போதகம் 1 கடவுளின் வாழ்வு

(அ) மனிதனில் வாழ்வு அமையும் விதம்.

(ஆ) கடவுளில் வாழ்வு அமையும் விதம் - பரிசுத்த திரித்துவம்.

(அ) மனிதன் வாழ்கிறான் என்று நாம் எப்போது கூறுவோம்? அவன் இடம் விட்டு இடம் செல்லும்போது, பேசிச் சிரித்து, உண்டு மகிழும் போது, சிந்தனை செய்து, அறிவினை வளர்த்து, அன்பு செலுத்தும்போது, இப்படிப் பல காரியங்களைச் செய்கையில் அவன் வாழ்கிறான் என்போம். இச்செயல்கள் ஒவ்வொன்றும் அவனுள் இருக்கும் உயிரினை வெளிப்படுத்துகின்றன.

ஆயினும் கடவுளின் வாழ்வினை எங்ஙனம் விளக்கு வோம்? அவரும் இடம் விட்டு இடம் சென்று பேசிச் சிரித்து உண்டு களிக்கிறாரா? அல்லவே; உண்பது, சிரிப்பது போன்ற செயல்களுக்கு அவருடைய வாழ்வில் இடமே இல்லையே! உணவு மனிதனுக்குத் தேவை; ஏனெனில் வலிமை குன்றிய மனிதன் உணவின் மூலம் வலிமை பெறு கிறான். ஆனால் சர்வேசுரனுக்கு உணவு தேவை இல்லை. ஏனெனில் அவரே வலிமையின் பிறப்பிடம். அவ்வாறே இடம் விட்டு இடம் பெயர்வதும், அறிவினை வளர்ப்பதும் அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்; எல்லாவற்றையும் அறிகிறார். ஆயினும், அவருள் இருக்கும் உயிர் எப்படிப்பட்டது?

(ஆ) சர்வேசுரன் தம்மையே அறிகிறார்: சகல நன்மைகளும் நிறைந்தவராகத் தம்மைத்தாமே காண்கிறார்; தம் ஒப்பில்லா மேன்மையை உள்ளதை உள்ளவாறு உணரு கிறார். தம்மில் நிறைந்து விளங்கும் அளவில்லா அறிவு, ஆற்றல், அழகு, மேன்மை இவைகளைத் தம் அறிவுக் காட்சியில் காண்கிறார். ஒளிவீசும் தம் முழுமை , கொள்ளை அழகு, இவற்றைச் சிந்திக்கையில், அவர் உள்ளத்தில் தவிர்க்க முடியாத ஆனந்த வெள்ளம் பொங்குகிறது! அந்த ஆனந்தப் பெருங்கடலுக்குக் குறையுமில்லை, கரையு மில்லை. அளவில்லாத சர்வேசுரனின் நெஞ்சத்தைத் திருப்தி செய்யும் தெவிட்டாத பேரின்பம் அது!

சர்வேசுரன் தம்மையே அறிவது அத்தியாவசியம்; அறிந்ததும், நேசிப்பது தவிர்க்க முடியாத செயல்; அவ்வாறு இல்லையெனில் உயிரற்ற உணர்வற்ற கற்சிலை. போல் இருப்பார். அவர் தம்மை மாத்திரமே அறிந்து, நேசிக்க வேண்டும்; ஏனெனில் வையகத்தையும், சம்மனசுக் களையும் படைக்குமுன் அவருடைய அறிவையும், அன்பையும் கவர்வதற்கு வேறு எதுவும் இருக்கவில்லை. சர்வேசுரன் மட்டுமே இருந்தார். துவக்கமின்றி (அநாதி யாய்) இருந்தார். தனிமையில் தம்மையே சிந்தித்துக் கொண்டிருந்தார்; தம்மையே சிநேகித்துக் கொண்டிருந் தார். இதுவே அவருடைய வாழ்வு. துவக்கமின்றி எக்காலமும், எந்நாளும் இருந்தார்; முடிவுமின்றி எந்நாளும் (எக்காலமும் இருப்பார். அதனால்தான் சர்வேசுரனுடைய வாழ்வு நித்திய வாழ்வு எனப்படுகிறது.

சர்வேசுரனுடைய இந்த நித்திய வாழ்வையே நாம் திரித்துவம் எனக் குறிப்பிடுகிறோம். சர்வேசுரன் தனிமையில் தவிக்கவில்லை. அவருடைய தனிமை இனிமை மிகுந்தது. ஏனெனில் அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார். இம்மூவரும் ஒருவர் ஒருவரை (பரஸ்பரம்) அறிகின்றனர்; ஒருவர் ஒருவரை நிறை அன்புடன் நேசிக்கின்றனர்.

பிதா, தம் சுதனை அளவில்லாத விதமாய் அறிகிறார்; அவர்மீது அளவில்லாத நேசத்தைப் பொழிகிறார். இவ்விரு வரும் இஸ்பிரீத்து சாந்துவானவரை அளவில்லாத விதமாய் அறிகின்றனர்; அளவில்லாத விதமாய் நேசிக்கின்றனர். இந்தப் பரஸ்பர அறிவிலும், அன்பிலும் சர்வேசுரன் முடிவில்லாத இன்ப வாழ்வு வாழ்கின்றார்!

பரிசுத்த தமத்திரித்துவத்தின் உள் வாழ்வை அவர் களுடன் சேர்ந்து அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு மறு உலகில்தான் கிட்டும். அது வரை சர்வேசுரனுடைய ஈடில்லாத இந்த அந்தரங்க வாழ்வைப் பற்றிய நம் அறிவு குறைவுள்ளதாகவே இருக்கும். உள்ளதை உள்ளவாறு உணரும் பூரண அறிவு கிடைப்பதற்கு, சர்வேசுரனுடைய திருப்பாதங்களைச் சென்றடையும் நாள் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

ஆனால் அவரை அடைந்து, அவருடைய பெருவாழ்வில் பங்கு கொள்வது நம்மால் கூடுமா? கூடும்! அதற்குரிய வழிகளை அவரே வகுத்திருப் பதால் கூடும்! அவருடைய தனிப்பெரும் வாழ்வில் நாம் பங்கு கொள்ள வேண்டுமென அவரே ஆசைமேல் ஆசை யாய் இருந்திருக்கிறார்.