செப்டம்பர் 06

அர்ச். பாம்போ. மடாதிபதி - (கி.பி. 385).

அர்ச். பெரிய அந்தோணியார் வனவாசம் செய்த காலத்தில் பாம்போ அவரிடம் சென்று அவரைத் தமது ஞான குருவாகப் பாவித்து அவருக்குச் சீஷரானார். அந்தப் பயங்கரமான காட்டில் பாம்போ சகல புண்ணியங்களிலும், சிறந்து ஜெபத்தியானம் செய்வதிலும், கடின தபம் செய்வதிலும், கை வேலை செய்வதிலும் தமது ஆயுள் காலத்தைச் செலவழித்தார்.

ஒருநாள் இவர் வேறொரு தபோதனரை அணுகி தனக்கு யாதொரு நல்ல ஆலோசனை தரும்படி மன்றாடினார். அதற்கு அவர் 38-ம் சங்கீதத்தில் உள்ளபடி நாவைக் காக்கும்படி புத்தி புகட்டினார். அது முதல் பாம்போ அவசியமின்றி பேசாமல் மவுனமாயிருந்து, விசேஷமாக பிறர் சிநேகத்திற்கு விரோதமான அற்ப வார்த்தையும் சொல்லாமல், பரிசுத்தராய் நடந்து வந்தார்.

எஜிப்து தேசத்தில் ஆரிய பதிதர் சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்திற்கு விரோதமாய் போதிக்கும் பதித படிப்பினையைத் தாக்குவதற்காக, அர்ச். அத்தனாசியார் பாம்போவை அலெக்சாந்திரியாவுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே பாம்போ அவ்விடத்திற்குச் சென்று வேதத்திற்காக உழைக்கும்போது, ஒரு ஸ்திரீ அலங்காரமாய் உடுத்திகொண்டு நடப்பதைக் கண்ட இவர், பேரொலியிட்டு அழத் தொடங்கினார்.

அவர் அழுகையின் காரணத்தைக் கேட்டபோது இந்த பெண் மனிதருக்குப் பிரியப்படும்படி இவ்வளவாக பிரயாசைப்படுகையில், நான் என் கர்த்தருக்குப் பிரியப்பட முயற்சிக்கவில்லையே! என்றார். கடைசியாக இவர் சகல புண்ணியங்களையும் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை.

நாவால் அநேக பாவம் உண்டாகிறதென்று வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. நாமும் பிறர்மேல் கோள் குண்டணி கூறாமலிருந்து அவர்களுடைய நடத்தையைப்பற்றி வீண் தீர்மானம் செய்யாமல் இருப்போமாக.