அர்ச். சூசையப்பரைக் குறித்து ஜெபம்

மகா பாக்கியம்பெற்ற அர்ச். சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.  தேவதாயாரான ஜென்ம பாவமில் லாமல் உற்பவித்த அர்ச். கன்னிமரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை சேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில்  நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால் (விரும்பியதைக் கேட்கவும்.) சேசுக்கிறீஸ்துநாதர் தமது இரத்தத் தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.

ஓ!  திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே! சேசுக்கிறீஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும்.  ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே! நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக.  திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல்  என்றும் இருக்கக்கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென்.

(இந்தச் செபத்தைப் பக்தியோடு சொல்லுகிறவர்களுக்கு ஒவ்வொரு விசையும் 7 வருஷம் 7 மண்டலப் பலன்களை அர்ச். பாப்பானவர் கொடுத்திருக்கிறார்.)