அர்ச். பாப்பானவரால் அங்கீகரிக்கப்பட்ட சேசுவின் திரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரச் ஜெபம் (11-ம் பத்திநாதர்)

மனுக்குலத்தின் மட்டில் உமக்குள்ள அணை கடந்த சிநேகத்துக்கு மிகுதியான மறதியும் அசட்டைத்தனமும் நிந்தையுமே கைம்மாறாகப் பெறுகிற இனிய சேசுவே! உமது நேச இருதயம் எவ்விடங்களிலும் அநுபவிக்கிற மறதி நிந்தைகளையெல்லாம் விசேஷ ஆராதனை முயற்சியால் பரிகரிக்க ஆவல் கொண்டு, உமது பீடத்தின் முன்பாக இதோ, சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கிறோம்.

அத்தகைய பெரிய அவமானங்களுக்கு ஐயோ, நாங்களுமே உடந்தையாயிருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, எங்கள் உள்ளங்கொண்ட மட்டும் அவைகளை அருவருத்து, எங்களை மன்னிக்கும்படி தாழ்மையாய், உம்மை மன்றாடி, நாங்களே கட்டிக்கொண்ட துரோகங்களுக்கு மல்லாமல் இரட்சண்ய பாதையைவிட்டு தூரமாய் விலகிப்போய் தங்கள் பிடிவாத அவிசுவாசத்தினிமித்தம் தங்கள் மேய்ப்பரும் வழிகாட்டியுமாகிய உம்மைப் பின்பற்ற மாட்டோம் என்பவர்களின் பாவங்களுக்காகவும் ஞானஸ்நான வார்த்தைப்பாடுகளை மீறி உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை உதறி விட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதாரப் பரிகார முயற்சி செய்யத் தயாராயிருக்கிறோம் என்று உறுதியாய்க் கூறுகிறோம்.

உமக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட அருவருப்பிற்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும் பரிகாரம் செய்ய இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்ற உடையாலும் நடத்தையாலும் கிறீஸ்தவ விநயத்துக்கு விரோதமாய்க் கட்டிக் கொண்ட கணக்கற்ற துரோகங்களுக்காகவும் மாசற்றவர்களை மயக்கி வலையிட்ட அசுத்த துர்மாதிரிகைகளுக்காகவும், ஞாயிறு கடன் திருநாட்களை அடிக்கடி மீறினதற்காகவும், உமக்கும் உமது அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் விரோதமாகச் சொன்ன வெட்கமற்ற தூஷணங்களுக்காகவும் பரிகாரம் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.  உலகத்தில் உமது பிரதிநிதியான அர்ச்சியசிஷ்ட பாப்பானவருக்கும் உமது குருக்களுக்கும் செய்யப்படுகிற அவமானங்களுக்காகவும், உமது தேவசிநேக தேவதிரவிய அனுமானத்தையே மனம் பொருந்திய அலட்சியத்தால் அல்லது மகாகனமான தேவதுரோகங்களால் பங்கப்படுத்தினதற்காகவும், கடைசியாய் தேவரீர் ஸ்தாபித்த திருச்சபையின் உரிமைகளையும் போதக அதிகாரத்தையும் எதிர்த்து நிற்கிற ஜனங்களின் பகிரங்க அக்கிரமங்களுக்காகவும் பரிகாரம் செய்ய விரும்புகிறோம்.

ஓ! தேவனாகிய சேசுவே! அத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள் இரத்தத்தால் சுத்திகரிக்கக் கூடுமாயிருந்தாலல்லோ தாவிளை! உமது தேவ மகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்கெல்லாம் பரிகாரமாக, தேவரீர் சிலுவையில் உமது நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து அனுதினமும் எங்கள் பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

உமது கன்னித்தாயும், சகல அர்ச்சிஷ்டவர்களும் பூலோகத்தில் இருக்கிற பக்தியுள்ள சகல விசுவாசிகளும் செய்கிற பரிகார முயற்சிகளோடு ஒன்றித்து அதை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  உமது அணைகடந்த அன்பை அலட்சியம் செய்ததற்காகவும் கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்காகவும் உமது வரப்பிரசாத உதவியால் எங்களால் இயன்ற மட்டும் பரிகாரம் செய்ய மனப்பூர்வமாய் வாக்களிக்கிறோம்.  இனிமேலாக, நாங்கள் விசுவாசத்தில் தளராமல் பரிசுத்த நடத்தையுள்ளவர்களாய் ஜீவித்து சுவிசேஷ கற்பனைகளையும் விசேஷமாய் பிறர்சிநேகக் கற்பனையையும் அனுசரித்து வருவோம்.  பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால் ஆனமட்டும் தடுக்கவும், அநேகர் உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற அளவு பிரயாசைப்படவும் வாக்களிக்கிறோம்.

ஓ! நேச சேசுவே! பரிகாரத்துக்கு எங்கள் மாதிரிகையாயிருக்கிற பரிசுத்த கன்னிமரியம்மாளின் மூலமாய் நாங்கள் செய்யும் பரிகார முயற்சியாகிற மனப்பூர்வமான இந்தக் காணிக்கையைக் கையேற்றுக் கொள்ளத் தயை செய்தருளும். தேவரீர் பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலமும் சுயஞ்சீவியராய் இராச்சிய பரிபாலனம் செய்யும் பரிசுத்த வீட்டுக்கு நாங்களெல்லோரும் ஒருநாள் வந்து சேரும்படி எங்களுக்குக் கடைசி நிலைமை வரத்தைத் தந்து, எங்கள் கடமையிலும் உமக்குச் செலுத்த வேண்டிய ஊழியத்திலும் மரண பரியந்தம் நாங்கள் பிரமாணிக்கமாயிருக்கும்படி செய்தருளும் சுவாமி. 

ஆமென்.