம்.


3. தேவசுதன் “மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய்” உற்பவித்தார் என்று ஏன் சொல்வானேன்?

குழந்தையானது தாய் தகப்பனிடத்திலிருக்கிற சக்தியினால் உற்பவிக்கிறது சுபாவ ஒழுங்கு.  சேசுநாதருடைய சரீரம் தகப்பனில்லாதபடி இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் மாத்திரம் தேவமாதாவின் உதரத்தில் உற்பவித்ததினாலே அவர் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் உற்பவித்தார் என்று சொல்ல வேண்டும்.


46. (22)  நம்மை இரட்சிப்பதற்காக மனுஷனாய்ப் பிறந்தவர்  யார்?

அர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன்தான்.


1. மனிதனாய்ப் பிறந்தார் என்கிறதினாலே நாம் என்ன கண்டு பிடிக்க வேண்டும்?

சுதனாகிய சர்வேசுரன் ஒரு மெய்யான சரீரத்தையும், ஒரு மெய்யான ஆத்துமத்தையும் தமக்கு எடுத்து நம்மைப் போல மெய்யான மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.


2. இந்த ஆத்துமத்தையும் சரீரத்தையும் யாரோடு சுதனாகிய சர்வேசுரன் சேர்த்தார்?

பிதாவோடு அல்லது இஸ்பிரீத்துசாந்துவோடு அல்ல, ஆனால் தமது சொந்த ஆளோடு சேர்த்துக் கொண்டார்.


3. எப்போது சுதனாகிய சர்வேசுரன் மனுஷ சுபாவத்தோடு ஐக்கியமானார்?

கன்னிமரியாயினிடத்தில் ஒரு சரீரம் உருவாக்கப்பட்ட கணமே, ஆத்துமமும் சிருஷ்டிக்கப்பட்டு சரீரத்தோடு ஒன்றித்தது; அப்போதே சுதனாகிய சர்வேசுரனும் ஆத்தும சரீர ஐக்கியத்தால் உணடான மனுஷ சுபாவத்தைத் தம்மோடு ஒன்றித்தருளினார்.


4. சர்வேசுரன் மனிதனாய்ப் பிறந்தார் என்பதினாலே, பிதாவும் இஸ்பிரீத்துசாந்துவும் மனிதராய்ப் பிறந்தார்கள் என்று கண்டுபிடிக்கலாமா?

கூடாது.  சர்வேசுரன் மனிதனானார் என்று சொல்லும் போது, இரண்டாம் ஆளாகிய சுதன்தான் மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் பிதாவும் இஸ்பிரீத்து சாந்துவும் மனித அவதாரம் எடுக்கும் திருத்தொழிலில் இவரோடு சேர்ந்து இருந்தார்கள்.


5. சுதனாகிய சர்வேசுரன் ஏன் மனிதனானார்?

“மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சணியத் தினிமித்தமும்” தேவசுதன் மனிதனானார் என்று “நீசே” என்கிற பிரமாணத்தில் வசனித்திருக்கின்றது.  ஆகையால்:

(1) நமது பாவத்துக்குச் சரியான பரிகாரம் செய்யவும், 

(2) தமது போதனையாலும், முன்மாதிரிகையாலும் நமக்கு இரட்சணிய பாதையைக் காண்பிக்கவும்,

(3) தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கவும்,

(4) சர்வேசுரனுடைய சிநேகத்தில் நம்மைத் திரும்ப நிலைநிறுத்தவும், 

(5) இவ்விதம் நம்மை மோட்ச மகிமையில் கொண்டு சேர்க்கவும், சுதனாகிய சர்வேசுரன் மனிதனாகச் சித்தமானார்.


47. (23) அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாகப் பிறந்தார்.


1. சுதனாகிய சர்வேசுரன் நம்மைப்போல் உற்பவித்து, ஒரு தாய் தகப்பனுக்குப் பிறந்தவரா?

அவர் ஒரு தகப்பனுக்குப் பிறக்காமல் ஒரு தாய்க்கு மாத்திரமே பிறந்தார்.


2. அப்படியானால் சேசுநாதர் தேவமாதாவுடைய திருவயிற்றில் தகப்பனில்லாதபடி உற்பவித்தாரா?

உற்பவித்தார்.


