திவ்விய சற்பிரசாத நேசம்

1. ஓ! மதுரம் பொருந்திய சேசுவே, தேவரீருடைய திருப்பீடத்திற்கு முன் என் இருதயம் நேசச் சுடர் விட்டெரியும் ஒரு தீபமாகக் கடவது.

2. ஓ மிகவும் பிரிய சேசுவே, நான் உம்மை முகமுகமாய்க் கண்டு தரிசித்து சதா காலத்திற்கும் உமது மடியிலிருந்து இளைப்பாறுவதெப்போ?

3. மிகவும் ஆசை நேசம் அமைந்த ஆண்டவரே, உமது அன்பின் தேவ திரவிய அநுமானச் சங்கிலியால் என்னைப் பந்தனமாக்கியருளும்.

4. மாடப் புறாவின் இறக்கைகள் எனக்கு இருக்குமாகில், ஓ! எவ்வளவு சந்தோ­மாய் நான் பறந்தோடிச் சென்று என் சேசுவின் திரு இருதயத்தில் சதா காலத்திற்கும் இளைப்பாறுவேன்.

5. நேச சங்கிலியால் பந்தனமாகிச் சிறைப்பட்டிருக்கும் திவ்விய சேசுவே, நிர்ப்பாக்கியமான என் இருதயத்தை உமது சினேக பந்தனமாக்கியருளும்.

6. மிகவும் பிரிய சேசுவே, உமக்காகவே தேவரீர் என் இருதயத்தை சிருஷ்டித்திருக்கிற படியால், திருப்பெட்டகத்திலுள்ள உமது திவ்விய இருதயத்தோடு அதை வைத்து மறைத்துக் கொள்ளும்.

7. சிறந்த குணாகுணங்கள் அமைந்த திவ்விய கர்த்தரே, என் இருதயம் மெலிந்து அயர்ந்து போனபடியால் உமது திரு இருதயத்திற்குள் அது பிரவேசித்து இளைப்பாற உத்தாரம் தந்தருளும்.

8. சேசுவே, அந்தரங்கமான உமது சிநேக இரகசியங்களை எனக்குப் படிப்பித்தருளும்.

9. திவ்விய சற்பிரசாதத்தில் வீற்றிருக்கும் சேசுவை உலகம் நன்றாய் அறியுமாகில் இப் பூலோகம் அதிகப் பிரகாசமாகவும் மறுலோகம் அதிக சமீபமாகவும் விளங்குமாம்.

10. மிகவும் பரிசுத்த திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஸ்துதியும், நன்றியறிந்த தோத்திரமும் செலுத்தப்படக் கடவது.