சேசுகிறீஸ்துநாதருடைய திவ்விய இருதயத்திற்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகார ஜெபம்

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசு கிறீஸ்துவின் திரு இருதயமே, நாங்கள் மிகவும் நீசப் பாவிகளாயிருந்தாலும் உம் தயவை நம்பிக் கொண்டு உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து, நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிகெட்ட தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும் எங்களாலே ஆனமட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமி.  

அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், பதிதர், பொல்லாத கிறீஸ்தவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு, அவைகளைத் தேவரீர் பொறுக்கவும் சகலரையும் நல்ல வழியிலே திருப்பி இரட்சிக்கவும் வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்திற்கு செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும் பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும், மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். மீளவும் எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுவதும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமி! தேவரீர் எங்கள் இருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி, அர்ச்சியசிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் சீவனோடேயிருக்குமட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலேயும் நின்று காத்து இரட்சியும் சுவாமி.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவை மரத்தில் சிந்தின விலைமதியாத திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமி.  ஆமென்.

சேசுவின் திரு இருதயத்துக்கு அநுதின நிந்தைப் பரிகார ஜெபம்

சேசுவின் திவ்ய இருதயமே! உமது அன்பின் தேவதிரவிய அநுமானமாகிய ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய் தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக என்னை முழுவதும் தேவரீருக்கு வசீகரமாக்கி இன்று என் நினைவு வாக்கு கிரியைகளையும் படும் துன்ப வருத்தங்களையும் எல்லாம் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்.  இனி நான் பாவத்தில் விழாதிருக்கவும், எல்லாத்தையும் பார்க்க தேவரீரை மாத்திரம் நான் சிநேகிக்கவும் இவ்விதமாய்த் தேவரீருக்கு ஆறுதல் வருவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.  


ஆமென்.