3. எப்படி கற்பமாய் உற்பவித்தார்?

சேசுநாதர் எடுத்த சரீரம் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால்  கன்னி மரியாயின் வயிற்றில் உண்டானது.


4. இஸ்பிரீத்துசாந்து சேசுநாதரின் தகப்பனென்று சொல்லலாமா?

கண்டிப்பாக சொல்லக்கூடாது.  ஏனென்றால் இஸ்பிரீத்து சாந்து அர்ச். கன்னிமரியம்மாளுடைய இரத்தத்தைக் கொண்டு, சேசுநாதருடைய திருச்சரீரத்தைப் படைத்தவரேயன்றி, அவர் இவருக்குத் தகப்பன் அல்ல. 


5. இஸ்பிரீத்துசாந்து மாத்திரம் இவ்வேலையைச் செய்தாரா?

இல்லை; ஏனென்றால் மனுஷாவதாரம் சர்வேசுரனுடைய உள் சீவியத்துக்குப் புறம்பான செயலாயிருப்பதால், பிதா, சுதன், இஸ்பிரீத்துவாகிற மூன்றாட்களும் ஒன்றித்து அர்ச். கன்னி மரியாயின் பரிசுத்த உதரத்தில் ஓர் சரீரத்தையும், ஓர் ஆத்துமத்தையும் உண்டாக்கி, மனுஷாவதாரத்தை ஒன்றுகூடி முடித்தார்கள் என்று சொல்ல வேண்டும்.


அப்படியானால் சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவினாலே உற்பவித்தார் என்று ஏன் சொல்லுகிறோம்?

முன் சொன்னபடி தேவசிநேகத்துக்கடுத்த கிரியைகள் இஸ்பிரீத்துசாந்துவுக்கு உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.  மனுஷாவதாரம் மூன்று ஆட்களாலே முடிந்திருந்தாலும்,  இச்செயல் சர்வேசுரனுடைய மனிதர் பேரிலுள்ள கரைகடந்த சிநேகத்தினிமித்தம் உண்டானதினால் “சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்தார்” (அரு. 3:16).  தேவசிநேகமாகிய இஸ்பிரீத்துசாந்துவுக்கே இதை விசே´த்த விதமாய்க் குறிக்கிறது நியாயம்.


7. தேவசுதன் எடுத்த ஆத்துமம் எப்படி உற்பத்தியானது?

அர்ச். திரித்துவத்தின் மூன்று ஆட்களும் அதை உண்டாக்கினார்கள்.  அதாவது ஒன்றுமில்லாமையிலிருந்து அதை உண்டுபண்ணினார்கள்.  அதே சமயத்தில் சுதனாகிய சர்வேசுரன் ஒருவரே மோட்சத்திலிருந்து இறங்கி இந்த ஆத்துமத்தையும், சரீரத்தையம் தம்முடையதாக்கிக் கொண்டார்.


8. சுதனாகிய சர்வேசுரன் மனுஷனாய் உற்பவிக்கும்படி மோட்சத்தை விட்டுவிட்டாரா?

அவர் பூமிக்கு வரும்போது, சர்வ வியாபகத்தை விட்டுவிடாதபடியால், இன்னும் மோட்சத்திலிருந்தார்.  ஏனெனில் அவர் சர்வேசுரனாகியமட்டும் எங்கும் நிறைந்துள்ளவரே. ஆனால் சர்வ வியாபியாயிருந்து கொண்டே, உலகத்தில் புதுவகையாய்  நம்முடைய சுபாவத்தைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு மனிதனானார்.


9. தேவசுதன் மனிதனானபிறகும் சர்வேசுரன்தானா?

அவர் மனிதனானபிறகும், சர்வேசுரனாகத்தான் இருக்கிறார். உள்ளபடி அவர் மனிதனானபோது தம் பிதாவினின்று பிரிந்து போகாமல் அவரோடு ஒன்றித்து நிலைத்திருந்தார்.  “பிதா என்னிலும், நான் பிதாவிலும் இருப்பது...” (அரு. 10:38), “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதாக...” (அரு.14:11). இவர் மெய்யான சர்வேசுரனாய் இருப்பதோடு மெய்யான மனிதனுமாக இருக்க ஆரம்பித்தார்.