சேசுவின் திரு இருதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்.

கிறீஸ்தவக் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்க உமக்குள்ள ஆவலை அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாள் வழியாய்த் தெரிவித்த சேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மட்டில் உமக்குள்ள சர்வ அதிகாரத்தை பிரத்தியட்சமாய் அங்கீகரிக்கும்படி இதோ இன்று இங்கே கூடியிருக்கிறோம்.

இன்று முதல் உமது ஜீவியத்தைப் பின்பற்றி நடக்க ஆசிக்கிறோம். நாங்கள் யாவரும் சமாதானமாய் ஒத்து வாழ்வதற்கு அவசரமான புண்ணியங்கள் இந்தக் குடும்பத்தில் நாளுக்கு நாள் விர்த்தியடைய வேணுமென்று விரும்புகிறோம். நீர்தாமே ஜெயித்து விலக்கியிருக்கும் உலகப் பற்றுதல்களையெல்லாம் எங்களை விட்டு அகற்றிப்போட ஆசிக்கிறோம். கபடற்ற எங்கள் விசுவாசத்தின் காரணத்தால் எங்கள் புத்தியில் அரசாள்வீராக. முழு இருதயத்தோடு உம்மை நேசிப்பதால், எங்கள் இருதயங்களில் அரசராக வீற்றிருப்பீராக! திவ்விய நற்கருணையில் உம்மை அடிக்கடி உட்கொள்ளுவதினால் எங்கள் சிநேகத்தை அதிகரித்தருளும்.

ஒ, சேசுவின் திரு இருதயமே! எங்கள் மத்தியில் உமது சிம்மாசனத்தை ஸ்தாபித்து, ஆத்தும சரீர, விஷயமாய் நாங்கள் செய்யும் முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். சகல கவலை விசாரங்களையும் எங்களிடத்திலிருந்து நீக்கியருளும். எங்கள் இன்பங்களை அர்ச்சித்துத், துன்பங்களினின்று எங்களை இரட்சித்தருளும்.

எங்களில் யாராகிலும் உம்மை எப்போதாவது மனநோகப் பண்ணுவோமேயானால், ஓ! பரிசுத்த திருஇருதயமே, மனஸ்தாபப்படும் பாவியின் மட்டில் நீர் இரக்கமும் தயையுமுள்ளவரென்பதை நினைவுகூர்ந்தருளும். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப்பிரியும்படி எங்களுக்குள் மரணம் நேரிடும்போது மரிக்கிறவர்களும், உயிரோடு இருப்பவர்களும், எல்லோரும் உமது திருச்சித்தத்துக்கு அமைந்தவர்களாய் நடப்போம். கடைசியாய் ஒருநாள் நாங்களெல்லாரும் மோட்ச இராச்சியத்தில் ஒன்றுகூடி உமது மகிமை வரப்பிரசாதங்களை சதாகாலமும் துதித்துத் தோத்தரிக்கும் பாக்கியம் கிடைக்குமென்ற நம்பிக்கையால் ஆறுதலடைவோம். இந்த எங்கள் காணிக்கையை அர்ச்சியசிஷ்ட மரியாயின் மாசற்ற இருதயமும், மகிமை நிறைந்த பிதாப் பிதாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் உம்மிடம் செலுத்தி, எங்கள் ஜீவிய காலத்தில் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை மறவாதிருக்கும்படி எங்களுக்கு உதவி செய்வார்களாக.

எங்கள் அரசரும் தந்தையுமாகிய சேசுவின் திருஇருதயம் துதிக்கப்படுவதாக.

(குறிப்பு: மிகவும் விசேஷமான இவ்வேளையில் நமது குடும்பத்தில் இருந்த சகலரையும் நினைவுகூர்ந்துகொள்ளுவது நல்லது. ஆகையால் மரித்துப்போன உறவினர்க்காகவும், வேறு இடங்களுக்குப் போயிருக்கும் உறவினர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளவும்.)

இறைவா! இறந்து போன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் வேண்டுதல் உம் அடியார்கள் அனைவருக்கும் பயன்படுவதாக. அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, உம் மீட்பில் அவர்கள் பங்குபெற அருள்வீராக! இந்த வழிபாட்டிலே பங்குகொள்ள இயலாமல் வேற்றிடங்களில் இருக்கும் உறவினர், உபகாரிகள், நண்பர்களுக்காகவும் வேண்டுகிறோம். இறைவா, இவர்களையெல்லாம் உமது அன்பிலே காத்து, அருளினால் நிறைத்து வழிநடத்தியருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே! ஆமென்.

ஒரு பர. அருள். திரி. வேண்டிக்கொள்ளவும்.

சேசுக்கிறீஸ்துவின் திருவாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக, மகா பரிசுத்த சேசுவின் திவ்விய இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும். (3முறை)

மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச்சியசிஷ்ட மார்க்கரீத்து மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.