திவ்விய நற்கருணை வாங்கியபின் நன்றியறிதல் ஜெபங்கள்

ஆச்சரியப் பிரகரணம்

சேசுநாதர் மெய்யாகவே இப்போது எனக்குள்ளே இருக்கிறார். இதென்ன ஆச்சரியம்! ஆ! சுவாமி! இதென்ன அதிசயம்! இத்தனை நீசனாயிருக்கிற என்னிடத்தில் தேவரீர் எழுந்தருளி வந்த காரணமென்ன? பரலோகத்தில் சம்மனசுக்களும் அர்ச்சியசிஷ்டவர்களும் உமக்கு யோக்கியமான ஆராதனையும் தோத்திரமும் செய்வார்களே. என்னிடத்தில் உமக்கென்ன பிரியமான காரியம் கிடைக்கும்!

ஆராதனைப் பிரகரணம்

என் சர்வேசுரா சுவாமி!  என்னைப் படைத்தவரே, அடியேன் உமது திருச்சமூகத்தில் மிகுந்த பக்தி வணக்கத்துடன் சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை வணங்குகிறேன். நீசனாயிருக்கிற அடியேனால் உமக்குத் தகுதியான ஆராதனை செய்யக் கூடாதென்கிறதினால், அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயி, சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்கள் முதலானவர்களுடைய ஆராதனைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

சிநேகப் பிரகரணம்

ஆ!  என் பிரிய சேசுவே!  என் சீவியமே!  என் மதுரமே!  உம்மை எல்லாவற்றையும் பார்க்க சிநேகிக்கிறேன்.  உம்மை மாத்திரம் சிநேகிக்கிறேன். அடியேன் தேவரீரை சிநேகிக்கிறேனா வென்று கேட்கிறீர். சுவாமி! உமக்கு எல்லாம் தெரியுமே.  நான் உம்மைச் சிநேகிக்கிறதும் சிநேகியாமல் இருக்கிறதும் நீர் அறிவீர். இந்த மட்டும் நான் உம்மைச் சிநேகியாமல் இருந்தது மெய்தான். ஆனால் இது துவக்கி என் மரண பரியந்தம் உம்மை மாத்திரம் சிநேகிக்கத் துணிகிறேன்.ஆ! என் திவ்விய கர்த்தரே!  இத்தனை நன்மையும் மகிமையுமுள்ளவருமாய் மட்டில்லாத தயை சுரூபியுமாய் மனோவாக்குக்கெட்டாத அலங்கிர்த வடிவு சோபனமுள்ளவருமாயிருக்கிற தேவரீரைச் சிநேகியாதவர்களுக்குச் சாபம்.  நான் உம்மைச் சிநேகியாமல் போனால் எல்லாவற்றிற்கும் முன்னே எனக்குத்தானே சாபம்.

நன்றியறிந்த பிரகரணம்

அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயே! சகல சம்மனசுக்களே, அர்ச்சியசிஷ்டவர்களே!  சுவாமி எனக்குச் செய்த உபகாரத்தின் பெருமை எவ்வளவு என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியும் என்கிறதினாலே அவருக்குத் தோத்திரம் செய்ய உங்களை மன்றாடுகிறேன். மட்டில்லாத சிநேகத்திற்கும் அளவில்லாத தோத்திரத்திற்கும் பாத்திரமாயிருக்கிற சர்வேசுரா!  உமக்கே சதாகாலத்திற்கும் புகழ்ச்சியும் வாழ்த்துதலும் உண்டாகக் கடவது.

காணிக்கைப் பிரகரணம்

திவ்ய சேசுவே, எனது அற்பமாகிய காணிக்கையைக் கையேற்றுக்கொள்ளக் கிருபை செய்தருளும்.  சுவாமி! தேவரீர் உம்மை முழுதும் எனக்குக் கொடுத்தது போலே நானும் என்னை முழுதும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவேனாக.  இனி நான் பரிசுத்த கற்புள்ளவனாய்ச் சீவிக்கும்படிக்கு என் சரீரத்தை முழுதும் தேவரீருக்குக் கையளிக்கிறேன். இனி நான் பாவ மாசில்லாமல் சீவிக்கும்படிக்கு என் ஆத்துமத்தை முழுதும் தேவரீருக்குக் கையளிக்கிறேன்.  இனி உமது சிநேகப் பற்றுதலுள் ளவனாய் நான் சீவிக்கும்படிக்கு என் இருதயத்தை முழுதும் தேவரீருக்குக் கையளிக்கிறேன். இனி சுவாமி! நான் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சையும், விசேஷமாய் என் கடைசி மூச்சையும் தேவரீருக்குக் கையளிக்கிறேன். இனி நான் எப்போதும் தேவரீருக்குச் சொந்த ஊழியனாய் சீவிக்கும்படிக்கு என் சீவிய காலத்திலும் மரண சமயத்திலும் என்னை முழுதும் தேவரீருக்குக் கையளிக்கிறேன் சுவாமி.

மன்றாட்டுப் பிரகரணம்

தனக்காக

திவ்விய சேசுவே, விலைமதியாத உமது திரு இரத்தத்தால் என் ஆத்துமத்தின் பாவக் கறைகளைக் கழுவி சுத்திகரித்தருளும். ஆண்டவரே! பேயின் தந்திரமான போராட்டம் என்னிடத்தில் இன்னும் முடியவில்லையே. சோதனை தந்திரங்கள் என்னை அடுத்து வரும்பொழுது அவைகளை எதிர்த்து நின்று ஜெயிக்கப் போதுமான வரப் பிரசாதத்தை எனக்குத் தந்தருளும். சோதனை நேரத்தில்: “சேசுவே!  என்னை இரட்சியும்.  மரியாயே! என்னைத் தற்காத்தருளும்” என்று எப்போதும் உச்சரிக்கக் கடவேனாக.

நல்ல சேசுவே! இனி நான் சுகிர்தவாளனாய்ச் சீவித்து பாக்கியமான மரணமடையச் செய்தருளும். நான் சாகும் தருணத்திலும் தேவரீரை உட்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்கக்கடவதாக. நான் சாகும்போது “சேசு மரிய சூசை, உங்கள் கரங்களில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் கையளிக்கிறேன்” என்று உச்சரிக்கக் கடவேனாக.

பிறருக்காக:  

திவ்ய சேசுவே! சத்திய திருச்சபையின் பேரில் தேவரீர் இரக்கமாயிரும். அதைப் பராமரித்துத் தற்காத்தருளும். தயையின் சமுத்திரமாகிய சேசுவே, நிர்ப்பாக்கியமான பாவிகளின்பேரில் இரக்கமாயிருந்து நித்திய நரக ஆக்கினையினின்று அவர்களை இரட்சித்தருளும்.  ஆண்டவரே! உமது திரு இருதய இஷ்டப்படியே என் தாய் தந்தையையும், சகோ தரர் சகோதரிகளையும், இன்னும் நான் யாராருக்காக வேண்டிக்கொள்ள வேணுமோ அவர்களையும் ஆசீர்வதித்தருளும்.  என் அன்பரான சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும். அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும்.

என் திவ்ய சேசுவே என் இரட்சகரே!  உமது இஷ்டப்பிரசாதத்தால் என் இருதயத்தில் எப்போதும் வீற்றிருக்க தயை செய்யும்.  உமது சிநேகத்தில் நின்று என்னைப் பிரிய விடாதேயும் சுவாமி. 

ஆமென்.