அஞ்ஞானிகள் மனந்திரும்புவதற்காக அர்ச். சவேரியார் உண்டாக்கின ஜெபம்

அநாதியுமாய்ச் சர்வத்தையும் படைத்தவருமாயிருக்கிற சர்வேசுரா!  அஞ்ஞானிகளுடைய ஆத்துமங்கள் உம்மால் சிருஷ்டிக்கவும், தேவரீருடைய இலட்சணச் சாயலாக ஏற்படுத்தவும் பட்டிருக்கிறதை நினைத்தருளும் சுவாமி.  இதோ தேவரீருடைய தோத்திரத்துக்கு விரோதமாய் நரகம் நிறைய அதன் பயங்கரமான பாதாளத்திலே அவர்கள் திரளாய் விழுந்து சேதமாய்ப் போகிறார்கள்.  

ஆ!  சுவாமி, உமக்கு ஏக குமாரனாகிய சேசுநாதர் அவர்களை இரட்சிக்கத்தக்கதாக தம்முடைய விலைமதியாத திரு இரத்தத்தைச் சிந்தி எண்ணப்படாத கஸ்தி நோவுகளை அநுபவித்து மகா கடினமான மரணத்தை அடைந்ததை நினைத்தருளும். 

ஆண்டவரே!  சகலருடைய திவ்விய இரட்சகராகிய உம்முடைய திருக் குமாரனை அவர்கள் தங்கள் அக்கிரமங்களிலே மூர்க்கராய் நிந்திக்கவொட்டாமல் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மன்றாட்டுக்களினாலும், உம் முடைய திருக்குமாரனின் பிரிய பத்தினியாகிய பரிசுத்த திருச்சபையின் வேண்டுதலினாலும், தேவரீர் சித்தமிரங்கி அவர்களுடைய பாவ அக்கிரமங்களையும் கீழ்ப்படியாமையையும் பாராமல் அவர்கள்மேல் கிருபை வைத்து, அவர்கள் இப்போதாகிலும் முழுதும் மனந்திரும்பி தேவரீரால் அனுப்பப்பட்டவரும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்துநாதரை வணங்கச் செய்தருளும். 

எங்களை மீட்டிரட்சித்த அந்தத் திவ்விய கர்த்தருக்கும் தேவரீருக்கும் முடிவில்லாத காலமும் தோத்திரமுண்டாகக் கடவது.  

ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச்சியசிஷ்ட சவேரியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.