செப்டம்பர் 15

அர்ச். அக்கார்ட் - மடாதிபதி - (கி.பி. 687).

இவர் பிரான்ஸ் தேசத்தில் கௌரவமான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பிரான்ஸ் தேசத்து அரசனிடம் படைத் தலைவராயிருந்தார். இவருடைய தாயார் மகா பக்தி விசுவாசமுடையவள்.  இவள், தன் குமாரன் வேதசாஸ்திரங்களைப் படித்து அர்ச்சியசிஷ்டவராகும்படி, அர்ச். இலாரியார் என்பவரிடம் அனுப்பி வைத்தாள். அக்கார்டுக்கு 16 வயது நடக்கும்போது இவருடைய தந்தை இவரை இராஜ அரண்மனையில் நல்ல பதவியில் அமர்த்த கருத்தாயிருந்தார். இதையறிந்த இவர் தாயார் கலங்கி, பதைத்து, அதற்குச் சம்மதிக்கவில்லை. பின்பு இவர் தந்தை தன் குமாரனின் கருத்தையறிந்த மாத்திரத்தில், அவரும் அதற்கு இணங்கினதினால் அக்கார்டு துறவியாய்ப் போனார். இவர் மடத்தில் சகலருக்கும் அடங்கி கீழ்ப்படிந்து, தாழ்ந்த வேலைகளைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தார். மடத்தின் ஒழுங்குகளில் சிறிதளவும் தவறாமல், நன்கு அனுசரித்து அர்ச்சியசிஷ்டவராய் நடந்தபடியால் அம்மடத்திலுள்ள 900 துறவிகளுக்கு மடாதிபதியானார்.  இவருடைய நன்மாதிரிகையை அவர்களும் கண்டுபாவித்து இவரைப் பின்சென்றார்கள். இவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மறதியாய் தமது முகத்தை சவரம் செய்ய ஆரம்பித்தபோது, தமது தவறை உணர்ந்து, செய்த பாதி சவரத்துடன் துறவிகள் கூடியிருந்த இடத்திற்குக் கண்ணீர் அழுகையுடன் சென்று, அவர்களுக்குமுன் முழந்தாட்படியிட்டு, தமது தவறை அறிவித்தார்.  இவர் ஜெபத்தாலும், தபத்தாலும், ஒருசந்தி உபவாசத்தாலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்து, மரணத் தருவாயில் துறவிகளுக்குத் தகுந்த புத்திமதிகளைச் கூறி, கண் மூடி பரகதியில் சேர்ந்தார்.      

யோசனை

ஞாயிறு வாரங்களில் பூசை காணாமல் அந்நாட்களில் வேலை செய்து வரும் கிறீஸ்தவர்கள் அக்கார்ட் என்பவருடைய நன்னடத்தையைக் கண்டு வெட்கப்படக் கடவார்கள்.