20. ஆசை நன்மை உட்கொள்ளுதல்

ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்த உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.

ஆசை நன்மைக்கு ஆயத்த ஜெபம்

என் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே! எனக்கு மிகவும் பிரிய சேசுவே! என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ! என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி! சீக்கிரமாக வாரும். தாமதம் செய்யாதேயும். நீர் ஒரு நாழிகை தாமதம் செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப்போகிறது சுவாமி.

ஆண்டவரே தேவரீர் என் உள்ளத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன். தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லியருளும். என் ஆன்மா குணமடையும். (மூன்று தடவை).