தேவ நற்கருணையின் சன்னிதியில் வேண்டுதல்

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி, எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்க தயைபுரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்துக்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்துடனே ஆராதிக்கிறேன். 

பரம திவ்விய நற்கருணையில் இருக்கிற உமக்கு பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், அடியோர்கள்பேரிலே காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழுமனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.  எங்கள் நன்றிகெட்டதனத்தின் பேரில் மிகுந்த விதனப்பட்ட அனந்த மகிமையுள்ள பரம தேவனே! ஆராதனைக்குரிய இந்த தேவதிரவிய அநுமானத்தில் இருக்கிற உமக்கு செய்யப்பட்டதும், இனி செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும் அவமானங்களுக்கும் நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப்பட்சத் தோடும், உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன்.  

ஆ! என் திவ்விய கர்த்தாவே!  முன்னால் நானே அநேக விசை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைச்சலாய் நடந்ததற்கும், தேவபக்தி சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை உட்கொண்டதற்கும் அடியேன்படுகிற மிகுதியான வியாகுலத்தை தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்?

தயையுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவதுரோகங்களை பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமி.  தேவரீருடைய  மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவதிரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும், எல்லாருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக்கொள்ளும் சுவாமி.  மெய்யாகவே சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மை சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து தோத்தரித்து வந்தித்து வணங்க அபேட்சிக்கிறேன்.  

மேலும் நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்தத் திருச் சரீரத்தையும் விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ நற்கருணையில் உம்மை பயபக்தி வணக்கத்துடனே நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு வாங்கிக்கொள்ளுகிறதினாலும், உம்முடைய கிருபையை அடைந்து, என் மரணத்திற்குப்பின் சகல மோட்சவாசிகளோடே கூடப் பேரின்ப பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படி எனக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. ஆமென்.

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாய் இருக்கிற சேசுநாதர், அடியோர்கள் செய்த பாவங்களின் பரிகாரமாக உமக்குச் செலுத்துகிற பரிசுத்தப் பலியை உம்முடைய தேவாலயத்தில் நின்றும், தேவரீர் பரலோகத்தில் வீற்றிருக்கிற உன்னத ஸ்தலத்திலே நின்றும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும். சிலுவையினின்று எங்கள் திவ்விய இரட்சகரும், மனிதாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் சத்தம் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றது.  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி!  

சுவாமி உம்முடைய கோபத்தை அமர்த்தியருளும்.  எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாட்சம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே!  அதிக தாமதஞ் செய்யாதேயும்.  இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு உம்முடைய திருநாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திரமாகத் தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமி.  ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது. (மூன்று தடவை சொல்லவும்.)