சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
நாஸ்திகர், கடவுளை அறியாத மக்களுக்காக.
"இன்று நாஸ்திகர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் கொண்டு வா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நான் நினைத்துக் கொண்டேன். என்னை அறிய வேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இருதயத்துக்கு ஆறுதலாய் இருந்தது. எனது இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர் களை ஆழ்த்திவிடு" என்றார் சேசு.
இரக்கம் நிறைந்த சேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத நாஸ்திகர்களை உமது வரப்பிரசாதம் மிகுந்த உள்ளமாகிய இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும். உமது அருட்கதிர் அவர்களுக்கு ஒளி ஊட்டுவதாக! இவர்களும் எம்மோடு இணைந்து உமது அளவற்ற இரக்கத்தைப் போற்றி ஏற்றுக் கொள்வார்களாக! உமது உள்ளமாகிய இல்லத்திலிருந்து இவர்கள் பிரிந்து போகா வண்ணம் பாதுகாப்பீராக!
நித்திய பிதாவே, இரக்கமிகுந்த சேசுவின் இருதயத்தில் வைக்கப்பட்டுள்ள நாஸ்திகர்மீதும் உம்மை இன்னும் அறியாதவர்கள் மீதும் உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர்களை சுவிசேஷத்தின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை நேசிப்பது எத்துணை இன்பம் என்பதை இவர்கள் அறியார்கள். இவர்களும் உமது இரக்கத் தாராளத்தை ஊழிக்காலமும் வாழ்த்த வரமருள்வீராக!
ஆமென்.