அர்ச். அந்தோனியார் ஜெபம்

கற்பில் உத்தமமான லீலியயன்கிற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாய் இருக்கிற அர்ச். அந்தோனியாரே! எளிமைத்தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர்மல சுத்தத்தின் மாதிரிகையே, அர்ச்சியசிஷ்டதனத்தில் ஒளிவிடுகிற நட்சத்திரமே, ஆசார முறைமைகளின் சோடினையே, மோட்ச வர்க்கத்தின் வடிவே, திருச்சபையின் தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காமாதுரரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே, கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சர்வேசுரனுடைய சுதனைத் தாங்குகிறவருமாய் தேவ சிநேகத்தின் பேரிலே மிகவும் எரிகிற அனலுமாய்ப் பச்சாத்தாபத்தின் சீவியமான சுவாலையுமாய்த் தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களைத் தேவ பட்சத்தின் நெருப்பிலே கொளுத்தி எரித்தவருமாய் இருக்கிறவரே, விருப்பமுள்ள வேதசாட்சியே, திவ்யமான தீர்க்க தரிசனரே, பாவிகளைத் திருத்துகிறவரே, எளிய பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும், அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் ஞானமுள்ள தியானத்தையும் சர்வேசுரன் எங்களுக்குத் தந்தருளும்படிக்கு அவரை வேண்டிக் கொள்ளும். மிகவும் எரிகிற பட்சத்தில் அனலா யிருந்து பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தைத் தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேணுமென்று மிகுந்த தாழ்ச்சியுடனே உம்மை வேண்டிக்கொள்கிறோம். 

ஆமென்.