இறந்தோருக்காக ஜெபம்

இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, சாவுக்குரிய எங்கள் உடலுக்கும் நீர் உயிர் அளிப்பவர் என்பதால், இறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக நாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம். உம் திருமகனோடு மகிமையில் உயிர்த்தெழும்படி இவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார்.

விசுவாசத்துடனும் விருப்படனும் இவர் உண்ணும்படி வானக உயிருள்ள அப்பத்தை இவருக்கு அளித்தீர். நாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக செய்யும் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும். சாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து, உயிர்த்தெழும் நாளில் இவர் உம் திருமுன் வந்து சேரவும், உம் புனிதரோடு பேரின்ப மகிமையில் பங்குபெறவும் அருள்வீராக.

உயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே! உம் நண்பர் இலாசரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால் நீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப் புதுவாழவும் மகிமையும் அளித்தருளும். உம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம். உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்கள், யாரும் நினையாத நிலையில் செப உதவி பெற இயலாதாவர்கள், குறிப்பாக ......... (பெயர்) ஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறோம்.

நயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து, உம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே, நாங்கள் அன்பு செய்தவரை இழந்து அழுது புலம்பம் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும். "இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு. இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை. இவருக்காக விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாயிருக்கிறது" என்ற திண்ணமான உண்மையை எண்ணி, நாங்கள் அமைதிபெற அருள்வீராக.

உமது பேரிரக்கத்தால் ஆண்டவரே, இவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும். உம் அடியார் ........(பெயர்) தம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை விரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.