அர்ச். ஞானப்பிரகாசியார் மூலம் கேட்கும் ஆறு மன்றாட்டுக்கள்

அர்ச். ஞானப்பிரகாசியார் சந்நியாசிகள் மடத்தில் ஆறு வருடம் இருந்ததைக் குறித்து ஆறு மன்றாட்டுக்களைக் கேட்டு 6 பர. அருள். திரி. சொல்லி வேண்டிக் கொள்ளுகிறது.

1. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் அடைந்த தேவ இஷ்டப்பிரசாதத்தை மரண பரியந்தம் இழந்து போகாமல் அதில் நிலை கொண்டவராய் நடந்தீரே.  அப்படியே நாங்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தைக் கைக்கொண்டு, அதை மரண பரியந்தம் இழந்து போகாமல் இருக்கத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய் தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

2. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர்   புத்தியறிந்த ஏழு வயதிலே சர்வேசுரனை முழு மனதோடே நேசித்துப் புண்ணிய வழியிலே சாங்கோபாங்கமாக நடக்கத் துவக்கி, மென் மேலும் அதிகமதிகமாக மரண பரியந்தம் புண்ணி யங்களிலே வர்த்தித்துக் கொண்டு வந்தீரே;  நாங்கள் இதுவரைக்கும் சர்வேசுரனை சிநேகி யாமல் அநேக பாவங்களைக் கட்டிக் கொண் டிருந்தாலும், இனியாகிலும் சர்வேசுரனை முழு மனதோடே நேசித்து அவருக்கு ஏற்க நடந்து புண்ணியங்களிலே அதிகரிக்கத்தக்கதாக, எங்க ளுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

3. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் ஒன்பது வயதிலே தேவமாதாவுக்குத் தோத்திர மாக உமது கற்பை ஒப்புக்கொடுத்து அதற்கு அற்பமாகிலும் மாசணுகாதபடிக்கு ஆச்சரியமான தபசு செய்து பஞ்சேந்திரியங்களைக் காக்கிறதிலே அதிசயமான எச்சரிக்கையோடே நடந்து வந்தீரே; நாங்கள் இதுவரைக்கும் கற்புக்குப் பழுதாக நடந்திருந்தாலும், இனிமேல் சரீரத்தை ஒறுத்து, மேலான தபசுகளினால் அதைக் கீழ்ப்படுத்தி, எச்சரிக் கையோடே பஞ்சேந்திரியங்களைக் காத்து மரண பரியந்தம் பரிசுத்த கன்னிகையாயிருக்கிற தேவ மாதாவுக்குத் தோத்திரமாகப் பழுதற்ற கற்போடே நடக்கத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடு கிறோம். பர. அருள். திரி.

4. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் இந்த உலக மகிமை துரைத்தன முதலான நன்மை யயல்லாம் வெறுத்து, சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படுகிறதற்குச் சந்நியாசிகள் மடத்திலே சேர்ந்து, அங்கே பிரியாத மனதாய்ச் சம்மனசு போல, சர்வேசுரன் பேரில் எப்போதும் முழுக் கருத்தாயிருந்து ஆண்டவருக்குத் தோத்திரம் செய்து கொண்டு வந்தீரே; நாங்கள் இந்தப் பிரபஞ்ச நன்மைகளின் ஆசையினாலே எங்கள் ஆத்துமத்துக்குச் சேதம் வருத்திக் கொள்ளாமல் உத்தம கருத்தோடே ஆண்டவரைச் சேவிக்கத் தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

5. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் இந்தப் பூலோகத்திலே சஞ்சரித்த கொஞ்ச நாளுக்குள்ளே அநேக புண்ணியங்களைச் செய்து வெகு ஞானத் திரவியங்களைச் சம்பாதித்து மரண காலத்திலே பலன் கைக்கொள்ளுகிற நேரம் வந்தது என்று விசாரித்து உம்மாலே சிநேகிக்கப் பட்ட சர்வேசுரனைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு, இதோ மோட்ச பேரின்பத்தை அனுபவிக்கப் போகிறேன் என்று சந்தோஷமாய்க் காலம் பண்ணினீரே!  நாங்கள் புண்ணிய நெறி யிலே சுறுசுறுப்போடே நடந்து, மரண சமயத் திலே பயந்து தத்தளியாமல் அமரிக்கையோடே நல்ல மரணம் அடையத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

6. அர்ச். ஞானப்பிரகாசியாரே! அர்ச். மரிய மதலேனம்மாளும், மகாத்துமாவாகிய அற்றிஸ் என்கிறவளும் தரிசனத்திலே கண்டபடியே தேவரீர் மோட்சத்திலே மனோவாக்குக்கெட்டாத பாக்கியத்தை அனுபவித்து இந்தப் பரதேசத் திலுள்ள மனுமக்களுக்கு வேண்டிய உபகாரங் களைச் செய்கிறதற்கு சர்வேசுரனாலே வரம் பெற்றிருக்கிறீரே; பாவிகளாயிருக்கிற எங்கள் பேரிலே உம்முடைய தயாபமுள்ள கண்களைத் திருப்பி, ஆத்தும சரீரத்துக்கு வேண்டிய அவசரங்களிலே உதவி செய்து காப்பாற்றி, மோட்ச இராச்சியத்திலே உம்மோடு கூட முடிவில்லாத பாக்கியத்தை அனுபவிக்கத் தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

தேவ வரப்பிரசாதங்களைத் தந்தருளுகிற சர்வேசுரா! அர்ச். ஞானப்பிரகாசியாரிடத்திலே அதிசயமான பரிசுத்த நடக்கையும் ஆச்சரியத்துக் குரிய தபசும் விளங்கப் பண்ணினீரே. அவருடைய மாசில்லாத நடக்கையைப் பார்த்து நடக்காத நாங்கள் அவருடைய புண்ணியங்களினாலேயும் வேண்டுதலினாலேயும் அவருடைய தபசைப் பின்செல்லத்தக்கதாக, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமி.  

ஆமென்.