⛪ தேவ நற்கருணை ஆசீர்வாதங் கொடுக்கிறபோது வேண்டிக்கொள்ளும் ஜெபம்.

மகா அன்புள்ள கடவுளே, ஆச்சரியத்துக்குரிய இரட்சகரே! தேவரீர் என்னைக் காப்பாற்ற இம்மாத்திரம் தாழ்ந்து, அப்பத்தின் ரூபமாய் தேவ நற்கருணையில் எழுந்தருளி, என்னை ஆசீர்வதிக்கத் தயைபுரிந்தபடியால் சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை ஆராதிக்கிறேன். சஞ்சலக் கடலில் மூழ்கி சிலுவையிலறையுண்டு என்னை இரட்சித்த ஆண்டவரே, நான் எனக்குள் ஒடுங்கி நடுநடுங்கி இரு கரங்குவித்து பஞ்சேந்திரியம் உள்ளிந்திரியங்களையும் அடக்கிக்கொண்டு உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன். என் சீவியத்தை மாற்றி தேவரீருக்கு இனி நல்ல ஊழியம் பண்ண வார்த்தைப்பாடு கொடுக்கிறேன்.  தேவரீரே! எனக்கு ஒருநாள் தீர்வையிட ஒட்டலோகமாய் வருவீராகையால், அந்தப் பயங்கரமான காலத்தில் என் பேரில் கிருபை வைக்க உம்மை இரந்து மன்றாடுகிறேன். உமது சோதிப் பிரகாசத்தை என் கண்ணால் காணக்கூடாத இப்போது இந்தத் தேவ நற்கருணையில் என் சர்வேசுரனாகிய தேவரீர் மெய்யாகவே எழுந்தருளி இருக்கிறீரென்று விசுவசித்து தாழ்ச்சியோடும், பக்தியோடும் உமக்குத் தேவ ஆராதனை பண்ணி எனது ஆசைப் பற்றுதலையெல்லாம் தேவரீர் பேரிலேயே வைக்கிறேன் சுவாமி.

ஆமென்.