அப்போஸ்தலரான அர்ச். தோமையாருக்கு ஜெபம்

(திருநாள் : டிசம்பர் 21)

எங்கள் செல்வ நாட்டில் வேதம் போதிக்க வரம்பெற்ற அர்ச். தோமையாரே, நீர் ஆண்டவர் மீது உள்ள பற்றுத ல் அவரோடு மரணத்துக்கும் துணிந்திருந்தீரே!

காணாமல் விசுவசிக்கிற தூய விசுவாசத்தையும், மரணத்துக்கும் அஞ்சாத சிநேகத்தையும் எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் இந்து தேசத்தில் வேதம் போதித்து, அற்புதங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை சத்திய வேத ஒளிக்குக் கொண்டு வந்தீர்!  இன்னும் இந்த நாட்டில்  எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப் பேர் சேசுவின் மந்தையில் சேராமல், சிதறுண்டு போயிருக்கிறார்கள்! அவர்கள் எல்லாரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறீஸ்துவின் அரசாட்சியின் கீழ் வருவதெப்போ!  விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, இந்திய கத்தோலிக்கர் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, அவர்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞான ஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறீஸ்துநாதர் கொண்டு வந்த ஞான சுயாதினத்தையும் ஞான சமாதானத்தையும் பெற்று அவருடைய அரசாட்சியின் கீழ் நிலைகொண்டு நிற்கும் படியாக சர்வேசுரனை மன்றாட வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். 

ஆமென்.