அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் உதவியினை அடைய வல்லமை மிகும் செபம்.

புனிதர்களுக்குள் பெருந்தகைமையும் பேரன்பும் கொண்ட தூய அந்தோனியாரே! நீர் இவ்வுலகில் வாழ்ந்த போது உம்மிடம் விளங்கிய தேவ அன்பு, பிறரன்பு, புண்ணியங்கள் பிறருக்கு தரப்படாத புதுமை செய்யும் வரத்தை உமக்குத் தந்தன. உமது வாயின் சொல்லிற்கு புதுமைகள் காத்திருந்தன. துயருறுவோர் கேட்டதும் நீர் அவர்களுக்காகப் பேசி நலம் செய்ய முன் நின்றீர்.

இக்கட்டு இடைஞ்சலில் உம்மை வேண்டி, பயனடையாது போகவில்லை. பிணியாளரின் பிணியை நீக்கினீர். காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்தீர். துன்பம் நிறைந்தோர் உம்மை அழைத்தபோது உதவி செய்ய விரைந்தீர. இறந்தோருக்கு உயிரளித்தீர். நீர் உலகில் இருந்த போது வருந்திய இறை மக்கள் துயர் துடைக்கத் தயங்கவில்லை. இந்த நம்பிக்கையால், நிரப்பப்பட்டு, முழந்தாட்படியிட்டு உம்மிடம் கேட்கும் மன்றாட்டு யாதெனில்......

(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்) 

இதனை நிறைவேற்ற ஒரு புதுமை நிகழ வேண்டுமாயினும் செய்தருள்வீர்! உமக்கு, அது கடினமானதல்லவே! நீர் கோடி அற்புதரல்லவா! உம் கரங்களில் வீற்றிருக்கும் திருப்பாலனின் செவிகளில் என் வேண்டுகோளை மெல்ல உரைத்தருளும். உமது வார்த்தை ஒன்று மட்டுமே போதுமானது என்று மன்றாட்டு நிறைவேறும். உமக்கு நான் என்றும் நன்றியறிதல் உள்ளவனாய் இருப்பேன். ஆமென்.

திருப்பாலனால் சிநேகிக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட தூய அந்தோனியாரே! எனது மன்றாட்டிற்கு செவி சாய்த்தருளும். சொல்லிலும், செயலிலும், வல்லமை மிக்க புனித அந்தோனியாரே! எனது மன்றாட்டிற்குத் தயவாய் செவி சாய்த்தருளும். உம்மிடம் வேண்டுவோர் மீது அதிக அக்கறை காட்டும் தூய அந்தோனியாரே! என் வேண்டுதலை அடைந்து தந்தருளும். (ஆமென். (பர.அரு.பிதா)

ஆமென்.