செப்டம்பர் 16

அர்ச். சிப்ரியான் - வேதசாட்சி - (கி.பி. 258).

பிறமதத்தைச் சார்ந்த இவர் ஆப்பிரிக்காவில் அலங்காரக் கலையைக் கற்பிக்கும் வல்லுனராய் இருந்தார். இவர் ஒரு குருவானவரின் விடாமுயற்சியால் ஞானஸ்நானம் பெற்று, சில காலத்திற்குப்பின் குருவானவராகி, கட்டாயத்தின் பேரில் கார்த்தேஜ் நகரத்திற்கு பேராயரானார். இவர் இரக்கக் குணமுள்ளவரானதால், தமக்கிருந்த செல்வங்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். வெகு கவனத்தோடும், ஊக்கத்தோடும், தயவோடும் தமது கிறீஸ்தவர்களைப் பரிபாலித்து, பதிதருடன் தர்க்கம் செய்து, அநேகரை மனந்திருப்பினார். தமது பிரசங்கங்களால் கணக்கற்ற பிறமதத்தினரைச் சத்திய வேதத்தில் சேரும்படிச் செய்தார். இதனால் பிறமதத்தார் இவர் மட்டில் காய்மகாரங் கொண்டு, இவரைக் கொலை செய்யக் காத்திருந்தார்கள். அக்காலத்திலுண்டான வேத கலகத்தில் சிப்பிரியான் தேவ ஏவுதலால் தூரதேசம் சென்று, அங்கிருந்து கடிதம் மூலமாய் தமது கிறீஸ்தவர்களுக்கு ஆலோசனை தந்து, அவர்களை வழிநடத்தி வந்தார். அந்த தேசத்தில் கொள்ளை நோய் உண்டானதை சிப்ரியான் கேள்விப்பட்டு, அங்குள்ள கிறீஸ்தவர்களுக்கும் பிறமதத்தினருக்கும் உதவி ஒத்தாசை செய்து, மற்றவர்களுக்கும் அவ்விதம் செய்யும்படி புத்திமதி கூறினார். இதனால் பிறமதத்தினர் சிப்ரியானை வெகுவாக நேசித்து வந்தார்கள். மறுபடியும் வேத கலகம் உண்டானபோது சிப்ரியான் வேதத்திற்காகப் பிடிபட்டு, சத்திய வேதத்தை விடாமல் அதைப் புகழ்ந்து பேசினதினால், இவரைச் சிரச்சேதம் செய்ய அதிபதி தீர்மானித்தான். சிப்ரியான் கொலைக்களத்திற்குப் போய் சேர்ந்தபோது, அநேக கிறீஸ்தவர்களும், கணக்கற்ற பிறமதத்தினரும் துக்கித்து நிற்கையில் அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.        

யோசனை

பிறருக்குக் காட்டப்படும் தயவும், கொடுக்கப்படும் தருமமும் ஆண்டவருக்கே செல்லுமென்று எண்ணுவோமாக.