பிழை நினைந்து இரங்கல்.

பாவ அறிக்கைச் செபத்துக்குப் பதிலாக அதைப் பாடலாம்.

நின்னடிக் கன்பு செய்யா சோனேன் ஈசனேயுன்
பொன்னடிக் கன்பு செய்யும் புண்ணியர்குழாத்துட்புக்க
நன்னடை சற்றுமில்லேன் நன்றெலா மொருவி நின்ற
என்னடை யிகந்து மில்லேன் என் செய்வான் றோன்றினேனே.

தன்னுயிர் போலவிந்தத் தடங்கடற் புடவிமேய
மன்னுயிர்க் கிரங்கி மேனாள் மனுமகனாகத் தோன்றி
இன்னுயிர் கொடுத்து ரட்சை தீட்டிய விறையையேத்கி
என்னுயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் றோன்றினேனே.

வன்கணன் படிறன் பொல்லா வஞ்சனென் றிகழ்ந்திடாதென்!
புன்கணுக் கிரங்கியோர் பூம் பொழிலிடைப்புனிதமூர்த்தி
நின்கணீர் சொரிந்துஞ் செந்நீர் நிலத்துக வியர்த்தல் கண்டும்
என்கணீர் சொரியக் காணேன் என் செய்வான் றோன்றினேனே.

சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல வெட்டுணையுமல்லேன்
பித்தனான் பெரிய பாவி பிழைக்குமா றுணர மாட்டேன்
நித்தநீ யருளு மீவை நினைகிலே னன்றி யீனம்
எத்தனை யிறைவனே யானென் செய்வான் றோன்றினேனே.

அழுகிலேன் மனங்கசந்திட் டறியனேன் பிழையையுன்னி
விழுகிலே னின் பாதார விந்தமே கதியென் றேத்தித்
தொழுகிலே னாவியாலே தொடர்பவத் துயிலை நீத்திங்
கெழுகிலே னீசனே யானென் செய்வான் றோன்றினேனே.