அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரை நோக்கி செபம்.

கற்பில் உத்தமமான லீலியென்கின்ற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாயிருக்கிற புனித அந்தோனியாரே, எளிமைத்தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர் மல சுத்தத்தின் மாதிரிகையே, புனிதத்துவத்தின் ஒளிவிடுகிற நட்சத்திரமே, ஆசார முறைமை முடிவுகளின் சோடினையே, மோட்ச வர்க்கத்தின் வடிவே, திருச்சபையின்தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காம தூதரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே, கஷ்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சருவேசுரனுடைய சுதனாவரைத் தாங்குகிறவராய் தேவ சிநேகத்தின் பேரில் மிகவும் எரிகிற அனலுமாய், பச்சாபத்தின் சீவியருமான சுவாலையுமாய், தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களை தேவ பட்சத்தின் நெருப்பினாலே கொளுத்தி எரித்தவருமாயிருக்கிற விருப்பமுள்ள வேதசாட்சியே, திவ்வியமான தீர்க்கதரிசினரே, பாவிகளைத் திருத்துகிறவரே, நரகத்திற்குப் பயங்கரத்தை விடுக்கிறவரே, எளிய பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் ஞானமுள்ள தியானத்தையும், சர்வேசுரனானவர் எங்களுக்குத் தந்தருளும்படிக்கு அவரை வேண்டிக் கொள்ளும் மிகவும் எரிகிற பட்சத்தின் அழகானவரே! பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தை தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சியுடன் உம்மை வேண்டிக் கொள்கின்றோம்.

செபிப்போமாக.
தயை மிகுந்த இறைவா, உம் பிரிய அடியரான தூய அந்தோனியாரைப் போல் நானும் அழிந்து போகிற உலக செல்வங்கள் போல் எனக்குள்ள பற்றை அகற்ற உமதண்டை வந்து உமக்கு ஊழியஞ்செய்து வருவதே இப்பூவுலகில் எனக்கு உண்மையான நன்மையேயொழிய வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்வீர். உலக நாட்டங்களிலாவது செல்வம் பெருமை, வெகுமானத்தின் பேரிலாவது உடல் இன்பங்களின் பேரிலாவது என்னில் ஏற்படும் ஆசையை முழுவதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும் சத்தியத் திருச்சபையின் உத்தம மைந்தனாக நான் என்றும் வாழ அருள்தாரும்.

ஆமென்.