பாவசங்கீர்த்தனம் செய்ய ஆத்தும சோதனை

1-பத்துக் கற்பனைகள்

1-வது. மனது பொருந்தி விசுவாசத்தில் சந்தேகப்பட்டது; காலைச் செபம் இராச்செபம் செய்யத் தவறினது; செய்தாலும் பக்திக் குறை வாய்ச் செய்தது; கோவிலில் மரியாதைக் குறைவாயிருந்தது; பேய்க்குப் படைத்ததை வாங்கினது; சாப்பிட்டது; குருக்கள் தவிர மற்றவர்களைக் கொண்டு மந்திரித்தது; சகுன சாஸ்திரம் பார்த்தது, கேட்டது.

2-வது. பொய்யான காரியத்திற்கும் சந்தேகமான காரியத்திற்கும் சர்வேசுரனை சாட்சிக்கு அழைத்தது; சர்வேசுரனைத் தூஷணித்தது; அர்ச்சியசிஷ்டவர்களுக்கு விரோதமாய்ப் பேசினது; காற்று, மழை முதலியவைகளைப் பற்றி முறையிட்டது; சந்நியாசிகள் கன்னியாஸ்திரீகள், குருக்கள் இவர்களுக்கு விரோதமாய்ப் பேசினது; வேதத்துக்கு விரோதமாய் நினைத்தது; பேசினது; அவநம்பிக்கைப்பட்டது; தன்னையாவது புறத்தியாரையாவது சபித்தது.

3-வது. ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாட்களில் பூசை தவறினது; சரீரப் பிரயாசையான, விலக்கப்பட்ட வேலை செய்தது, அல்லது செய்வித்தது.

4-வது. தாய் தகப்பன், உபாத்திமார், குருக்கள் முதலிய பெரியவர்களுக்குக் கீழ்ப்படியாமலிருந்தது; மரியாதை தவறினது, வருத்தம் வருவித்தது.

5-வது.  புறத்தியார் பேரில் வர்மம் வைராக்கியமாயிருந்தது; துர்மாதிரிகை காட்டினது; துர்ப்புத்தி சொன்னது.

6-வது.  மனது பொருந்திக் கெட்ட நினைவு நினைத்தது; கெட்ட பேச்சுப் பேசினது, கேட்டது;  கெட்ட புத்தகங்களை வாசித்தது, கேட் டது; கெட்ட பிள்ளைகளோடு கூடினது; கெட்ட பார்வை பார்த்தது; கெட்ட காரியம் செய்தது; கெட்ட விளையாட்டு விளையாடினது; கெட்ட கருத்துடன் ஆடை ஆபரணங்கள் தரித்தது.

7-வது.  திருடினது, திருடினதை ஒப்படைக்கா மலிருந்தது; திருடின உடைமையை வாங்கினது; புறத்தியாருக்கு நஷ்டம் வருவித்தது, கெட்ட பெயர் உண்டாக்கினது.

8-வது.  பொய் சொன்னது; அவதூறு சொன்னது; கோள் சொன்னது; புறத்தியார் பேரில் குறைவாய் நினைத்தது.

9-வது.  கெட்ட ஆசைப்பட்டது.

10-வது. புறத்தியார் சொத்துக்கு ஆசைப்பட்டது.

2-திருச்சபைக் கட்டளை

வருஷப் பாவசங்கீர்த்தனம் பண்ணாமலிருந்தது; பாஸ்கு காலத்தில் திவ்விய நற்கருணை வாங்காமல் போனது; விலக்கப்பட்ட நாட்களில் மாமிசம் சாப்பிட்டது.

3-தலையான பாவங்கள்

1-வது. தன்னைக் குறித்துப் பெருமையாய் நினைத்தது, பேசினது; 
2-வது. கோபித்தது; 
3-வது. பணத்தின் மேல் மிஞ்சின ஆசை வைத்தது; பிச்சை கொடாமலிருந்தது;
4-வது. வேண்டியதற்கு மேல் சாப்பிட்டது;  
5-வது.  காய்மகாரப் பட்டது.  
6-வது.  வீண் காலம் போக்கினது.

