ப்ளானட், ஃப்ரான்ஸ் 1331!

ப்ளானட் என்ற ஊர் சித்திரம் போன்ற மலைகளால் சூழப்பட்ட, நெடிய குறுகிய, பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அமைவிடத்தால் அது முக்கியத்துவமற்று (Inconspicous) இருந்த போதிலும் கடவுளால் அனுகூலம் செய்யப்பட்டது. அவர் தான் அதை நற்கருணை புதுமையால் மேன்மை படுத்தியவர். அந்த நிகழ்வின் கண்கூடான சான்று இன்றும் அது நிகழ்ந்த தேவாலயத்தில் பேணப்படுகிறது.

அந்நாட்களில், நற்கருணை பெறுவதற்காக பீடக்கிராதியில் ஒருவர் பக்கம் மற்றொருவராக முழந்தாளில் நிற்பார். இரு பீடச்சிறுவர்கள் கிராதியில் நீளவாக்கில், பீடத்தைப்பார்த்து தொங்கிக்கொண்டிருக்கும் லெனின் துணியின் கீழ் விழிம்பை எடுத்து மடித்து பிடிப்பார்கள், நற்கருணையை பெற்றுக்கொள்வோர் துணியின் அடியில் கை வைத்திருப்பார்கள் இதனால் நற்கருணை, நற்கருணை துகள்கள் தவறி விழும்போது (நற்கருணையானது நேரடியாக குருவானவரால் நாவில் வழங்கப்படும்) தரையில் விழாது. மீண்டும் அது வழங்கப்படும்.

இந்த புதுமையானது 1331ம் ஆண்டு மார்ச் 31 உயிர்ப்பு ஞாயிறு அன்று ப்ளானட் நகரின் முதன்மை குரு ஹக்யூஸ் தே லா பா(உ)மே (Hagues De La Baume) யால் நிறைவற்றப்பட்ட முதல் திருப்பலியில் நிகழ்ந்தது. புனித விழா நிகழ்வு என்பதால் பீடச்சிறுவர்களுடன், அதே பங்கை சேர்ந்த தாமஸ் கெய்லட் (Thomas Cailot) மற்றும் கய்யட் பெஸன்(Guyot Besson) என்னும் இருவர் உதவிக்கொண்டிருந்தனர்.

திருவிருந்தின் போது திருவிருந்தினர் அனைவரும் பீடக்கிராதிக்குச்சென்று அந்த துணியின் அடிப்பகுதியில் கையினை வைத்து குருவிற்காக எதிர் பார்த்து இருந்தனர். இறுதியில் நற்கருணையை பெறுபவர்களில் ஒருவராக ஜாக்யுட்டோ (Jaquetto) என்னும் விதவை இருந்தாள். குருவானவர் அவளது நாவில் நற்கருணையை வைத்து திரும்பி பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

திருப்பலியில் பங்கு கொண்டோர் பலரும், அவர்களுடன் கெய்லட் மற்றும் பெஸனும் அவளது வாயிலிருந்து நற்கருணை கீழே விழுந்ததை பார்த்தனர். கெய்லட் பீடத்திற்கு சென்று இவ்வெதிர்பாரா நிகழ்வை குருவிடம் தெரிவித்தார். அவர் கிராதியை நெருங்கிவந்து மிகச்சரியாக அப்பத்தின் அளவிலே இருந்த இரத்தப்புள்ளியைப் அந்தத்துணியில் பார்த்தார். அதுவோ இரத்தத்தில் முழுதும் கரைந்துவிட்டது போல் தோன்றியது.

திருப்பலி முடிந்த பின், குருவானவர் அந்தத் துணியை எடுத்து, குனிந்து ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமான நீரில் அந்த இரத்தப்புள்ளி இருந்த துணிப்பகுதியை வைத்தார். அவர் அந்தப் புள்ளியைப் பல முறை விரலால் சுரண்டிய பின் அது குறைவதற்குப் பதிலாக பெரிதாவதைக் கண்டார். அவர் அந்தத் துணியை எடுக்கும் போது அந்த நீர் இரத்தமயமாய் ஆகியிருப்பதைக் கண்டார்.

குருவானவரும் அவரது உதவியாளர்களும் ஆச்சரியமும் அத்துடன் பயமும் கொண்டு “இது நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விலை மிகுந்த இரத்தம்” என்று வியந்தனர். குருவானவர் கழுவியபின் கத்தியை எடுத்து அப்பத்தினால் ஏற்பட்ட இரத்தப்பகுதியை துணியிலிருந்து வெட்டிஎடுத்தார்.

அந்த சதுர வடிவ துண்டு துணியானது சங்கைக்குரிய விதமாக பீடப்பேழையில் பொருத்தப்பட்டது. இந்த புதுமையானது விசாரணை செய்யப்பட்டு, பின் பாப்பானவர் 22ம் அருள் சின்னப்பரால் உறுதி செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் அந்தத் துணியானது சிறப்பான கதிர் பாத்திரத்தில் வைக்கப்பட்டது. அதில் தான் அது இன்று வரை இருக்கிறது.