ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்த உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.
உத்தம மனஸ்தாப மந்திரம்
சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப் படுகிறேன். எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கு இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலம் போதாததால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையயல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
ஆசை நன்மைக்கு ஆயத்த ஜெபம்
என் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே! எனக்கு மிகவும் பிரிய சேசுவே! என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ! என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி! சீக்கிரமாக வாரும். தாமதம் செய்யாதேயும். நீர் ஒரு நாழிகை தாமதம்செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப்போகிறது சுவாமி.
ஆண்டவரே தேவரீர் என் உள்ளத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன். தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லியருளும். என் ஆன்மா குணமடையும். (மூன்று தடவை).
ஆசை நன்மை ஜெபம்
என் சேசுவே! தேவரீர் மெய்யாகவே நற்கருணையில் இருக்கிறீரென்று நான் விசுவசிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். என் ஆத்துமத்திலே உம்மைக் கொண்டிருக்க நான் மிகவும் ஆசிக்கிறேன். இப்பொழுது நான் தேவதிரவிய அனுமானத்தின் வழியாக உம்மை உட்கொள்ள முடியாமலிருப்பதால், என் ஆண்டவரே! ஞான விதமாய் என் இருதயத்தில் எழுந்தருளி வாரும்... ஆண்டவரே! நீர் என்னுள்ளத்தில் வந்திருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். என்னை முழுவதும் உம்முடன் ஒன்றிக்கிறேன். என்னை உம்மை விட்டு ஒருபோதும் பிரிய விடாதேயும் சேசுவே! ஆமென்.
நமதாண்டவராகிய சேசுவின் சரீரமும் இரத்தமும் என் ஆத்துமத்தை நித்திய சீவியத்துக்குக் காப்பாற்றுவதாக. ஆமென். (மூன்று தடவை).