4-அந்தஸ்தின் கடமைகள்

மந்திரங்கள் படியாமலிருந்தது; ஞான உபதேசத்திற்கு வராமலிருந்தது; பாடங்களைச் சரியாய்ப் படியாமலிருந்தது; வேலைகளைச் சரியாய்ச் செய்யாமல் போனது; குடும்பத்துக்குரிய கடமைகளை செய்யாமல் போனது; புருஷன் தன் பெண்சாதியையும், பெண்சாதி தன் புருஷனையும் சிநேகியாமல் போனது.

ஆத்தும சோதனைக்குப் பின் ஜெபம்

சர்வேசுரா சுவாமி! தேவரீர் அடியேனை உண்டாக்கிக் காப்பாற்றி வருகிறதும் அல்லாமல், நான் செய்த பாவ அக்கிரமங்களைப் போக்கும் படியாய் உமது ஏக திருக்குமாரன்தானே மானபங்கமாய் மரணமடையும்படி சித்தமானீரே.  நான் பாவ அக்கிரமங்களையெல்லாம் முழுதும் அருவருத்து, அவைகளை என்றென்றைக்கும் விலக்கும்படி தயவு செய்தருளும்.  ஆமென்.

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் அளவில்லாத சகல நன்மை நிறைந்தவராயிருக்கிற படியினாலே, எல்லாத்தையும் பார்க்க உம்மை நான் முழுமனதோடே சிநேகிக்கிறேன்.  உமக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனென்கிறதினால், மிகவும் துக்கப்பட்டு மனஸ்தாபப்படுகிறேன். பின்பும் தேவரீருடைய உதவியைக் கொண்டு இனி ஒருக்காலும் ஒரு பாவமும் செய்வதில்லையயன்றும், இதுவரையிலும் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவேனென்றும் கெட்டியான பிரதிக்கினை செய்கிறேன்.  ஆமென்.

பாவசங்கீர்த்தன முறை

குருவானவரிடத்தில் போய் முழங்காலிலிருந்து சிலுவை வரைந்து “சுவாமி நான் பாவியாயிருக்கிறேன், என்னை ஆசீர்வதித்தருளும்” என்று அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றபின் சாதாரண பாவசங்கீர்த்தன மந்திரத்தை துவக்கி மார்பில் பிழைதட்டி: “என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே” என்கிற வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தவும்.  

பின் முந்தின பாவசங்கீர்த்தனம் செய்து எத்தனை நாள் ஆனது என்றும் சொல்லிய பின், நீ கட்டிக் கொண்ட சாவான பாவங்களை ஒவ்வொன்றும் எத்தனை விசையென்றும், மற்ற அற்பப் பாவங்களையும் தாழ்ச்சியுடன் சுருக்கமாயும் தெளிவாயும் துக்கத்தோடு வெளிப்படுத்தி “நான் இப்பொழுது சொன்ன பாவங்களுக்காகவும், என் ஆயுள் காலத்தில் நான் செய்த சகல பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்படுகிறேன்” என்று சொல்லுகிறது.  

குருவானவர் சொல்லுகிற புத்திமதிகளையும், அவர் கொடுக்கிற அபராதத்தையும் கவனமாய்க் கேட்டபின் உத்தம மனஸ்தாப செபம் சொல்லி, குருவானவரின் ஆசீர்வாதத்தை சிலுவை அடையாளமிட்டுப் பெற்றுக்கொண்டு, இடத்திற்குப் போய், சர்வேசுரன் பாவப் பொறுத்தல் கொடுத்ததற்காக நன்றியறிந்த தோத்திரம்செய்து, குருவானவர் கொடுத்த அபராதத்தைக் கூடிய மட்டும் உடனே தீர்க்கிறது.