பாத்திமா இராக்கினி பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாத்திமாவெனும் சிற்றூரில் ஆடு மேய்க்கும் பிள்ளைகளுக்கு ஆறு முறை தரிசனையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறு பிள்ளைகளைப் போல் ஆவது மோட்ச இராஜ்ஜியத்துக்கு அவசியம் என்று காண்பிக்க , மூன்று ஏழை பாமர பிள்ளைகளுக்குக் காட்சியளித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமைதியான ஆத்துமத்திலே ஆண்டவர் பேசுகிறார் என்று காண்பிக்க, ஏகாந்தமும் அமைதியும் பொருந்திய மலைச் சாரலில் காட்சியளித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தம்மைத் தேடுகிற மக்களை தேவனும் தேடுகிறார் என்று காண்பிக்க ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்கி ,'மரியாயின் நிலம்' என்று அழைக்கப்பட்ட போர்த்துகல் நாட்டில் தரிசனை கொடுக்கத் திருவுளமான பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபமும் தவமும் கிறிஸ்தவ வாழ்வுக்கு அவசியம் என்று காண்பிக்க பத்து வயதுக்கு உட்பட்ட சிறு பிள்ளைகளிடத்தில் ஜெப தவம் செய்யும்படி கேட்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரட்சண்யமடையவும் உலக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஜெபமாலை ஜெபிப்பது மிகவும் முக்கியம் என்று காண்பிக்க , காட்சி தந்து அனுதினமும் ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோக கடமைகளில் சிக்குண்டிருக்கிற நாங்கள் பரலோகத்துடன் எவ்வித தொடர்பு கொள்ள வேண்டுமானாலும் அதற்குத் தகுந்த ஆயத்தம் அவசியம் என்று காண்பிக்க , அக்குழந்தைகளுக்கு முன்னால், ஒரு தேவதூதனை அனுப்பி ஒரு வருட காலமாய் அவர்களைத் தயாரித்த பாத்திமா மாதவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனை விசுவசித்து ஆராதித்து நம்பி நேசிப்பது ஒவ்வொரு மனிதனுடையவும் கடமை என்று காண்பிக்க , சம்மனசின் முதல் காட்சியிலேயே அதற்கேற்ற அரிய செபம் ஒன்றை எங்களுக்குக் கற்றுத் தந்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடவுளின் திருச்சந்நிதியில் மனிதன் மிகுந்த தாழ்ச்சியுடன் பணிந்து ஆராதனை வேண்டும் என்று காண்பிக்க நெற்றி தரையில் பட அச்செபத்தை சம்மனசானவர் சொல்லும்படி கட்டளையிட்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்தில் இருந்தும் நரகத்தில் இருந்தும் காப்பாற்றும்படி ஆண்டவரிடம்  மன்றாடுவது அவசியம் என்று காண்பிக்க, ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணிமுடிவிலும் அதற்கான ஒரு தனி ஜெபம் சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே,, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒறுத்தல் முயற்சி செய்வது அவசியம் என்றும் எங்களுக்கு இவ்வுலகில் நேரிடும் எல்லாவற்றையும் பாவப் பரிகாரமாக நாங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சம்மனசுக்களின் வாயிலாக போதித்தருளிய பாத்திமா மாதாவே,, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷ போதனைகளையும் திருச்சபையின் படிப்பினைகளையும் நாங்கள் மறந்துவிடாதிருக்கும்படியாக , உங்களுடைய காட்சிகளாலும் உரையாடல்களாலும் கத்தோலிக்க ஞான உபதேசத்தை முழுமையாக போதித்து அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுக்கிறிஸ்து நாதர் உண்மையாகவே திவ்விய நற்கருணையில் இருக்கிறார் என்ற மகா உன்னத சத்தியத்தின் உண்மையை காண்பிக்க அப்ப இரச குணங்களில் நற்கருணையை ஏந்திய சம்மனசானவரை அனுப்பி, அதிலே இயேசுவை அந்த மூன்று குழந்தைகளும் ஆராதித்து அவரை உட்கொள்ளும்படி செய்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ நற்கருணையில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகைப்பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுநாதருடைய திருச்சரீரம், இரத்தம், ஆத்துமம், தேவசுபாவம் எல்லாம் அடங்கி இருப்பதையும் அந்த இயேசுக்கிறிஸ்து உலகத்திலுள்ள எல்லா தேவ நற்கருணைப் பேழைகளிலும் இருக்கிறார் என்பதையும் தேவதூதனின் மற்றொரு ஜெபத்தால் எங்களுக்குப் படிப்பித்தருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நற்கருணையில் தந்தை மகன் தூய ஆவியாகிய கடவுள் ஆராதிக்கப்பட வேண்டும் என்று காண்பிக்க அதற்கென ஒரு மனவல்லிய ஜெபத்தை அம்மூன்று சிறுவர்களுக்கும் உணர்த்தி அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாக நின்தைப்படும் நற்கருணை ஆண்டவருக்கு நிந்தைப் பரிகாரமாக , மிக பரிகார நன்மை உட்கொள்ளும்படி அச்சிறுவர்களைத் தூண்டிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திரு இருதயத்துடன் உங்கள் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட்டு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் சித்தம் என்று கூறி அதற்காக முதல் சனிக்கிழமை பக்தியை ஏற்படுத்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாயின் மாசற்ற இருதயத்துக்காகப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்ச்சியாக 5 முதல் சனிக்கிசமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை utkondu , 53 மணி ஜெபமாலை சொல்லி கால்மணி நேரம் ஜெபமாலை தேவ இரகசியங்களை நினைத்தபடி மாதாவுடன் தங்கி இருப்பதே முதல் சனி பக்தி என்று விளக்கிக் கூறிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாயின் அமலோற்பவம் தெய்வீகத் தாய்மை, எப்போதும் கன்னிமை ஆகிய சிறப்புகளுக்கு எதிராகவும் மாதாவின் பக்தியை அழிப்பதும் மாதாவின் திரு உருவங்களை அகற்றி அவமதிப்பதும் ஆகிய ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரமாகவே 5 முதல் சனி பக்தி என்று இயேசுவே விளக்கிக் கூறும் அளவுக்கு தேவ சலுகைகளைப் பெற்றுள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் , ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்துள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்தின் பலனாக யுத்தம் பஞ்சம் ஆகிய துன்பங்கள் நேருகின்றன என்று கூறி அவற்றை தடுக்க செபமாலையும் தவ முயற்சிகளும் செய்து உங்கள் மாசற்ற இருதய பக்தியைக் கைக்கொள்ளும்படி தூண்டி ,இதுவே பாத்திமா செய்தி என்று உலகிற்கு உணர்த்தி வருகின்ற பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாத்திமா காட்சிகள் கடவுளால் ஆனவை என்று எல்லோரும் நம்பும்படியாக ,1917 அக்டோபர் 13 ஆம் நாளில் 6 ஆம் காட்சியின் போது சூரியனில் மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் இரஷ்யா மனந்திரும்பும், உலக சமாதானம் வரும், இல்லாவிடில் இரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும் , யுத்தங்களையும் வேத கலாபனைகளையும் தூண்டி விடும் என்று எச்சரித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனிதர்கள் போதிய ஜெப தப ஜெபமாலைகள் சொல்லாவிட்டால் இனம் தெரியாத ஒரு ஒளி ஓர் இரவில் தோன்றி அடுத்து வரவிருக்கும் மகா பெரிய ஆக்கினைகளை முன்னறிவிக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ரஷ்யா மனம் திரும்புவதற்கு ஏதுவாக அந்நாட்டைப் பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாப்பரசர் உலக மேற்றிராணிமார்களுடன் சேர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற இயேசுவின் நிபந்தனையை லூசியாவிடம் அறிவித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாங்கள் நம்பிக்கை இழந்து போகாவண்ணம் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெல்லும் பாப்பரசர் ரஷ்யாவை என் இருதயத்துக்கு ஒப்புக் கொடுப்பார் உலக சமாதானம் வரும் என்று கூறி அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்காக ஜெபித்து பரித்தியாகம் செய்ய ஆளில்லாததால் அநேக ஆத்துமங்கள் நரகத்திற்குப் போகிறார்கள் என்று வேதனையுடன் கூறி பாவிகளுக்காக எங்களை மன்றாடத்தூண்டிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான  பாவங்களுக்காகவே அங்கு செல்கிறார்கள் என்று ஜெசிந்தா வழியாகக் கூறி பரிசுத்தத்தனத்தின் மட்டில் எங்கள் கடமையை உணர்த்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாப்பரசரும் திருச்சபையும் கொடுமையாக அலைக்கழிக்கப்படுவதை முன்கூட்டியே அறிவித்து , அதிலிருந்து காப்பாற்றும்படி அதிகமான ஜெப தவம் அனுசரித்து ஜெபமாலையைப் பக்தியுடன் தியானித்து சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக:

தமது ஜீவியத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய பேறுபலனை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி!

அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற புனித கன்னி மரியாளின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர்கள் பாத்திமாவில் அவர்கள் காட்டிய வழியின்படியே நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேற்றை அடையத்தக்கதாக உதவி புரிந்தருளும்.

இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.