ஆதாமின் சந்ததியில் உதித்த அனைவரிலும் தெரிந்தெடுக்கப்பட்ட கன்னிகையே! இக் கண்ணீர்க் கணவாயில் வருந்தித் தளர்ந்து சோரும் பிரயாணிகளைத் தனது சுகந்த பரிமள வாசனையால் ஆற்றித் தேற்றுவதற்காகப் பரம நந்தவனத்திலிருந்து இப்பரதேசமாகிய பாழ்நிலத்தில் நடப்பட்ட பரோபகார ரோஜா புஷ்பமே! எக்காலமும் வாடா மலர்களின் மெய்யான இராக்கினியே! இறைவனுக்கு உகந்த தாயே! பாவ மரணத்தை ஒழித்துப் பரம வரப்பிரசாத ஜீவியத்திற்கு மனுமக்களை அழைப்பதர்க்காகப் பொம்பே நாட்டில் உமது கருணை வரப்பிரசாத சிம்மாசனத்தை இந்நாட்களில் ஸ்தாபிக்க சித்தம் வைத்தருளின ஆண்டவளே! இரக்கத்தின் தாயாரென்று உம்மைத் திருச்சபை விசுவாசிகள் எல்லோரும் உம்மை அழைத்து வருகிறார்கள். ஆதலால் இதோ உமது தூய பாதத்தில் வரும் ஏழையாகிய அடியேனையும் புறக்கணியாதிருக்க மன்றாடுகிறேன் .
இறைவனுக்கு அத்தியந்த பிரியமுள்ளவர் நீராதலால், உமது மன்றாட்டை அவர் எப்போதும் கேட்டருள்கிறார். ஓ! ஆண்டவளே! உமது அடைக்கலத்தில் ஓடிவரும் எந்த பாவியும், எவ்வளவு தான் துரோகியாய் இருந்த போதிலும் உமது அத்தியந்த மதுரம் நிறைந்த அன்பானது ஒருபோதும் புறக்கணித்துத் தள்ளினதில்லை. பாவிகளுக்கு அடைக்கலமென்றும் பரிந்து பேசுபவரென்றும் உம்மைத் திருச்சபை பெயரிட்டழைப்பது பொருத்தமே .
ஆண்டவரே உமது அளவற்ற இரக்க உருக்கத்தினாலேயே நீர் பாவிகளின் தப்பாத அடைக்கலமும் ஏக நம்பிக்கையும் பரிந்து பேசுபவருமாய் விளங்குகிறீர் . உலகத்தார் அனைவருக்காகவும் இயேசுக்கிறிஸ்து நாதரை ஈன்றெடுத்த தேவ தாயார் நம்மிடத்தில் ஓடி வந்த ஓர் பாவிக்கிரங்காது போனதென்று ஒருபோதும் உலகத்தில் சொல்லப்பட இடங்கொடாதேயும். ஓ ! ஆண்டவளே! இறைவனுக்கும் மனிதருக்கும் உறவு கொண்டாடுவதே உமது வேலை
என் பாவங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிகப் பெரிதாயிருக்கிற உமது கரைகாணாக் கருணையால் எனக்கு இரங்கியருளும். ஓ! மரியாயே! ஜெபமாலை இராக்கினியே! பொம்பே கணவாயில் நம்பிக்கை நட்சத்திரமாய்த் தோன்றுபவளே! என் பேரில் இரக்கமாயிரும். அனுதினமும் அடியேன் உமது பாதத்தன்டையில் வந்து உம்மை நோக்கி அபயச் சத்தமிடுகிறேன். நீரே பொம்பே நாட்டு புதிய ஆசனத்தில் நின்று என்னை கிருபாகடாட்சமாய் நோக்கி அடியேன் மன்றாட்டுக்கு காது கொடுத்து என்னை ஆசீர்வதித்தருளும் ஆண்டவளே!
ஆமென்.