சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - மூன்றாவது நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

விசுவாசிகள், பக்தியுள்ளவர்களின் ஆன்மாக்களுக்காக.

''இன்று பக்திப் பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்துவந்து என் இரக்கச் சமுத்திரத்தில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான பெருங்கடலின் நடுவில் எனக்குக் கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்'' என்றார் சேசு.

இரக்கம் மிகுந்த சேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் உமது அருளை ஏராளமாகப் பொழிகின்றீர். உமது இரக்கம் நிறைந்த இருதயமாகிய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்து போக விடாதேயும். பரமபிதாவிடம் நீர் கொண்டிருந்த, உமது உள்ளத்தைச் சுட்டெரித்த ஆச்சரியமான அன்பைக்குறித்து நாங்கள் இந்த வரப்பிரசாதத்தை உம்மிடம் மன்றாடுகிறோம்.

நித்திய பிதாவே! உமது திருக்குமாரனின் ஞான சரீரத்தின் அங்கங்களாகிய உமது விசுவாசிகள் மீது உமது இரக்கமுள்ள திருக்கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளைப் பற்றி இவர்களுக்கு உமது ஆசீரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக்கொள்ளும். இதனால் இவர்கள் உம்மை நேசிப்பதில் ஒரு போதும் தவறாமல் பரிசுத்த விசுவாசமாகிய பொக்கிஷத்தை ஒருபோதும் இழக்காமல் இருப்பார்களாக. சம்மனசுக்கள் அர்ச்சியசிஷ்டவர்களோடு உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக.

ஆமென்.